‘நூல்தேட்டம்’ நூலகவியலாளர் என்.செல்வராஜா : நேர்காணல் ஜெ கவிதா

Selvarajah Nஉங்களைப் பற்றி எங்களுடன்…………….

இலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் தண்டுகம என்ற கிராமத்தில் 20.10.1954இல் பிறந்த நான், நீர்கொழும்பில் என் இளமைக்காலத்தின் 16 வயதுவரை வாழ்ந்தேன். நீர்கொழும்பு விவேகானந்த (விஜயரத்தினம்) மகா வித்தியாலயம், புனித மரியாள் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றேன். எனது தந்தையார் அமரர் வ.நடராஜா, நீர்கொழும்பின் பிரபல P.W.D ஓவர்சியராக இருந்தவர். நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராகவும் ஒரு காலத்தில் பணியாற்றியவர். நிறைந்த நூலார்வம் மிக்கவர். தந்தையாரின் மரணத்தின் பின்னர் நீர்கொழும்பையும் விட்டுப் பிரிந்து, தாயாருடன்; எழுபதுகளில் யாழ்ப்பாணம் சென்று என் உயர் கல்வியைத் தொடர்ந்து, 1976இல் ஒரு நூலகராக உருவாகினேன்.

நூலகவியலாளர்களான எஸ்.எம்.கமால்தீன், கலாநிதி வே.இ.பாக்கியநாதன் ஆகிய உன்னதமான சிற்பிகளால் வடிக்கப்பெற்று இன்று ஒரு நூலகவியலாளனாக ஈழத்தமிழர்களிடையே வலம்வருகின்றேன். இலங்கையில் இருந்த வேளையில், சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் பாடசாலை நூலகராக 1978இல் முதல் நியமனம் பெற்றேன். பின்னர் புங்குடுதீவில் பிராந்தியத் தலைமையகத்தைக் கொண்டிருந்த சர்வோதய சிரமதான இயக்கத்தின் வடமாகாண நூலகராக 1979இல் இணைந்து 1983 வரை அங்கு பணியாற்றினேன். இக்காலகட்டத்தில் 1982இல் ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் சேவையில் (UNDP-UNV) இந்தோனேஷிய நாட்டில் ஒருவருடகாலம் கிராம நூலக அமைப்பினைக் கட்டியெழுப்பும் பணிக்கு சர்வோதய இயக்கத்தின் சிபார்சின் பேரில் சென்றிருந்தேன். பின்னர் இலங்கை உள்ளுராட்சி சேவை நூலகராக – திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை கிராமத்திலும் ஒருவருடகாலம் பணியாற்றினேன். 1983 முதல் 1989 வரை, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு நூலகராக, அங்கு பேராசிரியர் கா.இந்திரபாலா இயக்குநராக இருந்தவேளையில் – பொறுப்பேற்றேன். அவ்வாண்டில் சடுதியாக அவர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற பின்னர் அந்நிறுவனத்தின் இயங்கலுக்கான முழுப்பொறுப்பையும் படிப்படியாக ஏற்று 1989 வரை அந்நிறுவனத்தை யாழ்ப்பாணக் கல்லூரியின் சார்பில் கொண்டு நடத்தினேன்.

விடுதலை இயக்க, அரசியல், மற்றும் போர் நெருக்கடிகள் – குறிப்பாக இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்கள், மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியிலும்- அந்த நிறுவனத்தை வழிநடத்திச் சென்றமை எனக்கு நிறைந்த வாழ்வியல் அனுபவத்தைத் தந்தது. பின்னர் 1989இல் கொழும்புக்கு குடும்பத்துடன் உள்ளகப் புலப்பெயர்வினை மேற்கொண்டிருந்தேன். அங்கும் அமரர் தமிழவேள் இ.க.கந்தசாமி அவர்களின் வேண்டுகோளின்பேரில், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பாரிய நூலகச் சேர்க்கைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் சேவை அடிப்படையில் ஈடுபடலானேன். அதேவேளையில் அமரர் சோமகாந்தனின் அழைப்பை ஏற்று இந்து சமய, கலாச்சார அலவல்கள் அமைச்சின் நூலகத்தினை புனரமைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். அங்கு எனது பணியினை அவதானித்த அமரர் நீலன் திருச்செல்வம் அவர்கள், எனது பணி நிறைவுற்றதும், தான் இயக்கும் International Centre for Ethnic Studies என்ற சமூக ஆய்வியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகராகப் பணியாற்ற அழைப்புவிடுத்தார். அவரது அழைப்பையேற்று சில காலம் அவரது நூலகத்தின் ஒழுங்கமைப்பிலும் பணியாற்றினேன். பின்னர் 1991இல் புலம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வந்து இங்கு நிரந்தர பிரஜாவுரிமைபெற்று, பிரித்தானிய தபால் திணைக்களத்தின் அந்நிய நாணயப் பிரிவில் அலுவலராகப் பணியாற்றி வருகின்றேன்.

அங்கு நூல்தேட்டம் தொகுப்பினை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

லண்டன் வரும் முன்னரே யாழ்ப்பாணத்திலிருந்துகொண்டு “நூல்தேட்டம்” என்ற பெயரில் காலாண்டுச் சஞ்சிகையொன்றை வெளியிடும் பணியில் ஏற்கெனவே 1990இல் ஈடுபட்டிருந்தேன். ஒவ்வொரு இதழிலும் 50 நூல்களைப் பற்றிய சிறு குறிப்பரையுடன் தொகுத்து, தமிழ் நூலகர்கள் அனைவருக்கும் அவை பற்றிய தகவல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது அவாவாக இருந்தது. அவ்வாறாக நூல்தேட்டம் சஞ்சிகையின் இரண்டு இதழ்கள் வெளிவந்தன. பின்னர் நான் கொழும்புக்கு வந்தபோது, அங்கு புத்தகச் சந்தையில் காணப்பெற்ற ஈழத்துத் தமிழ் நூல்களின் எண்ணிக்கையினைப் பார்த்துப் பிரமித்து விட்டேன். அதில் பத்தில் ஒரு பங்கினைக்கூட யாழ்ப்பாணத்தில் நான் அதுவரை அறிந்திருக்கவில்லை.

இலங்கையில் தமிழ் நூலகர்களுக்கு உள்ள பெரும் சவாலாக அமைந்திருப்பது – ஈழத்தவரின் நூல்களைத் தேடிப்பெற்றுத் தமது நூலகங்களில் சேகரிப்பதாகும். ஈழத்துத் தமிழ் படைப்பாளிகள் தமது நூல்களை இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வெளியிட்டு வருகிறார்கள். இவற்றைப் பற்றிய தகவல்கள் ஒருங்குசேர எங்குமே கிடைப்பதில்லை. இலங்கையின் பிரதான நூலகங்களுக்கு அவற்றை அனுப்பிவைக்கவேண்டும் என்ற அக்கறையோ, அந்நூலகங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்ப் புத்தகசாலைகளில் அவற்றை விற்பனைக்கு வைக்கவேண்டும் என்ற ஆர்வமோ அவர்களிடம் பொதுவாகக் காணப்படுவதில்லை. கொழும்பில் எனது பார்வைக்கெட்டிய பெருந்தொகையான நூல்களின் இருப்பைப் பார்த்ததும், எனது நூல்தேட்டம் சஞ்சிகையின் வரவை நிறுத்தி அதனை பாரிய நூல்தொகுதிகளாகவே வெளியிடவேண்டும் என்று தீர்மானித்தேன். சஞ்சிகையாக வெளிவந்து குறுகிய கால வாழ்வுடன் சில நூறு நூல்களை மட்டும் பதிவுசெய்துவிட்டு ஒதுங்கிவிடாது, ஒரு காத்திரமானதும் முழுமையை நோக்கியதுமான ஆவணத்தொகுப்பாக அதை உருவாக்கி எமது இனத்தின் பார்வைக்கும்- உலகத்தின் பார்வைக்கும் வைக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். புலம்பெயர்வாழ்வின் குடும்பப் பொருளாதார நிலையும், குடும்பத்தினரின் மேலான ஆதரவும் எனக்குச் சாதகமாயிற்று. ஒவ்வொரு தொகுதியும் 1000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டதாக இத்தொகுப்பு பரிணாமம் பெற்றது. இன்று ஆறாவது தொகுதியில் வந்து நிற்கின்றது. அதாவது 6000 நூல்களைத் தொகுத்துவிட்ட திருப்தியுடனும், இன்னும் எத்தனையோ ஆயிரங்கள் தொகுக்கப்படவேண்டி இருக்கின்றனவே இவை என் வாழ்நாளில் சாத்தியமாகுமா என்ற ஏக்கத்துடனும் உங்கள் முன் நிற்கின்றேன்.

ஈழத்துத் தமிழ் நூல்களுக்கு மாத்திரம் தான் நூல்தேட்டமா அல்லது அண்டை நாட்டு தமிழ் நூல்களுக்கும் அதனை விஸ்தரித்திருக்கிறீர்களா?

நூல்தேட்டத்தின் மூன்றாவது தொகுதியின் தொகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்திருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் ஒரு தமிழ் நூலகம் இருப்பதாகவும் அங்கு பல அறியப்பெறாத ஈழத்தவர்களின் நூல்கள் பாதுகாக்கப்பெற்றிருப்பதாகவும் அறிந்து அங்கு சென்றேன். மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் தான் அமரர் தனிநாயகம் அடிகளார் பணியாற்றினார். அங்கிருந்து தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை ஒழுங்குபடுத்தினார். அத்தகைய பெருமை பெற்ற அந்த நூலகத்தில் நான் பல ஈழத்தவர்கள் மலாயா மண்ணில் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோது வெளியிட்ட தமிழ் ஆங்கில நூல்களை பார்வையிட நேர்ந்தது. அவர்கள் பற்றி எந்தவொரு ஈழத்து இலக்கிய ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருக்கவில்லை. இதைப்பற்றி ஒரு விரிவான கட்டுரையும் எழுதியிருந்தேன். அது தினக்குரலில் தொடராக 1.5.2005 முதல் 22.5.2005 வரை நான்கு வார இதழ்களில் வெளிவந்திருந்தது.

அங்கு நான் ஆய்வில் ஈடுபட்டிருந்த வேளையில் என்னைச் சந்தித்த இந்திய ஆய்வியல்துறைத் தமிழ்ப்பிரிவின் தலைவர், மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் போன்றோர், மலேசிய சிங்கப்பூர் தமிழ் நூல்களுக்கும் ஒரு நூல்தேட்டத் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டிருந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் என்ற தலைப்பில் தனியான ஒரு தொகுதியை 2000 நூல்கள் பற்றிய குறிப்புகளுடன் வெளியிட்டிருந்தேன். ஈழத்து நூல்தேட்டம் போலல்லாது, மலேசிய நூல்தேட்டம் வெளியிட நான் செலவிட்ட பணத்தொகை அந்நூல்களின் விற்பனைமூலம் ஒரு வருடத்திலேயே பெற்றுக்கொள்ள முடிந்தது. தற்போது அதன் இரண்டாவது தொகுதியின் தொகுப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றேன்.

மலேசிய நூல்தேட்டம் போன்றே தனித்தொகுதியாக ஈழத்தமிழரின் ஆங்கில நூல்களின் குறிப்புரையுடன் கூடிய தொகுப்பாக ஆங்கில மொழியிலமைந்த நூல்தேட்டம் (Noolthettam) தொகுதியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு (2009) இறுதிக்குள் அந்நூல் உலகெங்கிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஈழத்தமிழர் பற்றிய- அவர்கள் இலங்கையின் பல்வேறு கட்டமைப்புகளுக்கு சிங்கள அறிஞர்களுடன் இணைந்து ஆற்றிய பணிகள் பற்றிய தகவல்களை தமிழர் அல்லாதவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்.

நூல்தேட்டம் தொகுப்பு முயற்சி பொருளாதார ரீதியில் உங்களுக்கு திருப்திகரமாக அமைந்துள்ளனவா?

எனது அனுபவத்தின்படி ஈழத்தமிழரான எம்மவர்களிடம் ஒரு பாரிய குறைபாடு உள்ளது. கவலைக்குரிய விடயமும் அதுதான். தமக்குத் தனிப்பட்ட முறையில் அல்லாது, தமது சமூகத்துக்கு பொதுவாக நன்மை பயக்கவேண்டிய எதையும் மற்றவர்களே தமது செலவில் செய்யவேண்டும் என்று கருதுவதுடன், தாம் பார்வையாளராகவும் விமர்சகர்களாகவும் மாத்திரம் இருப்பதே வசதி என்று நினைப்பது அந்தப் பண்பாகும். இன்றுவரை எந்தவொரு தனிமனிதரோ, பொது, சமூக, அறிவியல் நிறுவனங்களோ எனது நூல்தேட்டம் தொகுப்புப் பணியின் பொருளாதாரப் பழுவை தாம் கூட்டாக ஏற்க முன்வரவேயில்லை. குறைந்த பட்சம் ஈழத்து படைப்பாளிகள் ஒவ்வொருவரும் நூல்தேட்டத்தின் பிரதிகளை புத்தகசாலைகளில் விலைகொடுத்து வாங்கியிருந்தால், அல்லது இலங்கையிலுள்ள தமிழ் நூலகங்கள் அனைத்தும் தமது நூலகங்களுக்காக அதனை உசாத்துணை நூலாக வாங்கிப் போட்டிருந்தால்கூட அது மறைமுகமாக எனது பணிக்கு உதவுவதாகவே அமைந்திருக்கும்.

இன்றைய யதார்த்த நிலை என்னவென்றால், நூல்தேட்டம் தொடங்கப்பெற்று ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையிலும், இன்றும் நூல்தேட்டத்தின் பிரதிகள் விற்பனை செய்யமுடியாமல் தேங்கிக் கிடப்பதாக பூபாலசிங்கம் பத்தகசாலை அதிபர் சிறீதர் சிங் தெரிவித்தார். அவரது கணக்கின்படி ஒவ்வொரு தொகுப்பிலும் 100 பிரதிகள் வரை கையிருப்பில் உள்ளன. இது மிக அண்மைக்கால கணக்கு. இவை உடனுக்குடன் விற்பனையாகியிருந்தால் இன்று நான் தடங்கலின்றி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையான தொகுதிகளைப் பதிவுசெய்திருப்பேன். எனது இந்த ஆவணவாக்கத்தின் முக்கியத்துவம் பற்றி இந்த நேர்காணலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தமது மனச்சாட்சியை ஒரு தடவை கேட்டுக்கொண்டால், எனது உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

இங்கிலாந்தில் நூலக ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்க முனைவதாக பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிகின்றோம். அவ்வாறு ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனை உங்களுக்கு எவ்வாறு உருவானது?

நூல்தேட்டம் தொகுப்பு பரவலாக எம்மவரால் உள்வாங்கப்படும் போதெல்லாம், இந்த நூல்தேட்டத்தில் பதிவிலுள்ள ஆவணங்களை நீங்கள் சேர்த்து வைத்திருக்கிறீர்களா என்ற கேள்வி என்னையே நோக்கி எழுப்பப்படுவது வழக்கம். அவர்களின் வேண்டுகோளை எற்று, மேலதிக முயற்சியொன்றை அண்மைக்காலத்தில் மேற்கொண்டுள்ளேன். நூல்தேட்டம் பதிவுக்காக நான் எழுத்தாளர்களிடமிருந்தும், வெளியீட்டகங்களிடமிருந்தும் அன்பளிப்பாகவும், சில சமயங்களில் விலைகொடுத்தும் பெற்றுக்கொண்ட நூல்கள் சுமார் 3000 வரையில் என்னிடம் சேர்ந்துள்ளன. அதைத் தவிர தனிப்பட்டவர்களின் சேர்க்கைகளும் இங்கு லண்டனில் ஆங்காங்கே சேர்த்துவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஓரிடப்படுத்தி அவற்றை ஒரு ஆவணக்காப்பகமாகவும், ஆய்வு நிறுவனமாகவும் பேணவேண்டும் என்ற ஆவல் என்னுள் மேலெழுந்ததால் எனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கடந்த மே 2009இல் European Tamil Documentation and Research Centre என்ற தலைப்பில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளேன். ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் என்று தமிழில் அதை அழைக்கலாம். இது பிரித்தானிய அரசின் தர்மஸ்தாபன அமைப்பாகவும் பதிவுசெய்யப்பட்டு, அதற்கு தனியான நடைமுறை வங்கிக் கணக்கொன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் நிதி வருவாயுடன் இந்த அமைப்பினை நாம் கட்டியெழுப்ப அனுமதி சட்டபூர்வமாக கிட்டியுள்ளது.

இன்று ஈழத்தமிழர் தொடர்பான நூல்களும், அவர்கள் படைத்த நூல்களும் உலகெங்கிலுமிருந்து தமிழ் உள்ளிட்ட வௌ;வேறு மொழிகளில் வெளியாகியுள்ளன. இவை அனைத்தையும் இங்கு ஓரிடத்தில் பார்ப்பதென்பது மிகக் கடினம். பிரித்தானிய நூலகம், சொயாஸ் நூலகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலகங்கள் என்பன ஓரளவு இலங்கை தொடர்பான நூல்களை சேகரித்துப் பாதுகாத்து வைத்திருந்தாலும் அவை இறுக்கமான அங்கத்துவக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் பொதுவான வாசகரால் அவற்றை சுதந்திரமாகப் பார்வையிட முடிவதில்லை. இந்நிலையில் எமக்கென்றொரு ஆவணக்காப்பகம் தேவை.

மற்றது, இன்று தமிழர்கள் மாத்திரம் தான் இலங்கைத் தமிழர் பற்றியும் அவர்களின் சமயம், அரசியல், கலை, கலாச்சாரம், வரலாறு பற்றியும் அறிய ஆர்வம் காட்டுகிறார்கள் என்றில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை உலகளாவிய கவன ஈர்ப்பினைப்பெற்று விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் உலகில் பலரும் இலங்கை பற்றியும் இலங்கைத்தமிழர் பற்றியும் ஆர்வம் கொண்டவராகக் காணப்படுகிறார்கள். அவர்களது ஆய்வுக்கும், அறிவுக்கும் வேண்டிய தகவல்களை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்கவேண்டியது முக்கியமான ஒரு பணியாகக் கருதுகின்றேன். அதனையும் நாம் வழங்காமல் இலங்கை அரசாங்கமே தானாக முன்வந்து வழங்கும்வரை காத்திருப்பதும் அதன்பின் விமர்சனம் செய்வதும் பொருத்தமானதா?

அடுத்தது இங்கு வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழப் பிள்ளைகள் தாம் ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டுத் தேசிய மொழிகளில் கல்வி பயில்கிறார்கள். எதிர்காலத்தில் எமது இனம் பற்றிய வாழ்வியலையும் வரலாற்றையும் தமிழில் அல்லாது பிற மொழிகளில் தான் அவர்கள் பரிமாறப்போகிறார்கள். இதுவே யதார்த்தம். அவர்களின் தேவைக்காகவும் தமிழில் அல்லாத ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் தமிழர் பற்றிய ஆவணங்களைத் தேடிப் பாதுகாத்துவைத்து வழங்க வேண்டியதும் எமது கடமையாகின்றது.

இவை அனைத்தினதும் கூட்டுவெளிப்பாடாகவே இந்த ஆவணக்காப்பகத்தின் உருவாக்கம் பற்றிய சிந்தனை என்னுள் உரம்பெற்றது என்று சொல்லலாம்.

நிறுவனமாக செய்யப்பட வேண்டிய ஒரு முயற்சியை தனித்து, இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் எப்படி உங்களால் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது?

இவை அனைத்தும் விதிவசத்தாலும், எம்மவரின் பாராமுகத்தினாலும் சலிப்புற்று, அவமே காலம் கரைவதனால் வேறு வழியின்றி, தனித்துச் செய்கிறேனேயல்லாது, இது தனி ஒருவனால் செய்து முடிக்கக்கூடிய காரியமல்ல. காலக்கிரமத்தில் எம்மவர் உணர்ந்து எனக்குத் தோள் கொடுப்பார்கள் என்றும், எனக்குப் பின் அடுத்த தலைமுறையொன்று எனது பணியைத் தொடரும் என்றும் நிறைந்த நம்பிக்கைகளுடன்தான் எனது பயணத்தைத் தொடர்கின்றேன். இதனை ஒரு பாரிய பணிக்கான அத்திவாரமாகவே நான் கருதுகின்றேன்.

உங்களின் இந்த முயற்சிக்கு புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு எப்படி உள்ளது?

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் புலம்பெயர்தலுக்கும், அகதி அந்தஸ்தினைப் பெறுதலுக்கும், அங்கு வளத்துடன் வாழ்வதற்கும், தமது சமூக அந்தஸ்தினை உயர்த்திக்கொள்வதற்கும் தேவையான தேர்ந்த நடவடிக்கைகளில் மட்டுமே அக்கறை கொள்வதில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். -இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். பொதுவானதொரு நீண்டகாலத் திட்டத்தில்- வருவாய் ஈட்டாத ஒரு சமூக நலத்திட்டம் என்று எம்மவரிடம் எதுவுமே இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கு நிதி கொடுத்தால் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் புலத்திலும், புகலிடத்திலும் எல்லாம் தானாக நடக்கும் என்ற நம்பிக்கையில் பணத்தை வழங்குவதுடன் தமது கடமை முடிந்ததாகக் கருதித் திருப்திப்பட்டுக்கொள்ளும் அப்பாவிகளே அதிகம்.

