நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒரு சிறுவனும் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.
கடவத்தை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 5 பேர் காயமடைந்துள்ளனர். கடவத்தை 13 ஆவது மைக்கல் பகுதியில் வைத்து பாதுகாப்புப் படையினரின் டிபெண்டர் ரக, வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் போதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி இறந்துள்ளார்.
விபத்துக்குள்ளான டிபெண்டரின் மீது பின்னால் பயணித்த லொறியொன்றும் காரொன்றும் மோதியதில் ஐவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை ஹெட்டன், நோட்டன், பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். குறித்த வாகனத்தின் சாரதி, குடிபோதையில், வாகனம் ஓட்டியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வாகனம் பள்ளத்தில் விழுந்துள்ளதோடு சாரதியின் மனைவியும் மற்றொரு பெண்ணுமே இறந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை கட்டான பகுதியில் வைத்து டிரக்டர் ஒன்றில் மோதி 3 வயதுச் சிறுவர் ஒருவன் நேற்று முன்தினம் இறந்துள்ளார்.
வீதியை கடந்து செல்ல முயன்ற சிறுவன் மீது வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். களுத்துறை மக்கொனை பகுதியில் ஆட்டோ ஒன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விபத்து நேற்று முன்தினம் (17) மாலை இடம்பெற்றது.
இதேவேளை களுத்துறை பகுதி கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் நீராடிக்கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இறந்தவர் பயாகலை, மொரகொட பகுதியை சேர்ந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது.