பத்து எம்.பீ.க்களைக் கொண்ட தமிழக எம்.பீ.க்கள் குழுவின் ஐந்து நாள் வருகை எழுப்பிய சலசலப்புகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் தமிழகத்திலும், இலங்கையிலும், இலங்கையின் தமிழ் மக்களின் வாழ்விடங்களிலும் வருகை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. தி.மு.க.வைச் சேர்ந்த ஐந்து பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர், சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல்.திருமாவளவன் ஆகியோரே இலங்கைக்கு வந்து போன பத்து எம்.பீ.க்களாவர். கடந்த ஒன்பதாம் திகதி இலங்கை மண்ணில் கால் பதித்தார்கள். கடந்த பதினான்காம் திகதி தமிழகம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். இலங்கையில் தங்கியிருந்த நாட்களில் கப்சிப் பென வாய் பொத்திக் கருத்துக் கூறுவதைத் தவிர்த்தமை, அவர்கள் கட்டுப்பெட்டிகளாகவே இங்கு வருகை தந்திருப்பதை உணர்த்தியது. தமிழகம் திரும்பி, தமது வருகை தொடர்பான ஒன்பது பக்க அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் கையளித்தனர். அதற்கு முன்னதாக முதல்வரே சென்னை விமான நிலையம் சென்று தமிழகக் குழுவை வரவேற்றமையும் ஒரு வகையில் அர்த்தம் பொதிந்த ஒன்றுதான். சென்னை விமான நிலையத்திலும் கூட ஊடகவியலாளர்கள், தமிழக எம்.பீ.க்களின் வாயைக் கிளற படாதபாடு பட்டார்கள். சர்வமும் கப்சிப் மயமாகவே கழிந்து போனது.
ஒன்பது பக்க அறிக்கையின் சாராம்சத்தைச் சொன்னபோது மட்டும் கலைஞர் வாயைத் திறந்தார். இலங்கையின் வடபகுதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 58 ஆயிரம் தமிழர்கள் இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார். ஏனையவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்களென்று இலங்கை அரசு உறுதியளித்திருக்கிறது என்றும் சொன்னார். 58 ஆயிரம் பேரை விடுவிப்போமென்று சொல்லவே இல்லை என்று மறுத்தலித்தார் அமைச்சர் யாப்பா அபேவர்த்தன. இலங்கை விவகாரங்கள் தொடர்பாகப் பேசவல்ல அரசாங்க அமைச்சர் அவர்.
சுமார் 1,30,000 பேரை இம்மாத முடிவுக்குள் மீளக் குடியமர்த்தி விடுவோம் என்று உறுதியளித்திருக்கிறார் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ். வவுனியா மெனிக்பாம் முகாமுக்குத் தமிழக எம்.பீ.க்கள் குழு சென்றிருந்தபோது திருமதி சார்ள்ஸைக் கண்ணீர் விட்டழ வைத்தார் டி.எஸ்.பாலு என்று இந்தியப் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன. அதனைச் சில இலங்கைப் பத்திரிகைகள் மறு பிரசுரம் செய்திருந்தன. டி.எஸ்.பாலு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரம்புதூர் தொகுதி எம்.பீ. ராஜீவ் காந்தி புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாரியினால் கொல்லப்பட்ட இடம் ஸ்ரீபெரம்புதூர். இதே டி.எஸ்.பாலுதான் தமிழகக் குழுவுக்குத் தலைமை தாங்கி வந்தார். இலங்கையின் பல இடங்களில் கேள்வி கேட்க முனைந்த ஊடகவியலாளர்கள் மீது எரிந்து விழுந்தாரென்றும் இலங்கைப் பத்திரிகைகள் சில இவர் மீது எரிந்து விழுந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சந்திப்பொன்றின்போது யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சண்முகலிங்கத்தை இவர் பேசவிடாமல் தடுத்தாரென்றும் யாழ் பத்திரிகைகள் பொரிந்து தள்ளியிருந்தன.
இலங்கைக்கு வந்த குழு, இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு. அது சர்வகட்சிக் குழுவல்ல. தமிழக மாநில ஆளும் கூட்டணியின் சார்புக்குழு. தமிழக எம்.பீ.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விடுத்த வேண்டுகோளை அடியொற்றியே இந்தக் குழு இலங்கை வந்தது. எனவே தமிழக எம்.பீ.க்கள் குழுவின் வருகையை வெறும் கண்துடைப்பு நாடகமென தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இப்படித்தான் புலி இயக்க ஆதரவாளர்களான வைகோ, ராமதாஸ், பழ நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். புலிகளுக்காகவே அண்மைக் காலம்வரை ஆர்ப்பரித்து வந்த சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவனும் வாயைத் திறக்க மறுத்தமையும் கவனத்துக்குரிய விடயம்தான். நீங்கள் பிரபாகரனுடன் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருப்பீர்கள் என்று திருமாவளவனிடமே கைநீட்டிச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி சொன்னாரென்று கூட செய்திகள் வெளிவந்தன. அது வெறும் பகிடி என்று திருமாவளவனும் பின்னர் தமிழகச் செய்தியாளர்களிடம் பகிடி விட்டிருக்கிறார்.
இலங்கை, இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கிடையில் ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தமிழக எம்.பீ.க்களின் இலங்கை வருகை அமைந்திருந்தது என்பதற்கு அவர்கள் அளவோடு கருத்துகளைக் கூறியமை குறிப்பிட்டுக் காட்டுகிறது. இதனை வெளிப்படையாகவே இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் புதுடில்லிச் செய்தியாளர்களிடம் அண்மையில் தெரிவித்திருந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மீள்குடியேற்றம் தொடர்பில் நெருங்கிய உறவு உள்ளதாக நிருபமாராவ் தெரிவித்திருந்தார். இதற்கும் மேலாக தமிழக எம்.பீ.க்கள் குழு சமர்ப்பித்த ஒன்பது பக்க அறிக்கை முகாம்களிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் அவதிகளை அச்சொட்டாக வெளிப்படுத்தியிருந்தது. எந்த ஒளிவுமறைவுமின்றி முகாம் மக்களின் கஷ்டங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. முகாம்களிலுள்ள மக்களை விடுதலை செய்யுங்களென்ற வார்த்தைப் பிரயோகமே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் சிங்கள அரசு தமிழ் மக்களை முட்கம்பிச் சிறைக்குள் தள்ளிக் கொடுமைப்படுத்துகிறது என்றும் தமிழகக் குழு கண்டிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமே. தமிழ் தேசியத்தை முன்தள்ளும் இலங்கை, இந்திய ஊடகங்களின் கருத்துகளில் இந்த எதிர்பார்ப்பின் தோல்வியைக் காண முடிந்தது. இதைப் போன்றே இலங்கை அரசைத் தமிழகக் குழு கண்டிக்க வேண்டுமென்று எதிர்பார்த்த இலங்கை மற்றும் தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் கிடைத்தது ஏமாற்றமே.
தங்கக்கூடு என்றாலும் அடைத்து வைப்பது நியாயமல்ல என்ற தமிழக முதல்வர் வெளிப்படுத்திய அதே ஆதங்கத்தை தீர்க்கும் முயற்சியில்தான் இந்திய, தமிழக அரசுகள் ஈடுபட்டிருக்கின்றன. கண்ணிவெடி அகற்றல் என்று சிங்கள அரசு சொல்வது, வேண்டுமென்றே புலிகள் என்று சந்தேகப்படுபவர்களைக் கொல்வதற்குத்தான். முகாமில் மெல்ல, மெல்ல சித்திரவதைப்படுவதை விட தங்களது இடம் நோக்கிச் செல்கையில் கண்ணிவெடியில் உயிர் துறப்பதே மேல் என்றுதான் முகாமிலுள்ள தமிழர்கள் கருதுகின்றனர் என்று நடிகர் விஜயகாந் கருத்துத் தெரிவித்திருந்தார். தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவரான இந்த நடிகர், இலங்கைத் தமிழர்களை வைத்துத் தமிழகத்தில் அரசியல் நடத்த முனைகிறார் என்பதைத்தான் இவரது கருத்துகள் காட்டுகின்றன. இதைத்தான் அனைத்துத் தமிழக மற்றும் இலங்கை எதிர்க்கட்சிகளும் நடத்த முனைகின்றன.
புலிகள் தோற்கடிக்கப்பட்டமைக்கு இலங்கை ஜனாதிபதியினதும் இலங்கைப் படைகளினதும் உத்தி மட்டும் காரணமல்ல. அமெரிக்காவும், இந்தியாவும் அளித்த உதவிகளும் காரணம்தான். பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் வெளிப்படையாகவே ஆயுத உதவிகளை வழங்கின. அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளின் ஆயுதக் கடத்தல் பற்றிய புலனாய்வுத் தகவல்களை அனுப்பியதோடு, தத்தமது நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் இலங்கைக்கு உதவின.
பயங்கரவாத அமைப்புகள் என்று கூறப்படுவவை அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் பிந்திய கொள்கை. அதேநேரம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதும் இந்திய மத்திய அரசின் எதிர்பார்ப்பாகும். இதுவே தமிழக அரசின் பொறுப்பும், கடமையும் எதிர்பார்ப்பும். அதனைத்தான் தமிழகத்திலிருந்து வந்த எம்.பீ.க்களின் குழு செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக இலங்கை அரசு முகாம்களிலுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மேலும் ஐநூறு கோடி ரூபாவை இந்திய அரசு அளிக்கவுள்ளது. சர்வதேச சமூகமும் மீள்குடியேற்றத்துக்கெனத் தாராளமாக உதவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. முகாம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்ந்ததும் இலங்கைத் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்கு இந்தியாவும், தமிழகமும் அழுத்தம் கொடுக்கும். அதுவே நடக்கப் போகிறது. நந்திக்கடலில் செத்துப்போன புலிகளுக்கு இனியும் இந்தியா ஒக்சிசன் கொடுக்காது.
அண்டை நாடான சீனாவோடு உறவுகளைச் சுமுகமாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. சீனாவுக்கும் அந்த நோக்கம் இருக்கிறது. இருந்தாலும் இரு நாடுகளுக்குமிடையிலும் பிரச்சினைகளும் இருக்கின்றன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைக் கொண்ட பிறிக் (BRIC) என்ற அமைப்பிலும், ஆறு நாடுகளின் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் இந்தியாவும் சீனாவும் அங்கம் வகிக்கின்றன. இதேவேளை அருணாசலப் பிரதேசம், காஷ்மீரின் சில பகுதிகள் உட்பட எல்லைப் பிரச்சினையும் இரு நாடுகளுக்கிடையிலும் இருக்கின்றன. இரு நாடுகளும் ஐக்கியமாகச் செயற்பட விரும்பினாலும் பிரச்சினைகளும் இருக்கின்றன. அண்டை நாடாள இலங்கையில் செல்வாக்கைச் செலுத்துவது என்பது இந்தியா, சீனா இரு நாடுகளுக்குமே முக்கியமானதாகும். எனவேதான் இலங்கைக்கு நான் முந்தி, நீ முந்தி என்று இந்தியாவும் உதவுகிறது. சீனாவும் உதவுகிறது. இதனால்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவும் அடக்கி வாசிக்கிறது. தமிழகமும் அடக்கி வாசிக்கிறது.