எதிர்வரும் ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச்செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க நம்பிக்கை தெரிவித்தார். கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 25 வருடங்கள் பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.
நாட்டின் கரும்புச் செய்கையின் மேம்பாட்டுக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரும்புச் செய்கையில் சிறந்த அறுவடையைப் பெறுவதற்கான நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொக்கும் திட்டம் ஒன்றை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
தற்போது நாட்டில் 15000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கூடுதலான உற்பத்தி மொனராகலை மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றது. கரும்பு உற்பத்தியை மேலும் நான்கு மாவட்டங்களுக்கு வியாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக பயிர்ச்செய்கை தொடர்பான அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.
அதன்படி அம்பாறை, பதுளை, அநுராதபுரம், குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் கரும்புச் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களில் 5 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. கரம்புச்செய்கைக்கு ஏற்ற மண்வளம்கொண்ட வடக்கின் கிளிநொச்சி பகுதியையும் தெரிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை கரும்புச் செய்கையின் இடைக்கால உற்பத்திகளான எத்தனோல் எரிபொருள், உரம் மற்றும் விலங்கின உணவுப் பொருள் உற்பத்திகளை அதிகரிக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
கரும்பு உற்பத்திக்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் நவீன உபகரணங்களையும்; வெளிநாட்டு உயிரி நோய் தடுப்பு நடவடிக்கையையும் அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறான திட்டத்தின் மூலம் இன்னும் 6 வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யலாம் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.