கிழக்கு மாகாண ஆளுனருக்கும், ஆளும் தரப்புக்குமிடையிலான முறுகல் உச்சகட்டம் – நஜிமிலாஹி

ep-map.jpgஅதிகாரங்கள் மனிதனை முதன்மைப்படுத்துகிறது. அதிகாரமுள்ள மனிதன் முன் சகலதும் அடிமைதான் என்பதுதான் இன்றைய உலக அரசியலாக காணப்படுகிறது. இந்த அரசியல் எமது நாட்டுக்கும் புதுமையானதல்ல. அரசியல் என்ற சொல்லாடல் உச்சரிக்கப்படும் பொழுது அது அதிகாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு அதன் தன்மையைப் பிரதிபலிக்கும் முகமாகவே இருக்கிறது. இந்த அதிகாரங்கள் என்ற வார்த்தை தற்போது கிழக்கு மாகாண சபையில் சூடான ஒரு விவாதப் பொருளாக மாறியிருப்பவதை நாம் அவதானிக்கலாம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படி மாகாண சபைகள் உருவாக்கம் இலங்கை அரசியல் அமைப்பில் இடம்பெறுகிறது. இந்தியாவிலிருக்கும் மாநில அரசாங்க முறைக்கு ஒத்ததாக இலங்கையில் மாகாண சபைகள் கொண்டுவரப்பட்டன. இருந்தாலும் இந்திய மாநிலங்களுக்கும்,  இலங்கை மாகாணங்களுக்குமிடையில் அதிகாரங்களை ஒப்பிட்டு நோக்கும் பொழுது இந்திய மாநிலங்கள் பலமானதாக காணப்படுகிறது. இருந்தாலும் இலங்கைப் பிரச்சினையை தணிக்கும் முகமாகக் கொண்டுவரப்பட்ட படியால் இலங்கை மாகாண சபைகளுக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மாகாண சபைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறுபான்மை சமூகம் குறிப்பாக தமிழர்கள் தங்களது உரிமைகளை படிப்படியாக பெற்றுக்கொள்வதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் 13ம் அரசியல் சீர்திருத்தத்தின்படி மாகாண சபைகள் அரசாங்கமுறை புகுத்தப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள்.

ஆனால் இந்த வழிமுறைக்கு உடன்பட மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மாகாண அரசாங்க முறைக்கு தங்களது கடும் எதிர்ப்பை பிரயோகித்தார்கள். இந்த அரசாங்க முறையை இலங்கைக்குக் கொண்டுவந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை புலிகள் கொன்று சர்வதேச ரீதியாக மாகாண அரசாங்க முறையை தாங்கள் எதிர்பபதாக பிரபாகரன் தமது அரசியல் நகர்வை மேற்கொண்டார்.

கடைசியில் பிரபாகரனின் தோல்விக்கும் மாகாண அரசாங்க முறை முக்கிய புள்ளியாக அல்லது கருவாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இலங்கைக்கு மாகாண அரசாங்க முறையை கொண்டு வந்தவர் கொலை செய்யப்பட்டு இரு தசாப்தங்களின் பின்னர் மாகாண அரசாங்க முறையை எதிர்த்தவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே,  ஆரம்பம் தொடக்கம் இன்று வரையும் மாகாண அரசாங்க முறைமை இலங்கை அரசியலில் முக்கிய பங்காளியாக காணப்படுகிறது.

இந்த வகையில் 21 வருடங்களின் பின் ஏற்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண சபை தற்போது அதிகாரங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளதை நாம் அவதானிக்கலாம். கிழக்கு ஆளுனர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதால் மாகாண சபையை சுயமாகக் கொண்டு நடாத்த முடியாத நிலை எழுந்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது.

221009eastern-provincial.jpgஆளுனர் முதலமைச்சர் உட்பட அமைச்சர்களுக்கு கூடுதலான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் இதனால் கிழக்கு மாகாண மக்களுக்கு மாகாண சபையால் எதுவிதப் பயனும் கிடைக்காமல் போகும் என்ற மனப்பதிவுடன் கிழக்கு மாகாண அமைச்சர்கள் சோர்ந்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜயவிக்கிரம கிழக்கு மாகாண சபையினை தீர்மானிக்கும் சக்தியாக தென்படுகிறார். இதனை அவரே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரம் ஆளனரின் அதிகாரங்களின் கோடிட்டுக் காட்ட வேண்டிய பந்தியாகும்.

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் அவர்களின் செயலாளராக கடமையாற்றிய மாமங்கராஜா முதலமைச்சரின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 60 வயதைக் கடந்ததால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் முதலமைச்சர் ஆளுனரிடம் மாமங்கராஜாவை இன்னும் 02 வருடங்களுக்கு பதவி நீடிப்பு செய்யுமாறு கேட்டு ஆளுனர் அதற்கான அனுமதியைக் கொடுக்க மறுத்துள்ளார். அதேபோன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகக் கடமையாற்றிய தயாபரன் என்பவரை ஆளுனர் இடைநிறுத்தம் செய்துள்ளார். இவ்வாறான சம்பவங்களால் முதலமைச்சருக்கும் ஆளுனருக்குமிடையிலான நிர்வாக முறுகல்கள் ஏற்பட்டுள்ளன.

221009hisbullah.jpgஅதேபோன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அதிகாரம் தொடர்பில் அடிக்கடி ஆளுனரிடம் முரண்பட்ட நிலையில் காணப்படுகிறார்.  ஒரு சாதாரண சுகாதார தொழிலாளியை நியமிக்கும் அதிகாரம் தனக்குதான் உண்டு என ஆளுனர் செயற்படுகிறார். இவ்வாறு அனைத்து துறைகளிலும் ஆளுனரின் தலையீடு இருப்பதாக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுனரின் தலையீடு அமைவதால் ஏனைய மாகாண சபைகளுக்குள்ள அதிகாரம் கூட கிழக்கு மாகாண சபைக்கு இல்லை என்று அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை அதிகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளால் கிழக்கு அபிவிருத்திகள் கூட பின்தள்ளப்படலாம் அல்லது காலம் நீடித்து செல்லலாம் என்ற கருத்தும் தற்போது காணப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தமது சேவைகளை வழங்க முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை விட ஆளுனர் பலசாலியாக இருப்பது மாகாண சபை நிர்வாகத்தை கொண்டு நடத்துவதில் பல முட்டுக்கட்டைகள் ஏற்படும் என்ற கருத்தில் கிழக்கு மாகாண சபை ஆளுந்தரப்பு உள்ளது.

13ம் அரசியல் சிர்திருத்தத்தின்படி கொண்டுவரப்பட்ட மாகாண சபை அரசாங்க முறைமையின் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது ஆளுனர் தொடர்பானது ஏனெனில் மக்களின் விருப்புக்கு அப்பாற்பட்டவராக ஆளுனர் காணப்படுகிறார். மாகாண சபையின் எதிர்பார்ப்புக்கள் ஆளுனரின் மிதமிஞ்சிய அதிகாரத்தினால் இல்லாமல் போய்விடுகிறது. எனவே அதிகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் சர்ச்சைகள் எழுந்தவாறு உள்ளன.

ஆளுனருக்கு எதிராக கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் செய்தபோதும் அதனை அறிந்த ஆளுனர் தனக்கு எதிராக மாகாண சபை செயற்பட முன்வந்தால் நான் 24 மணித்தியாலத்துக்குள் சபையைக் கலைத்து விடுவேன் என எச்சரித்துள்ளார். இதனால் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் ஆளனரின் எச்சரிக்கைக்குப் பயந்து தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டு காலத்தைக் கடத்தும் நிலையில் காணப்படுகிறார்கள். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் செல்லாக் காசாகவே இருக்கிறார்கள்.

மாகாண சபையைக் கலைத்தால் அடுத்த தேர்தலில் தமது நிலையை நினைத்துப் பயந்துபோய் காலத்தைக் கடத்துகிறார்கள் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் குழாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    ’….இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் செல்லாக் காசாகவே இருக்கிறார்கள்….’

    ஸ்ரீலங்காவின் அரசியல் ‘அரிவரி’ அறியாதவர்களாக இருக்கிறார்கள்!

    Reply
  • பல்லி
    பல்லி

    பலே பலே சரியான போட்டி;
    யார் வெற்றியடைந்தாலும்
    அம்மான் மகிழ்ச்சி அடைவார்;
    அதனால் அரசும் அறுவடை செய்யும்;

    Reply
  • விசுவன் 1
    விசுவன் 1

    பழைய குருடா கதவை திறவடா! தமிழ் மக்களின் அரசியல் அபிலஷைகள் தீர்க்கபடாது போனால் மீண்டும் மக்கள் போராட நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அதிகாரங்கள் மத்தியில் இருந்து மாகாணங்களுக்கு பகிர்ந்தளிப்பதுடன் அவர்கள் சுதந்திரமாக கடமையை செய்ய மறுப்பது மிக மோசமான ஒரு அடக்குமுறை! மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கதியே இவ்வாறு என்றால் சாதாரண குடிமக்கள் கதி?

    Reply