நிவாரணக் கிராமங்களில் எவ்வித தொற்றுநோயுமில்லை – வவுனியா அரச அதிபர்

101009displacedidps.gifஇடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எந்தவித தொற்று நோய்களும் இல்லையெனவும் நோய்த்தடுப்புக்கான சகலவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக வடக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் தாம் நலன்புரி நிலையங்களுக்கு வரும்போதே பல்வேறு தொற்று நோய்களுடன் வந்தனர்.

அவ்வாறானவர்கள் இனங் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது தொற்றுநோய் என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளில் இவ்வாறு இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் பல்வேறு தொற்று நோய்கள் காணப்படுகின்றன. எனினும் இதற்கு முன்னுதாரணமாக தொற்று நோய்களற்றதாக எமது நலன்புரி நிலையங்கள் திகழ்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த மக்களிடையே மஞ்சட்காமாலை, தோல் நோய் மற்றும் பொக்களிப்பான் போன்ற நோய்கள் இருந்தன. இவற்றைக் குணப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான நோய்களைக் கொண்டோர் வேறாக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதேநேரம் இத்தகைய தொற்றுக்கள் ஏனையோருக்கு பரவாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மழை காலங்களில் நோய்கள் பரவாமலிருப்பதற்காக சுற்றுச் சூழல்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் நிர்தேங்கி நிற்பதைத் தடுக்கும் வகையில் வடிகான்கள் புனரமைக்கப்பட்டன. அத்துடன் மக்கள் தங்கியுள்ள கூடாரங்கள் திருத்தியமைக் கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தொற்று நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *