1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் போது யாழ்ப்பாணத்தில் எந்தவொரு சிங்களவரும் தமிழ் மக்களால் தாக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படவில்லை. சூறையாடப் படவில்லை. என்பதை நான் எனது கண்களால் கண்டு தெரிந்து கொண்டவன்.
பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பல அதிகாரிகள் என்னை வற்புறுத்தியும் நான் யாழ். மண்ணையும் அம்மக்களையும் விட்டு தென்பகுதிக்கு வெளியேறவில்லை. இவ்வாறு வரலாற்று ஆய்வாளரும், பேராசிரியருமான சுசரித்த கம்லத் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் திரிகோணி கலை அமைப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்த ஏ. ஜே. கனகரத்னா யாழ்ப்பாணத்தின் மனச்சாட்சி என்ற சிங்கள நூலின் வெளியீட்டு விழா பொரளை கலாநிதி என். எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போதே பேராசிரியர் சுசரித்த கம்லத் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்விற்கு தர்மசிறி பண்டார தலைமை வகித்தார்.
“புராதன சிங்கள தமிழ் உறவுகள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேராசிரியர் சுசரித்த கம்லத் உரையாற்றுகையில், அன்றைய கலவர சூழ்நிலையிலும் நான் பாதிக்கப்படவில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அன்று பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த இருநூறு சிங்கள மாணவர்கள் பாதுகாப்பு பிரிவினரால் தென் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அன்று கொழும்பிலும், இந்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. தீவைக்கப்பட்டன. உயிர்கள் பலி எடுக்கப்பட்டன. இந்தச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவிய நிலையிலும் எந்தவொரு சிங்களவரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வரும் வழியில் சிங்கள மாணவர்கள் வீதியில் செல்வோரை கேலி செய்வதில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நீண்ட உறவு முறை உண்டு. கலை, கலாசாரம், பண்பாடு, மொழி என பல வகைகளிலும் தொடர்பு உண்டு. தமிழ் மொழி மிகப் பெரியதோர் பழைமைவாய்ந்த மொழி. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பேசப்படும் மொழியாகும். தமிழ் மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர். சிங்களவர்களும் இந்திய நாட்டிலிருந்து வந்தவர்களே. பல சிங்கள மன்னர்களின் ஆட்சியில் மந்திரிகளாகவும், படை வீரர்களாகவும், கடமையாற்றியவர்கள் இந்நாட்டு தமிழர்கள் என்பதை நாம் உணரவேண்டும்.
பல மன்னர்கள் தமிழ் பெண்களை மணம் முடித்துள்ளனர். வரலாற்றை துல்லியமாக ஆய்வு செய்யும் போது பல உண்மைகள் வெளிவரும். தமிழ் சிங்கள மக்களின் உறவு நீண்ட வரலாற்றையும் அந்நியோன்னியத்தையும் தெரிவிக்கிறது. பல சிங்கள மன்னர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ், மலையாள குருக்கள்மாரின் ஆலோசனைகளை பெற்று ஆட்சி புரிந்தவர்கள்.