வவுனியா நலன்புரி கிராமங்களிலிருந்து 661 குடும்பங்களைச் சேர்ந்த 2139 பேர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இம் மக்கள் நேற்று முன்தினமிரவு யாழ். கச்சேரியை வந்தடைந்து பின்னர் தீவகப் பகுதிகளுக்குச் சென்றனர்.
அதேநேரம் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேர் கரவெட்டி விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்திற்கும் பருத்தித்துறை பிரதேச செயலர் அலுவல கத்திற்கும் வந்து சேர்ந்தனர். இம் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இம் மக்கள் தங்களது சொந்த இருப்பிடங்களில் குடியேறிய பின்னர், அவர்களது எதிர்கால தேவைகள் குறித்துதான் நேரில் வந்து ஆராய்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இம் மக்களுக்கான நிதி உதவிகளையும் வழங்கினார்.