பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது

211009proelanco.jpgபுதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிப் பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது! ஒரு இலட்சம் தொகையும், சான்றிதழும் குடியரசுத்தலைவர் வழங்வுள்ளார் !

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு “இளம் அறிஞர் விருது”வை நேற்று அறிவித்துள்ளது. இவ்விருதுக்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர்மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன.சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.

 முனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.மாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள்(2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ்பெற்றனவாகும்.
 
சங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்டதால் வெளிநாட்டு அறிஞர்கள் இக்கட்டுரையை உயர்வாக மதிக்கின்றனர்.சங்க காலப் பாரியின் நண்பர் கபிலர் உயிர் துறந்த இடம் தென்பெண்ணையாற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்பதையும் வெளியுலகிற்குக் கொண்டுவந்தார்.சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசையைப் பற்றி முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கி வழங்கிய பெரும் பணியில் ஈடுப்பட்டவர்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கூத்து,இசை பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்தவர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றின் முதற் பதிப்புகளை மின்னூலாக்கி இணையத்தில் வழங்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்.சங்க இலக்கியப் புலவர்கள்,சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் ஒருங்குகுறி வடிவில் வெளியிட்டு வருகிறார்.அவ்வகையில் சங்க இலக்கிய ஆய்விலும் பதிப்பிலும் ஈடுப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.வே.கோபாலையர், வீ.ப.கா. சுந்தரம், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தில் வெளியிட்டவர்.

சங்க இலக்கிய ஆய்வுகளை இணையம் வழியாக அடுத்த கட்டத்திற்கு உலக அளவில் எடுத்துச் செல்பவர் மு.இளங்கோவன்.எனவே இவர் ஆய்வு முயற்சிகளை இலண்டன் கோல்ட்சுமிது பல்கலைக்கழகம்,மலேசியா பல்கலைக்கழகம்,புத்ரா பல்கலைக்கழகம்(மலேசியா), சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைகழகம்,இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்அறிஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

 இது தவிர உலக அளவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மு.இளங்கோவனின் இலக்கியம்,இலக்கணத்தை இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். 

மு.இளங்கோவன் இதுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார்.இவற்றுள் இரண்டு நூல்கள் இவர் பதிப்பித்த நூல்களாகும்.உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ளார்.தேசிய அளவில் 42 கட்டுரைகளும்,இலக்கிய இதழ்களில் 79 கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழகத்தின் முன்னணி ஏடுகளான தினமணி,தமிழ் ஓசை, செந்தமிழ்ச்செல்வி, சிந்தனையாளன், கண்ணியம் உள்ளிட்ட ஏடுளிலும் திண்ணை, தட்சுதமிழ்,  தமிழ்க்காவல், மின்தமிழ், பதிவுகள்,வார்ப்பு உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுதிவருபவர்.

 சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்து உலக அளவில் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை,முதுகலை தமிழ் படித்தவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தவர். முனைவர் பட்ட ஆய்வினைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “பாரதிதாசன் பரம்பரை” என்ற தலைப்பில் நிகழ்த்தி முனைவர்பட்டம் பெற்றவர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இந்திய நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இப்பொழுது பணிபுரிந்து வருகிறார்.இவரின் பிறந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர் ஆகும்.

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் தேசம்நெற்றின் வாழ்த்துக்கள்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *