வெளிநாடுகளிலிருந்து திரைப் படங்களை இறக்குமதி செய்வதற்கான வரிப்பணமாக அரசாங்கத்துக்கு இதுவரை 550 மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல தெரிவித்தார். உள்ளூர் சின்னத்திரை, திரைப்படத் துறையை ஊக்குவிக்க இந்த பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூர் கலைஞர்களும், தயாரிப்பாளர்களும் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
அதே போன்று, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திரைப்படங்களுக்கு வரி விதிப்பதாகவும் வரவு – செலவு திட்டத்தை ஜனாதிபதி அறிவித்தார். இதன் மூலம் 550 மில்லியன் ரூபா வருமானம் அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இது இந்தத் துறைக்கே பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தாமல் உள்ளூர் திரைப்படத் துறையை மேம்படுத்த இது போன்ற வரிகள் மேலும் உந்து சக்தியாக அமையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அறவிடப்பட்ட 550 மில்லியனில் சுமார் 200 மில்லியன் ரூபாய் டெலி சினிமா கிராம நிர்மாணப் பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். திரைப்பட வரி மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் ஊடக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.