புகலிடத் தமிழர்கள் கோவில்களைக் கட்டினார்கள். கடைகளை, வர்த்தக நிறுவனங்களைப் பெருக்கினார்கள், பாடசாலைகளைத் தொடங்கினார்கள். இவை அனைத்தும் ஒரு வகையில் பொருளாதார வருவாயை அடிப்படையாகக் கொண்டே கட்டி எழுப்பப்பட்டன. இவ்வமைப்புகளைச் சுற்றியுள்ளவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானவர்கள், புலம்பெயர் தமிழர் மத்தியில் பகிரங்கமாக பொதுமேடைகளில் தலை காட்டாதவர்கள்;. இதனால் ஒரு பாரிய பிரிவு மறைமுகமாக எம்மிடையே ஏற்பட்டு வருகின்றது. பொருளாதார வளம் மிக்கவர்கள் பொதுநலத் திட்டங்களிலிலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றார்கள். பொது நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செயற்பட முனைபவர்கள் பொருளாதார பலமற்று தனிமைப்படுத்தப்பட்டு கைவிடப்படுகின்றார்கள். இங்குள்ள கோயில்கள் ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான நிதி வருவாய் கொண்டவை. அவை இணைந்து முன்வந்தால் இந்தப் புலம்பெயர் நாடுகளில் பாரிய சாதனைகளை செய்து முடித்திருக்கலாம். ஆனாலும் இன்றுவரை எந்தவொரு கல்விசார் ஆவணக்காப்பகமோ, ஆய்வு நிறுவனமோ ஏன் தமிழ் நூலகமோ இந்தச் சமூக அமைப்புகளால் புகலிடத்தில் சிறப்பாக வளர்த்தெடுக்கப்படவில்லை. அப்படி ஒன்றிரண்டை நான் இனம்காட்டக் கூடியதாக இருந்தாலும் அது தனிப்பட்ட ஒரு சிலரின் தியாகத்தாலும், கனவாலும் கட்டியெழுப்பப்பட்டவையாகவே உள்ளன.

இம் முயற்சிகளுக்கு ஈழத்தவர்களின் ஆதரவு போதுமானளவு கிடைக்கின்றதா?

எனது ஆவணக்காப்பக முயற்சி பற்றி இலங்கை ஊடகங்களில் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுவரை எவரும் அணுகவில்லை. இலங்கையிலிருந்து ஆவணக்காப்பகத்திற்கு பணத்தை எதிர்பார்க்கவில்லை. விலைகொடுத்து வாங்க இயலாத ஏராளமான நூல்கள், சஞ்சிகைகள், சிறப்பு மலர்கள், அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் அங்கு தேங்கிக்கிடக்கின்றன. அவை தனிப்பட்டவர்களிடம் சேகரிப்புகளாக இருக்கின்றன. அவற்றை உரியவர்கள் விரும்பினால் கொழும்பிலேயே ஒப்படைத்து இங்கு அவற்றை பாதுகாப்பாக அனுப்பிவைப்பதற்கான எளிய நடைமுறைகளையும் குறிப்பிட்டிருந்தேன். எதிர்காலத்தில் அவற்றை இலங்கையில் பாதுகாப்பதா, லண்டனில் பாதுகாப்பதா என்ற சிக்கலான கேள்விக்கு விடைதேட முடியாதவர்களாக அவர்கள் இருக்கக்கூடும். முடிவை அவர்கள் தான் எடுக்கவேண்டும். தமது சேர்க்கைகளில் ஒரு பகுதியை- அல்லது மேலதிகப் பிரதியொன்றை ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் என்ற எமது அமைப்புக்கு அனுப்பிவைப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணரும் பட்சத்தில் எம்முடன் தொடர்புகொண்டால் அவற்றை எமது செலவில் இங்கு எடுப்பிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

ஈழத்து எழுத்தாளர்கள், புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களது நூல்கள் மாத்திரமா? அல்லது ஏனைய நாட்டு எழுத்தாளர்களது நூல்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன?

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகத்தில் ஆய்வுத் தேவைக்காக பேணிப்பாதுகாப்பதற்காக இலங்கையிலும் உலக நாடுகளிலும் வெளியிடப்பட்ட ஈழத்தமிழர்களினது தமிழ் ஆங்கில நூல்கள் பாதுகாப்பப்படும். மலேசிய-சிங்கப்பூர் தமிழர்களின் நூல்களும் இங்கு சிறப்புச் சேர்க்கையாக பாதுகாக்கப்படுகின்றன. அத்துடன் இலங்கையிலும் தமிழகம் உள்ளிட்ட உலக நாடுகளிலும் ஈழத்தமிழர் பற்றி வெளிவந்த தமிழ், ஆங்கில, சிங்கள நூல்களும் பாதுகாத்து வைக்கப்படும். இவை தவிர ஈழத்துச் சஞ்சிகைகள், சிறப்பு மலர்கள், பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதி என்பனவும் பாதுகாக்கப்படுகின்றன.

நூல்களாகவே இவை இங்கு பாதுகாக்கப்படுகின்றனவா? அல்லது இணையத்தளத்தில் மாத்திரம் பாதுகாக்கப்படுகின்றனவா?

பெரும்பாலும் நூலுருவிலான ஆவணங்களும், ஒலி-ஒளிப்பதிவுகளும் இறுவட்டுகளும் பாதுகாக்கப்படுகின்றன. ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் இறுவட்டுகளாகப் பாதுகாக்கப்படுகின்றன. துண்டுப்பிரசுரங்கள் கூட இன்றைய காலத்தில் எமது வரலாற்றுப் பதிவுகளாகிவிட்டன. அவையும் எம்மிடம் உள்ளன. இவ்விடத்தில் நூல்களை இணையத்தில் பாதுகாக்கும் நடவடிக்கையில் நேரடியாக இயங்காதபோதிலும், நூலகம் டொட் நெற் (Noolaham.net) இணையத்தளத்தின் இணைய நூலகத்திற்கான முக்கிய பயனீட்டாளர்களாக ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம் இயங்கும். எமது இனத்தில் ஒரு குழு மேற்கொள்ளும் மிக முக்கிமான பணியை வளர்த்தெடுக்க உதவுவது, அதைப் போன்ற மற்றொரு இணைய நூலகத்தை உருவாக்கிச் செயற்படுத்தவதைவிட சிறந்ததென்று கருதுகின்றேன்.

இங்கு நூல்கள் என்ன முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன?

காப்பகத்தின் நூல்கள், ஆவணங்கள் அனைத்தும் டூவி டெசிமல் பகுப்பாக்க முறையில் பகுப்பாக்கம் (Dewey decimal Classification – DDC) செய்யப்பட்டு கணணியேற்றம் செய்யப்பட்டுள்ளன. நூல்தேட்டம் பதிவும் இம்முறையைத் தழுவியே பகுப்பாக்கம் செய்யப்பட்டுள்ளதை அவதானித்திருப்பீர்கள். இன்று தேசிய நூலகம் உள்ளிட்ட இலங்கையின் பொது நூலகங்கள் அனைத்தும் இவ்வகைப் பகுப்பு முறையினையே பின்பற்றுகின்றன. ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம் ஒரு ஆவணக்காப்பகமும் ஆய்வு நிறுவனமுமேயன்றி ஒரு பொது நூலகம் அல்ல. எனவே இங்குள்ள நூல்கள் closed access முறையிலேயே பாதுகாக்கப்படும். வெளிப்படையாக தட்டுகளில் ஒழுங்கமைக்கப்பட்டு யாரும் எந்நேரமும் தமது விருப்பப்படி எடுப்பதும், வீட்டுக்கு எடுத்துச் செல்வதும் சாத்தியமாக இராது.

புலம் பெயர் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள் எவ்வாறு உள்ளன?

புகலிடங்களில் வெளிவந்த பெரும்பான்மையான கதை, கவிதை நூல்கள் போராட்டம் சார்ந்த இலக்கியங்களாகவே இருந்தன. தாம் புலம்பெயர்ந்த மண்ணின் இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வருவதும், தமிழில் தாம் எழுதிய படைப்புக்களை புகலிடத்துத் தேசிய மொழிகளில் கொண்டுவருவதும் ஆங்காங்கே இடம்பெற்றுமிருந்தன. ஆயினும் அவை முனைப்புப் பெற்றிருக்கவில்லை. முன்னைய காலங்களைப் போலல்லாது போரியல்சார்ந்த படைப்பிலக்கியங்கள் வெளிவருவது மே 2009இன் பின்னர் நின்றுவிட்டன. இப்போது தான் ஆங்காங்கே ஒன்றிரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நான் அடிக்கடி குறிப்பிடும் விடயம் – தமது படைப்பகளை நூலுருவில் காண்பதுடன், வசதி குறைந்த ஈழத்துப் படைப்பாளிகளின் நல்ல படைப்புகளைப் பெற்றுப் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபடுங்கள் என்பதாகும். எனது வேண்டுகோள் இடைக்கிடையே நிறைவேற்றப்பட்டிருப்பினும் அதில் போதிய வேகம் காணப்படவில்லை. இனிவரும் காலங்களில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படலாம். இப்பொழுது புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினரும் தமது படைப்பிலக்கியப் பணிகளில் முகம்காட்டுகின்றனர். இவர்களின் படைப்புக்கள் புதியதொரு அனுபவத்தை எமக்கு வழங்கும்.

இன்றைய எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

எழுத்தாளர்களுக்கு என்ன எழுதவேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று ஆலோசனை கூற நான் அருகதை அற்றவன் என்பதே எனது தாழ்மையான கருத்து. நான் ஒரு படைப்பாளியோ எழுத்தாளனோ அல்ல. ஏதோ எழுதுகின்றேன். மற்றும்படி நான் ஒரு நூலகவியலாளன். நூலியல் சார்ந்த விடயங்களில் நான் தாராளமாகக் கூறலாம். குறிப்பாக ஒரு நூலை எழுதும்போது அதன் வடிவமைப்பு, விநியோகம் பற்றியும் அக்கறை செலுத்துங்கள். வெறும் வெளியீட்டு விழாக்களையும், சுற்று வட்ட நண்பர்களையும் மாத்திரமே கருத்தில் கொள்ளாதீர்கள். அது உங்கள் படைப்புக்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே வைத்திருக்கும். ஊர் கடந்து, நாடுகடந்து அந்நியரின் கைகளுக்குள் அது செல்லவேண்டும். அப்போது தான் அது புதிய வாசகர்களை உங்களுக்குத் தேடித்தரும். உங்களை நாடி எவராவது வரவேண்டும் என்று எதிர்பார்த்து கைகளில் புத்தகத்துடன் காத்திருக்காதீர்கள். உங்கள் நூல்களில் ஒரு சில பிரதிகளையாவது அது வெளிவந்ததும் உங்களைப்பற்றிய குறிப்புகளுடன் சேர்த்து புகலிட ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தால், உங்கள் நூல் பற்றிய செய்தி வெளியாருக்கும் பரவ வாய்ப்பு ஏற்படும். புலம்பெயர் தமிழ் ஊடகம் பாரியது. உங்கள் நூல் பற்றிய விபரங்களை ஐரோப்பிய வாசகர்களிடம் என்னாலும் எடுத்துச் செல்லமுடியும். அதற்கு என்னுடனான உங்கள் தொடர்பு அவசியம்.

ஈழத்துப் படைப்புக்களை உங்களால் உடன் பெற்றுக்கொள்ள முடிகிறதா?

இல்லை என்பதே வேதனையான பதில். ஈழத்துப் படைப்புகள் யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, மலையகம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து வருகின்றன. அவை வெளிவந்த சுவட்டினைக்கூட நாம் அறிய முடிவதில்லை. ஒன்றிரண்டு நூல்கள் பற்றி பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவரும் அறிமுகச் செய்திகளை வைத்து நூலாசிரியரின் முகவரி கிடைக்குமிடத்து அவருக்கு கடிதம் எழுதுவது எனது வழக்கம். பெரும்பாலான நூல் அறிமுகங்களில் இந்தத் தொடர்பு முகவரி காணப்படுவதில்லை. இது கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலையையே எம்மவர்களுக்குத் தோற்றுவிக்கும். ஒரு நூலை அறிமுகப்படுத்துபவரின் நோக்கம் வெறுமனே அந்நூல் பற்றித் தெரிவிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடுவதில்லை. அந்நூல் வாசகரின் கைகளை அடைவதற்கும் அது ஒரு பாதைவகுத்துத் தரவேண்டும். அதற்கு ஏற்ப நூலாசிரியரின் முகவரி அவசியம் பதிவுபெற வேண்டும்.

குமரன் புத்தக இல்லம், சேமமடு பொத்தகசாலை ஆகிய வெளியீட்டகங்கள் தாம் அச்சிடும் நூல்களில் ஒவ்வொரு பிரதியை எனக்குத் தவறாமல் அனுப்பி வைக்கிறார்கள். பிற வெளியீட்டகங்களும் எனது நூல்தேட்டப் பதிவுப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படவேண்டும். வெறும் வியாபாரிகளாக மாத்திரம் எம்மவர்கள் இருப்பது கொடுமையாகும். லாபீர், அந்தனி ஜீவா, ஞானம் ஆசிரியர்- கலாநிதி ஞானசேகரம் போன்றோரும், யாழ்ப்பாணத்திலிருந்து கவிஞர் முருகுவும், யாழ்.பல்கலைக்கழக நூலகர் கல்பனா சந்திரசேகர் போன்றோரும் தாமாக முன்வந்து நூல்களைச் சேகரித்து எனக்கு அனுப்பிவைக்கிறார்கள். இவை தவிர நான் வீடுவீடாக, ஊர் ஊராக, நாடுகடந்து சென்று தான் நூல்கள் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எனது இந்த வரிகளை வாசிக்கும் எழுத்தாளர்கள், நூல் ஆர்வலர்கள் தாம் வாசிப்பதை ஒரு கணம் நிறுத்திவைத்துவிட்டு சிந்தித்தால் அவர்களால் எனது தேடலுக்கு மிக எளிதில் உதவ முடியும். ஒரு தேசிய நூலகம் சட்டபூர்வமாகச் செய்யவேண்டிய பணி இது. உலகில் எங்குமே தமிழ்ப் படைப்புகள் முழுமையாகப் பதிவுபெறாத நிலையே இன்று காணப்படுகின்றது. ஈழத்தமிழரின் படைப்புக்கள் அந்நிலையிலிருந்து விலகி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற தீவிரஉணர்வு கொண்டவர்கள் ஒரு சிலராவது எனக்கு உதவலாம் அல்லவா?

உங்களால் எழுதப்பட்ட நூல் முயற்சிகள்?

ஈழத்து நூல்கள் மாத்திரமல்லாது, மலேசிய சிங்கப்பூர் நூல்கள் பற்றியும் அதன் படைப்பாளிகள் பற்றியும், நூல் வெளியீடுகள் பற்றியும், நூலகவியல் பற்றியும் ஏராளமான கட்டுரைகளை இதுவரை இலங்கையிலும் புகலிட நாடுகளின் ஊடகங்களிலும் எழுதிவந்திருக்கிறேன். பிரித்தானிய தமிழ் வானொலியான ஐ.பீ.சீயில் காலைக்கலசம் என்ற நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியம் மற்றும் நூல் வெளியீடுகள் பற்றி 2002ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றக்கிழமைகளிலும் 15 முதல் 20 நிமிடங்கள் உரையாடி வருகின்றேன். ஞானம், சுடரொளி போன்ற சஞ்சிகைகளில் எனது பத்தி எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் அவ்வப்போது பல்வேறு உலகத் தமிழ் சிற்றேடுகளிலும் இணையத்தளங்களிலும் மீள்பிரசுரம் கண்டும் உள்ளன. நூல்களைப் பொறுத்தவரையில் 28 நூல்கள் வரையில் எழுதியிருக்கிறேன். அண்மையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு ஞானம் சஞ்சிகையின் வெளியீடாக “வேரோடி விழுதெறிந்து” என்ற தலைப்பில் எனது 20 கட்டுரைகள் கொண்ட நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலங்கையிலேயே அச்சிட்டு விநியோகிக்கப்படுவதால், இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களில் தாராளமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முயற்சிகளுக்காக நீங்கள் பெற்றுக்கொண்ட விருதுகள்………….?

