யுத்தத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி அதிஷ்டலாப சீட்டில் கிடைத்த வெற்றியல்ல- ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவிப்பு

இராணுவத்தின் இந்த வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது. அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும் என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது சுமார் 5200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் படையினரில் 28000 பேர் காயமடைந்தனர். இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்திருக்காவிடின் என்னதான் இராணுவ தளபதியாக இருந்தாலும் , அரசியல் வாதியாக இருந்தாலும் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கமுடியாது என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள விகாரையொன்றுக்குச் சென்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

நான் முதன் முறையாக பௌத்த விகாரையொன்றில் உரை நிகழ்த்துகின்றேன். அதிலேதும் பிழை இருந்தால் மன்னிக்கவும். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நான் என்ன நினைக்கின்றேன்? என்பது குறித்து இந்த விகாரையின் பிரதம தேரர் தர்மசிறியுடனான சந்திப்பின் போது தெளிவுபடுத்தினேன். அங்கு இதுவரையிலும் என்ன நடந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டும் என்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடினோம். அமெரிக்காவுக்கு நான் கடந்தமுறை வந்திருந்தபோது என்னைச் சந்தித்த சிலர் இன்றும் இவ்விடத்தில் கூடியிருக்கக் கூடும். அன்று நான் அவர்களிடம் என்ன உறுதியளித்தேன் என்று அவர்களுக்கு தெரியும் . இந்த வருடத்துக்குள் அதாவது 2009ஆம் ஆண்டுக்குள் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று நான் அன்று அவர்களிடம் உறுதியளித்தேன். அந்த உறுதிமொழியின் பிரகாரம் அதனை கடந்த மே மாதம் 18 ஆம் திகதி நிறைவேற்றினேன். அதற்காக நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டிற்குள் ஊடுருவியிருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ வழிசமைக்கக்கூடிய நாடொன்றாக உருவாக்குவோம் என்னும் உறுதியினை நிறைவேற்றினோம்.

உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்காக நாம் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டோம். இந்த வெற்றி மிக இலகுவாகப் பெறப்பட்டதல்ல. அதற்காக பெரும் கஷ்டங்களைச் சந்தித்தோம். தைரியமாகச் செயற்படுவதற்காக பல பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டோம். அதன்மூலமாகவே இந்த வெற்றி கிட்டியது. நாட்டிலுள்ள பெருமளவானோருக்கு இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்ததொன்றாகத் தோன்றுகிறது. அதனால் தான் அந்த வெற்றியைப் பங்கிட்டுக்கொள்வதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். யுத்த வெற்றி தொடர்பில் பலரும் பலவற்றை பேசுகின்றனர். ஆனால் அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும்.

வெற்றியை எவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் பெற்றுக் கொண்டோம் எனும் உண்மையை அவர்கள் மாத்திரமே அறிந்திருக்க முடியும். அதிலும் விஷேடமாக இராணுவத்தினரே அறிந்திருக்க முடியும். இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு தொடர்ப்பில் இந்த இடத்தில் நான் தெரிவிக்காவிட்டால் அது எனது சேவைக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

யுத்த காலத்தின் போது இராணுவத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் இணைந்துகொண்டனர். அத்தொகையினர் இணைந்திருக்காவிடின் நாம் இன்னமும் வவுனியா பிரதேசத்திலேயே நின்றுகொண்டிருந்திருப்போம். அங்கிருந்து முன்னோக்கிச் செல்ல முடியாது போயிருக்கும். பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஆசிர்வாதம் மற்றும் கௌரவம் போன்றவையே எமது வெற்றிக்கு ஊன்றுகோலாக விளங்கியது.

இராணுவத்தில் இணைந்துகொண்டவர்களில் சுமார் 80ஆயிரம் பேர் இன்னமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய 20 ஆயிரம் பேர் விடுமுறை இல்லாமையால் விட்டு சென்றிருக்கலாம். இராணுவத்தில் இணைந்துகொண்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாவிடின் என்னதான் இராணுவ தளபதிகளாக அல்லது அரசியல்வாதிகளாகவே இருந்திருந்தாலும் இந்த வெற்றியினை அடைந்திருக்க முடியாது. இந்த காலகட்டத்திற்கு முன்னரும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் யோசனை இருந்தது. இருப்பினும் வருடத்துக்கு 3000 பேரையேனும் இணைத்துக்கொள்ள முடியாது போயிற்று. ஆனால் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது வருடத்துக்கு 40ஆயிரம் பேர் இராணுவத்தில் புதிதாக இணைந்துகொண்டனர் அதுவும் நாம் பெற்றுக்கொண்ட வெற்றி என்றே கூறவேண்டும்.

யுத்த வெற்றியின் போது புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார், அதனால் அனைத்தும் முடிந்துவிட்டது எனக்கூறி சந்தோசமாக காலத்தை கழிப்பதை நாம் விரும்பவில்லை. பிரபாகரன் என்றொருவர் இருக்கவில்லை. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர் உருவாக்கப்பட்டார். இதனை மறந்துவிடுவதற்காக எமது பிரஜைகள் கடந்த 30 வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டனர். நாம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டதுடன் சவால்களுக்கும் முகம்கொடுத்தோம். அவற்றிலிருந்து விடுதலைபெற எவ்வளவு கஷ்டப்பட்டோம். அர்ப்பணிப்புக்களை செய்தோம் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

எமது அர்ப்பணிப்புகளை இந்த பரம்பரையினர் மறந்தால் அடுத்த பரம்பரையினர் கட்டாயமாக இவ்வாறான பிரபாகரன்களை சந்திப்பார்கள் என்பது எனது அதீத நம்பிக்கையாகும். அதனால், தேரர் என்னிடம் சொன்னது போன்று அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஒற்றுமையை கட்டிக்காப்பது மிக மிக அவசியமாகும். அவ்வாறாயின்,அனைத்துத் தரப்பினரும் அனைவரது தேவைகளையும் கருத்திற் கொண்டு எல்லாப் புறத்திலிருந்தும் வரும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு உண்மையானவர்களாக செயற்பட வேண்டும். அப்படி நடந்தால் தான் எமது நாட்டை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

எம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகளை நாம் சரிவர செய்து வருகின்றோம். சீருடையணிந்த ஜெனரல்கள் இந்த சேவையிலேயே இருந்து விடமுடியாது. நான் ஓய்வு பெறும் வயதையும் தாண்டி மேலதிகமாக 4 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். இருப்பினும் நாடு முழுமையானளவில் பயனடைந்து விட்டது என்று கூறுவதற்கில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதால் நாட்டின் பாதுகாப்பு 100 வீதமாக முழுமையடைவில்லை. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதன் மூலமே பயங்கரவாதம் எனும் நோய்க்கிருமி மீண்டும் நுழைய விடாமல் தடுக்க முடியும். நலன்புரி முகாம்களில் தற்போது தங்கியுள்ள பொதுமக்களுடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் தங்கியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை மீளக் குடியேற்றி அவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதால் மட்டுமே நாம் வெற்றிகொண்ட யுத்தத்தில் வெற்றியை கண்டோம் என்று மகிழ்ச்சியடைய முடியும்.அதனால் அந்த கொள்கையை நோக்கி நாம் பயணிக்கவேண்டும்.

நாட்டின் அபிவிருத்திக்கும் பாதுகாப்பிற்கும் எடுக்கக்கூடிய நடவடிக்கை இருக்குமாயின் நாட்டின் பிரஜை என்றவகையில் அதனை நடைமுறைப்படுத்துவது அவர்களின் கடமையாகும். பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி தொடர்பில் கதைத்தே காலத்தை கழிப்பதை விட எதிர்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும்.

யுத்த காலத்தின் போது நாட்டின் எதிர்காலம் குறித்து கவலையுற்றவாறே எதிர்வரும் காலங்களிலும் நாடு தொடர்பில் கவனம் செலுத்தி அதனை சரியான திசையில் கொண்டு செல்வதா? அல்லது கொண்டு செல்லவேண்டுமா? நாட்டிற்கான பாதுகாப்பை வழங்குவதா? என்பது தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். அதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்றினோம் என்ற திருப்தியை அனைவரும் உணரவேண்டும்

வீரகேசரி நாளேடு 10/29/2009

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    ஆசை யாரை விட்டது. ஜனாதிபதியாக வேண்டும் என்ற மோகம் பொன்சேகாவின் கண்ணை மறைக்குது.
    புலிகள் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்று படுகாயமடைந்த பொன்சேகா இன்று புலிகளின் நண்பன் ரணிலின் வலையில் விழுந்து தன்னை சல்வேசன் ஆமியை கூட வழிநடத்த முடியாத ஆள் என்று கூறிய மங்கள் சமரவீரவின் ஆசியுடன் ஜனாதிபதி கதிரையில் குந்த பேராசைப்பட்டு தன தேசநலனை மீறிய தனநலமிக்க சுயரூபத்தை அம்பலப்படுத்தி புலிகளை ஒழித்ததில் வான் படைக்கும் கடற்படைக்கும் உள்ள பங்களிப்பையும் மறந்து ரணில் சந்திரிகா டீபீவிஜேதுங்க காலத்தில் செய்ய முடியாத புலிஒழிப்பு எவ்வாறு இத்தனை வெளிநாட்டு சக்திகளின் கடுமையான அழுத்தங்களுக்கும் மத்தியிலும் எவ்வாறு நடைபெற்றது என்றால் அது ராஜபக்சேயின் சாணக்கியமும் சாதுரியமும் அதி விவேக துணிவும்தான் காரணம் என்பதையும் மறந்து போர் நடக்கும் போது இலங்கை சிங்களவருக்கே சொந்தம் என இனவாதம் பேசிய பொன்சேகா இன்று இன்னொரு பிரபாகரன் உருவாகக் கூடாது என்று பிரபாவின் நண்பன் ரணிலின் கையை பிடித்து ஜனாதிபதி கதிரையில் குந்தலாம் என்ற பொன்சேகாவின் கனவு விரைவில் பொன்சேகாவை அமெரிக்க பிரஜை ஆக்குவதில் முடியும்.

    Reply