புலமைப் பரிசில் பரீட்சை – வவுனியா நிவாரண கிராமங்களில் 507 மாணவர்கள் சித்தி : புன்னியாமீன்

000181009.jpgதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா நிவாரணக் கிராம மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் 31.10.2009 இல் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின்படி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 5413 மாணவர்களுள் 507  மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். முல்லைத்தீவு,  கிளிநொச்சி மாவட்டங்களில் மாணவர்கள் கூடிய புள்ளிகளாக 175 புள்ளிகளைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

வட மாகாணத்தின் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக 2009 ஜுன் மாத புள்ளி விபரப்படி தரம் 05இல் கல்வி பயிலும் 4872 மாணவர்கள் வவுனியா நிவாரணக்கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டனர். இம்மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்திற் கொண்டு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்டமாக ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது. இத்திட்டம் ஒரு நிவாரணக் கிராமத்தை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து நிவாரணக் கிராமங்களையும் கருத்திற் கொண்டே செயற்படுத்தப்பட்டது.

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்திருந்த மாணவர்கள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் பாடசாலை மண்ணையே மிதிக்காமலிருந்தனர். இந்த மாணவர்களை துரிதமாகப் பயிற்றுவிக்கும் வகையிலேயே சிந்தனைவட்டம் தேசம்நெற் கல்வி நிவாரண செயற்றிட்டம் அமைந்திருந்தது. எமது வழிகாட்டிப் புத்தகங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவித்தமையினால் 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இத்திட்டத்தை ஆரம்பிக்கும்போது 300 மாணவர்கள் சித்தியடைந்தால் போதுமென்ற இலக்கில் தான் நாம் ஆரம்பித்தோம். நாம் எதிர்பார்த்ததை விட மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது.

2009 ஆகஸ்ட்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 2 லட்சத்து 98,000 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் 31,000 மாணவர்களே சித்தியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். 2009 ஒக்டோபர் 02ஆம் திகதி அகில இலங்கை ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி மூலம் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி பின்வருமாறு அமைந்திருந்தது. கொழும்பு / கம்பஹா / களுத்துறை / கண்டி / மாத்தளை/ காலி/ மாத்தறை/ குருணாகல்/ கேகாலை மாவட்டம் 141 புள்ளிகள். நுவரெலியா 137 வவுனியா – 136,  அம்பாறை 139, திருகோணமலை – 138,  புத்தளம் 137, அநுராதபுரம்138, பொலன்னறுவை 140,  பதுளை 138, மொனராகலை 135, மன்னார் 139 இரத்தினபுரி 134, மட்டக்களப்பு 139

வன்னி நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டிருந்தமையினாலும் 6 மாதங்களுக்கு மேல் கல்வியை தொடராமல் இருந்தமையினாலும்,  பரீட்சை நடைபெறவிருந்த காலகட்டத்தில்கூட நிவாரணக் கிராமங்களினுள் வெள்ளப் பாதிப்புக்குட் பட்டிருந்தமையினாலும் நிவாரணக் கிராமங்களின் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இவற்றைக் கருத்திற் கொண்டே பரீட்சைத் திணைக்களம் நிவாரணக் கிராமங்களில் வசித்த மாணவர்களின் வெட்டுப்புள்ளியை 111ஆகக் குறைத்தது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 267 மாணவர்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவர்களும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். இங்கு மன்னார்,  வவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு வேறு வெட்டுப்புள்ளிகள் காணப்பட்ட போதிலும் கூட,  இம்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணக் கிராமங்களில் வசித்த நிலையில் இவர்கள் நிவாரணக்கிராம மாணவர்களாகவே கருத்திற் கொள்ளப்பட்டு நிவாரணக் கிராமங்களுக்குரிய வெட்டுப்புள்ளியே இவர்களுக்கு சேர்க்கப்பட்டன.

இதன்படி 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் ஆகக் கூடிய புள்ளியாக 135 புள்ளியையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 175 புள்ளியையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 175 புள்ளியையும் மன்னார் மாவட்டத்தில் 134 புள்ளியையும் யாழ். மாவட்டத்தில் 135 புள்ளியையும் பெற்று தலா ஒவ்வொரு மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

5413 மாணவர்களது பெறுபேறுகள் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதும் பெருந் தொகையானோர் யாழ்ப்பாணம்,  மன்னார், திருமலை,  மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கென அனுப்பப்பட்டுள்ளனர். எனவே இவர்களுடன் சென்றுள்ள பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை அவர்களது சொந்த மாவட்ட வலய கல்வி பணிப்பாளர்களூடாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழ்மொழி மூலமாக யாழ். வட்டுக்கோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஸ்ரீகர்ஷன் 192 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்தார். இந்த மாணவனும் சிந்தனைவட்டத்தால் வெளியிடப்பட்ட தரம் 5 மாதிரிவினாத்தாள்களையும் வழிகாட்டிப் புத்தகங்களையும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழிமூலம் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாந்தோட்டை ருகுணு விஜயபா மகா வித்தியாலய மாணவன் கே. ஏ. பிரமோத் டில்ஷான் முதலாவது இடத்தையும் பிடித்திருந்தார்.

சாதாரண நிலையில் போட்டிப் பரீட்சையான புலமைப்பரிசிலுக்கு தோற்றும் மாணவர்களின் நிலையைவிட வன்னி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் நிலை மிகமிக பரிதாபகரமானது. பல்வேறுபட்ட மானசீகப் பிரச்சினைகள் மத்தியிலும் போதிய கல்வி போதனைகள் இன்றிய நிலையிலும் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 507 மாணவர்கள் சித்தியடைந்திருப்பது பெருமைப்படக்கூடிய விடயமே.

இம்மாணவர்கள் அனைவருக்கும் தேசம்நெற்,  சிந்தனைவட்டம் இவற்றின் நிர்வாகத்தினரும் தேசம்நெற் வாசகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றனர். அதேநேரம்,  பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியில் இம்மாணவர்களை வழிநடாத்திய நிவாரணக்கிராம ஆசிரியப் பெருந்தகைகள் என்றும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    வவுனியா நிவாரண கிராமங்களில் சித்தியடைந்த 507 மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்று வித்த ஆசிரியர்களுக்கும், வழிகாட்டல்களை வழங்கிய சிந்தனைவட்டம், தேசம்நெட்டுக்கும் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய சமூகநோக்கு கொண்ட இதயங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    மகிழ்வாக இருக்கிறது. சிறு துரும்பும் தேவைக்கு உதவும் என்பது போல முடிந்ததை செய்யுங்கள் , அந்த மக்கள் மகிழ்வாக வாழட்டும். இப்படியான சிறு வெற்றிகள் கூட , அவர்கள் வாழ நம்பிக்கை அளிக்கும்.

    Reply
  • uma
    uma

    காலையில் ஓர் நற்செய்தி. பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் பாராட்டுக்கள். இச்செயற்திட்டத்தை முன்னெடுத்த அனைத்து தரப்பினர்க்கும் நன்றிகள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    முப்பது வருடங்கள் இனத்தின் பெயரில் நடந்த போராட்டதிற்கு செலவழித்த தொகையும் தீர்கப்பட்ட வெடிகளும் பறிக்கப்பட்ட உயிர்தொகையையும் ஒப்பிடும் போது…. தேசம்நெற்றின் கூட்டுமுயற்சியால் ஒரு சிறுதொகையுடன் தீர்கப்பவெடி எமது சமூகத்தின் முற்றதில் வீழ்ந்து மத்தாப்பு பூரிப்பை அல்லவா! ஏற்படுத்துகிறது. இதன் பலனை வார்த்தைகளால் பாராட்டமுடியாது. உங்கள் முயற்சி மேலும் விரிவடைந்து சிறப்புபெறுமென உறுதியாக நம்பலாம். கடிமான உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் நல்லதொரு மாற்றத்திற்கான ஆரம்பம். பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்தச் சிறார்களின் வாழ்க்கை இதுவரை பாழடிக்கப் பட்டிருக்கின்றது. இப்போதாவது அந்த நிலை மாறி அவர்கள் தங்கள் கவனங்களை கல்வியில் செலுத்த உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    Reply
  • Thaksan
    Thaksan

    வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தும் எந்த முயற்சியும் தோல்வியை சந்திப்பதில்லை. சிறு சிறு ஊக்கவிப்புகளே பாரிய பலனை தந்துவிடும் பலமுள்ளது. இன்னமும் பரந்தளவில் பல முனைகளினூடாகவும் முயற்சிகளை மேற்கொள்வோம். உண்மையான போராட்டம் இந்த அவலங்களை வெல்லவதற்கானதே. தொடர்ந்து போராடுவோம்: அதனூடாக வாழ்வின் உன்னதங்களை தரிசிப்போம்.

    Reply
  • பரீட்
    பரீட்

    நிவாரணக்கிராமங்களில் மாணவர்கள் சிறப்பான முறையில் சித்தி எய்தியிருக்கிறார்கள் என்பது உண்மையிலே மகிழ்ச்சியான செய்தி. நிவாரணக்கிராமங்களில் மாணவர்களின் கற்றல் சூழ்நிலைகளை நேரடியாக அவதானித்தவன் என்ற வகையில், எதிர்பார்க்க முடியாத வெற்றியாகவே இது உள்ளது. நிச்சயமாக நிவாரணக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் தியாகங்களுக்கும், அம்மாணவர்களுக்கான திட்டமிடப்பட்ட முறையான வழிகாட்டலை வழங்கிய சிந்தனை வட்டம், தேசம் நெட் ஆகியவற்றிற்கும், கிடைத்த வெற்றியாகவே இதைக்கருத வேண்டும்.

    ஒரு ஊடகம் சரியான முறையில் திட்டமிட்டு செயற்பட்டால், ஒரு சமுகத்தை ஆக்கவும் முடியும், வழிதவற வைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். இந்த அடிப்படையில் தேசம் நெட் ஆக்க பூர்வமான ஓர் அரும் பணியைச் செய்துபுலம் பெயர் ஊடகங்களுக்கு எடுத்துக்காட்டாக நிற்கின்றது. இதன் பெருமானம் தற்போது அளவிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு செய்தியாகவும் தெரியாது. நிச்சயமாக இன்னும் சில தசாப்தங்கள் சென்ற பிறகு இது ஒரு வரலாறாகும். இது நிச்சயம்.இந்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருமே மதிக்கப்பட வேண்டியவர்கள், கௌரவிக்கப்பட வேண்டியவர்களே…..

    Reply
  • பரீட்
    பரீட்

    சிந்தனை வட்டம், தேசம் நெட் ஆகியவற்றிற்கு கிடைத்த இந்த வெற்றியுடன், தங்கள் கடமை நிறைவேறி விட்டதாக நீங்கள் நினைத்து விடக்கூடாது. இதன் பிறகு தான், தங்களது பார்வை அகலமாக பதிய வேண்டும்.

    குறிப்பாக தமது உறவுகளின் மேல் பற்றும், பாசமும் கொண்ட புலம்பெயர் உறவுகள், மீள்குடியேற்றம் பெற்ற பின்பு, வன்னி மாணவர்களின் கல்வியின் பால் கூடிய கரிசனை காட்ட வேண்டும். மீள்குடியேற்றம் பெற்ற முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பாடசாலை நிலைகள், ஆசிரியர்களின் தட்டுப்பாடு போன்றவற்றை ஆராய்ந்து நீண்ட கால, குறுங்காலத் திட்டங்களை வகுத்து மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    அவ்வாராயின் தான் தற்போது பெற்ற வெற்றியை நிரந்தரமாக பெற்றுக் கொள்ள முடியும்.

    மீள்குடியேற்றம் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றது. மீள்குடியேற்றம் பெற்ற இடங்களில் கல்வி நிலை சீரான தன்மை பெற இன்னும் நீண்ட காலம் செல்லலாம். மக்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை அவதானித்து உதவிகள் வழங்க பல்வேறு அமைப்புகள் காணப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டமிட்ட அமைப்புகள், இதுவரை செயற்பட்டதாக அறிய முடியவில்லை. இந்த அடிப்படையில் சிந்தனை வட்டம், தேசம் நெட் ஆகியவற்றின் பணி ஓரளவு மனநிறைவைத் தருகின்றது. ஆனால் இது போன்ற அமைப்புகளின் பணிகள் விரிவு படுத்தப்பட வேண்டும்.

    அரசியல் தீர்வுகள், தற்போதைய பிரச்சினைக்கான தீர்வுகள் என்பவற்றை புலம்பெயர் சமுகத்தில் வாழும் தனிப்பட்ட ஒவ்வொரு நபராலும், மேற்கொள்ள முடியாது. இதற்கான பல்வேறு ஏற்பாடுகள் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றை இங்கே நான் விமர்சிக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒவ்வொரு நபராலும், மனது வைத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் சமுகத்தின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். இதை ஒவ்வொருவரும் மனசாட்சியுடன் யதார்த்த நிலையைக் கருத்திற்கொண்டு சிந்தித்தால் முடிவு வரும்.

    Reply