எனது இலக்கியப் பணிக்காக 2004இல் கனேடிய நாட்டில் ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழர் தகவல் நிறுவனம் “தமிழர் தகவல்”; விருதினை வழங்கிக் கௌரவித்திருந்தது. 2005இல் உடத்தலவின்னை சிந்தனை வட்டம் அமைப்பினால் திரு பீ.எம்.புன்னியாமீன் அவர்கள் “இலக்கிய வித்தகர்” விருதினை வழங்கி கௌரவித்திருந்தார். இவை தவிர பல்வேறு நாடுகளுக்கும் நான் நூல்தேடல் பணியினை மேற்கொண்டு செல்லும் போதெல்லாம் அவ்வந்நாட்டு தமிழ் இலக்கிய அமைப்புகள் என்னை வரவேற்று உபசரித்து பாராட்டுவதுடன் நூல்களைத் தேடியும் வழங்கிவருகின்றன. சுய அறிமுகம் ஏதுமின்றிப் பெறப்படும் இந்த அங்கீகாரமே பெரிய விருதாகக் கருதுகின்றேன்.

ஆவணக் காப்பகம் தொடர்பாக எதிர்காலத்தில் செயற்படுத்தவென எத்தகைய திட்டங்களை முன்வைத்துள்ளீர்கள்?

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம் ஒரு தனியான கட்டடத்தில் சுதந்திரமாக செயற்படவேண்டும் என்பதே எனது கனவாகும். இதற்கு ஈழத்தமிழர்கள் நூல் ஆதரவும், புலம்பெயர் தமிழர் நிதி ஆதரவும் வழங்கினாலேயே என் கனவு மெய்ப்படும். இக்கனவு எனக்கானதொரு சுயநலக்கனவல்ல. எமது அடுத்த தலைமுறையினருக்கு எமது தேட்டத்தை விட்டுச்செல்ல என்ன நடவடிக்கைகளை நாம் எமது காலத்தில் எடுத்தோம் என்று சுயவிமர்சனம் செய்துகொள்ளும் ஒவ்வொரு புத்திஜீவியின் கனவுமாகும். இதற்கான வழி-அடிப்படையில் நிதி ஆதரவிலேயே தங்கியுள்ளது. ஆகக் குறைந்தது 500 பேர் மாதம் 5 பவுண் செலுத்தும் அளவு வளர்ந்தால், பிரித்தானிய அரசே எமக்கு பல வழிகளில் உதவும் வாய்ப்புள்ளது. இரண்டு லட்சம் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நிலையில் பிரித்தானியாவில் இன்றைய தினத்தில் எமது வேண்டுகோள்கள் அனைத்தும் தீவிரமாக மக்களைச் சென்றடையவில்லை. இன்றைய இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் திடீர் முடிவு அவர்களை நிலைகுலையச் செய்திருக்கலாம். எதிர்காலத்தில் சிறிய அளவிலான கருத்தரங்குகளை ஒழுங்குசெய்து புத்திஜீவிகள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவிருக்கிறோம். இதற்கு தமிழறிஞர் ஐ.தி.சம்பந்தன் போன்றோர் உதவி வருகின்றனர். தற்போது ஆங்கிலத்தில் வெளிவரவுள்ள நூல்தேட்டம் தொகுப்பினை ஆவணக்காப்பக வெளியீடாகவே பிரசுரிக்கவுள்ளோம். தமிழர் அல்லாதவர்களிடையே இக்காப்பகச் செயற்பாடுகள் பற்றிய தெளிவான தகவல் ஒன்றினை இந்நூல் எடுத்துச் செல்லும் என்று நம்புகின்றோம். கணிசமான நிதி வருவாயினையும் இது எமக்குப் பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம்.

ஈழத்து எழுத்தாளர்கள் எவ்வாறு உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்?

தமிழ் எழுத்தாளர்கள், நூல் ஆர்வலர்கள் மற்றும் ஆவணக்காப்பகத்தின் உருவாக்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவ முன்வருபவர்கள் என்னுடன் மின்னஞ்சல் வழியாகவோ. தொலைபேசி வழியாகவோ கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்: selvan@ntlworld.com
தபால் முகவரி: Mr. N.Selvarajah, ETDRC, 48 Hallwicks Road, Luton LU2 9BH, United Kingdom..
தொலைபேசி இலக்கம்: 0044 1582 703786
இலங்கையில் தமது நூல்களை வழங்க விரும்புவோர் தொடர்பிற்கு:
Mr. V.T.Rajaram, C/1/6 Veluvanarama Flats, Off Hampden Lane, Wellawathe, Colombo

இந்நேர்காணல் தினக்குரல் பத்திரிகைக்காக எடுக்கப்பட்டது. இந்நேர்காணல் 27 09 2009 – 04 10 09 இதழில் வெளிவந்தது. (நன்றி தினக்குரல்)

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *