தமிழக முகாம்களில் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்ய வேண்டும்! : மறவன்புலவு க சச்சிதானந்தன்

Refugee_Camp_Mandapam1.0 கள நிலை

1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009)

1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115.

1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை: 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர். (2.11.2009)

1.4 முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேர். (2.11.2009).

1.5 காவல்துறையில் பதிவுபெற்ற ஏறத்தாழ 100,000 பேர் வாடகைக் குடியிருப்புகளில் தமிழகமெங்கும். 

1.4 யாவரும் ஈழத் தமிழர். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிங்கள இன வெறித் தாக்குதல்களால் உயிரச்சம் மேவத் தப்பி வந்தவர்கள்.

1.5 இன்றுள்ள இலங்கை அரசியல் சூழ்நிலை தொடருமானால், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தாமாக இவர்கள் இலங்கைக்குத் திரும்பும் வாய்ப்பே இல்லை.

2.0 வாழ் தகுதி

2.1 இவர்களுட் பலரிடம் முகாம் பதிவு அட்டை உண்டு. பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றிதழ் என எதுவும் இல்லை. ஆதாரச் சான்றிதழ் கோரும் விதிகளைப் புறந்தள்ளி, கட்டணம் எதுவும் கேட்காமல், முகாம் பதிவு அட்டையைச் சான்றாகக் கொண்டு இவர்களுக்கு உடனடியாக 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும். அனைத்துலகப் பயண இலங்கைக் கடவுச் சீட்டை (Sri Lankan passport valid for 10 years for all countries) சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்க வேண்டும். இந்திய நடுவண் அரசு இதை இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

2.2 முகாம் வழங்கிய அட்டையைச் சான்றாகக் கொண்டு, அகதியாக வந்து சேர்ந்த நாள், பிறந்த நாள், பிறப்பிட முகவரி ஆகிய விவரங்களுடன் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிலையான வதிவுரிமை அட்டையை (Permanent Resident Card), இந்திய நடுவண் அரசு வழங்கவேண்டும். வாக்குரிமை, பெருந்தோட்ட நிலங்களையும் வேளாண் நிலங்களையும் மட்டும் விலைக்கு வாங்கும் சொத்துரிமை ஆகிய உரிமைகள் தவிர்ந்த அனைத்து உரிமைகளையும் கொண்ட தகுதியை இந்த அட்டை வழங்கும். இப்பொழுதுள்ள இந்தியச் சட்டங்களுள் இந்த அட்டையை வழங்கலாம். ஏற்கனவே இந்திய அரசு இத்தகைய அட்டைகளை (PIO), இதே உரிமைகளுடன் வெளிநாடு வாழ் இந்தியருக்கு வழங்கி வருகிறது.

2.3 முகாம்களிலுள்ள ஈழத் தமிழர், இலங்கைக் கடவுச் சீட்டுடன் இலங்கை தவிர்ந்த பிறநாடுகளுக்குப் பயணம் செய்தபின், நிலையான வதிவுரிமை அட்டை இருப்பதால் இந்தியாவுக்கு மீளலாம். புகலிடம் கொடுக்கும் பல நாடுகள் தம்மிடம் வரும் அகதிகளுக்கு இந்த வசதியைக் கொடுத்து வருகின்றன.

2.4 காவல்துறைப் பதிவுமுறையில் மாற்றம் கொணர்ந்து, புகைப்படம் ஒட்டிய காவல்துறைப் பதிவு அட்டையை வழங்க வேண்டும். பதிவுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்துள் தகுதியெனில் காவல்துறைப் பதிவட்டை வழங்கும் நடைமுறை வேண்டும்.

3.0 வாழ்விடம் (கூழும் கூறையும் கூரையும்)

3.1 இந்த 30,000 குடும்பங்களுட் பலர், கடந்த 26 ஆண்டுகளாக முகாம்களுக்குள் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு அரச நிலங்களில் (சமத்துவபுரங்கள் போலக்) குடியிருப்புகள் அமைத்து, கழிவறை, குழாய் நீர், மின்சாரம், சமையல் வாயு இணைப்பு உள்ள 35,000 இரண்டு அறைக் கல்வீடுகளைக் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தவேண்டும். இதற்காக ஐநாஅகதி ஆணையரிடம் (UNHCR) கேட்டாலோ, புலம்பெயர் ஈழத் தமிழரிடம் கேட்டாலோ நிதி கிடைக்கும். இத்தகைய வாழ்விட வசதிகள் அமையும் கால எல்லையாக 2010 ஆனி அமைய வேண்டும்.

3.2 அடைக்கலம் கேட்டுப் புதிதாக வருவோரும் 6 மாதங்களுக்கு மேல் முகாம்களுள் வாழாது இத்தகைய குடியிருப்புகளுக்கு மாறிவிடவேண்டும்.

3.3 நிலையான வதிவுரிமை அட்டையுள்ளோருக்குக் குடும்பப் பங்கீட்டு அட்டைகள் (Family ration card) வழங்க வேண்டும். அணித்தாக உள்ள பொதுவிநியோகக் கூடத்தில் (PDS Shop) பங்கீட்டு உணவுப் பொருள்களைக் குடியிருப்பாளர்களே காசு கொடுத்து வாங்குவர்.

3.4 குடியிருப்புகளுக்குப் போனபின்பு அடுத்த ஓராண்டு காலத்து, அரசு இப்பொழுது வழங்கி வரும் மானியத் தொகை (2.11.2009இல் குடும்பத் தலைவருக்கு ரூ. 400, குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு ஏற்ற தொகை) அக்கால விலைவாசிக்கு ஏற்பத் தொடர்ந்து வழங்க வேண்டும்.

3.4 பங்கீட்டு அட்டைகள் வைத்திருப் போருக்கான நலத்திட்ட வழங்கல்கள், (இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி போன்றவை) இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்

4.0 தொழில்

4.1 நிலையான வதிவுரிமை அட்டை உள்ளோர் தத்தம் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புப் பெறும் சுதந்திரம் வேண்டும். இந்த வசதியை அனைத்து வெளிநாட்டவருக்கு இந்திய அரசு இப்பொழுது வழங்கியுள்ளது. இதற்கெனப் புதிய விதிகள் தேவையில்லை.

4.2 தத்தம் திறமை, அநுபவம், முதலீட்டு வலிமை கொண்டோர், தொழில் தொடங்கவும், குறுகிய கால முதலீட்டு மற்றும் செலவாக்க வங்கிக் கடன் பெறவும் சுதந்திரம் வேண்டும். இதற்கெனவும் புதிய விதிகள் தேவையில்லை.

4.3 தனி ஆற்றலருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற ஆற்றலுரிமங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இருக்கும் விதிகளுள் வழங்கலாம்.

4.4 தொழில் தொடங்குவோருக்கு அரச நிலங்களைக் குத்தகைக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

4.5 தொழில் முனைவோர் பயிலரங்குகள், சிறுதொழில் தொடங்க ஊக்குவிப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களாதல் போன்ற சுய முன்னேற்ற வழிகாட்டல்கள் வேண்டும்.

5.0 கல்வி

5.1 மழலையர் வகுப்புத் தொடக்கம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம், மற்றும் முதுநிலைப் பட்டம் வரையும் இதுவரை காலமும் இருந்த சிறந்த அணுகுமுறை தொடரவேண்டும்.

5.2 பலதொழினுட்பப் பயில் நிலையங்களுக்கும் (polytechnic) இந்த அணுகுமுறையை நீட்டவேண்டும்.

5.3 1983இல் தொடங்கிய தொழிற்கல்வி (professional courses) அனுமதிக்கான இட ஒதுக்கீடுஇ 1991இல் தடையாகிப் பின்னர் 1996இல் மீளமைந்து, 2000களில் நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியது. இந்திய நடுவண் அரசு ஒதுக்கீடாக அமைய வேண்டும் என்றதால் தேங்கி நிற்கிறது. இந்திய நடுவண் அரசின் அயலுறவுத் துறையின் மாணவர் பகுதியே (Students cell of the Minstry of External Affairs located at Shahstri Bavan, New Delhi) வெளிநாட்டு மாணவருக்கு இட ஒதுக்கீடு செயுமிடமாகும். அப்பகுதியினரே, வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான (NRI) ஒதுக்கீடுகளைச் செய்வோர்கள். மருத்துவக் கல்விக்கு 30, பொறியியல் கல்விக்கு 60, வேளாண் கல்விக்கு 40, விலங்கு மருத்துவக் கல்விக்கு 20, மீன்வளக் கல்விக்கு 10, சட்டக் கல்விக்கு 20 என இட ஒதுக்கீடுகளை அப்பகுதியினர் வழங்குமாறும் 2010 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருமாறும் இப்பொழுதிருந்தே முயலவேண்டும். புதிய விதிகள் எதுவும் இயற்றத் தேவை இல்லை.

5.4 உயிரச்சத்தால் தப்பி வருவோர் புகலிடம் தேடுகையில் பிறப்பு, பள்ளிமாற்ற, கல்வித் தராதரச் சான்றிதழ்களுடன் பயணிக்கார். இத்தகையோரிடம் சான்றிதழ் கோருவது மனித நேயமல்ல. முடிந்தவரை சான்றிதழ் பெறக் கோரலாம். முடியாதவிடத்து உறுதிச் சான்றிதழ் (Affidavit) பெற்றுக் கல்விநிலையங்களில் அனுமதிக்கலாம். இதற்கான அரச ஆணை தேவை.

5.5 ஈழத்தமிழர் அகதி மாணவர் புலமைப் பரிசில் நிதியத்தைத் (முதலமைச்சர் நிவாரண நிதியம் போன்றாதாக) தமிழக அரசு தொடங்கி. அரசு நிதி ஒதுக்கியும். புரவலர்களிடம் நிதிபெற்றும், வசதி குறைந்த மாணவருக்குக் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு வழங்க வேண்டும்.

5.6 பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு மாணவருக்கு வங்கிக்கடன் வழங்கலாம் என்ற திட்டத்தையும் எடுத்து நோக்க வேண்டும்.

6.0 மருத்துவம்

6.1 கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துள் இந்த 31,000 குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகிடைக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • மாயா
    மாயா

    இலங்கை அகதிகளுக்கு ரூ.12 கோடி நிதி : முதல்வர் உத்தரவு

    சென்னை : தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நிலை மற்றும் அவர் களின் தேவைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்ந்து, வரும் 10ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அகதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக, 12 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாக வந்த தகவலையடுத்து, தலைமைச் செயலகத்தில் நேற்று காலை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டினார். முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித்துறை செயலர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலர் ஜோதி ஜெகராஜன், உளவுத் துறை ஐ.ஜி., ஜாபர்சேட் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். காலை 10.45க்கு துவங்கிய கூட்டம், 11.30 மணி வரை நடந் தது.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 115 அகதி முகாம்கள் உள்ளன. அதில், 19 ஆயிரத்து 340 குடும் பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 241 பேர் வசித்து வருகின்றனர். அரசு அனுமதியுடன், முகாம்களுக்கு வெளியே 11 ஆயிரத்து 288 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 802 பேர் தங்கியுள்ளனர். அகதிகளை, தமிழர்களாக பார்க்க வேண்டும் என்று கூட்டத்தில் முதல்வர் கூறினார். அவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக, 12 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன், மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று, அவர்களுடைய பிரச்னைகளை கேட்டறிய வேண்டும் என்றும், அவர்களுடைய தேவையை கேட்டு அதை அறிக்கையாக வரும் 10ம் தேதிக்குள் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, அரசு அளித்த நலத்திட்ட உதவிகள், அகதிகளைச் சென்றடைந்ததா என்பதையும் கேட்டறிந்து, அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

    அறிக்கையின் அடிப்படையில், 12 கோடி ரூபாய் நிதியை செலவழிப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். அகதிகளுக்கு தேவையான வசதிகளைச் செய்திட 16 கோடி ரூபாய்க்கான திட்டம், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அகதிகளுக் கான நிதியை, மத்திய அரசு தான் தர வேண்டும். தமிழக அரசு திட்டத்திற்கு இன்னும் மத்திய அரசு அனுமதி தரவில்லை. எனினும், மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல் நடப்பு பட்ஜெட்டில் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, 12 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    -Thinamalar-

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இதுபற்றி ஒரு கட்டுரை அண்மைய இண்டியா ருடே இல் வந்தது. அதனைத்தொடர்ந்துதான் கருணாநிதி நடவடிக்கை எடுக்க முனைந்ததாக அவரே சொல்லி இருப்பது வேடிக்கை அரசியல். இவ்வளவுகாலமாக அவருக்குத்தெரியாதாம்…கண்ணீர் பெருகுதாம். ஏதோ அம்மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.

    ‘…இன்னும் சொல்லப்போனால் நம் நெஞ்சத்தைக் குத்திக்காட்டுகின்ற நிலையிலும் நவம்பர் 11ம் தேதியிட்ட ஒரு ஆங்கில வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்துள்ள நீண்ட கட்டுரை ஒன்றை நான் படிக்க நேர்ந்தது.

    இலங்கையில் அகதிகளாக உள்ள தமிழர்கள் வாடி வதங்குவது ஒரு புறமிருக்க இங்கே நமது தமிழ் மண்ணில் அகதிகளாக வந்து சேர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் தாங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் எதுவுமின்றி எத்துணை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை புகைப்படங்களோடு அந்த வார ஏடு வெளியிட்டுள்ள காட்சிகளைக் கண்டு, கண்ணீர் பெருக்கியதோடு அவர்கள் கவலைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை மேற்கொள்வது தான் நமது கடமை ஆகும் எனக் கருதினேன்….’

    மேலும் அக்கட்டுரையை கீழ்வரும் சுட்டியில் ‘Full screen” , zoom போன்றவற்றை உபயோகித்து பெரிதாக்கி வாசிக்கலாம்.

    http://blog.balabharathi.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அன்புமிக்க சாந்தன்! நீங்கள் காட்டிய சுட்டியை தொடர்ந்து சென்று வாசித்து அறிந்து கொண்டேன். நன்றிகள். நன்றி மட்டுமல்ல. தமிழ்மக்களின் துன்பங்களை நினைக்கும் போது தொண்டை அடைக்கிறது. நிஜயமாகத் தான். இனி என்ன செய்யலாம்?. உங்கள் ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்.

    Reply
  • Muththusamy
    Muththusamy

    நாடுகடந்த தமிழீழ அரசு இந்தியாவில் உள்ள அகதிகள் நிலையில் கவனம் எடுத்து அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டும்

    Reply
  • naane
    naane

    எனக்கு இந்த தலையங்கத்தை பார்த்ததும் நான் பற் பண்ண வரேக்க யாரோ தொடர்ந்து சோட் போல் போட்ட மாதிரி கிட‌க்கு.இந்தியாவில் நான் வேலை செய்ததே தமிழ் அகதிகளுடன் தான்.அதைப்போல மனத்திருப்தி வேறெங்கு கிடைக்கும்.தமிழ் நாடு குப்பையாய் தள்ளி விட்ட எம் அகதிகளை முடிந்த அளவு ஒழுங்கமைப்பு செய்ய வெளிக்கிட்டு, அதுவும் குழ‌ம்பி வெளியேறவேண்டிவந்தது.ஆனால் இருக்கமட்டும் செய்ததே ஆயுள் வரை திருப்தி கொடுக்கும்.எத்தனை குடிசை,எத்தனை குழாய்க் கிணறு,எவ்வளவு பேருக்கு உடுபுடவை,பாவங்கள் எத்தனையோ மைல் தாண்டிவீடு தேடி சந்திக்க வந்தபோது அரக்கன் மாதிரி பேசி திருப்பி அனுப்பியது.(ஒரு ஆளுக்கு கையில காசு கொடுத்தா நாளைக்கு முழு அகதிகளும் வீட்டு வாசலில் வந்து நின்றால் நான் என்ன செய்வது).
    நான் என்னில் பெருமைப்ப‌டுவ‌து இந்த‌ ஒரு விட‌ய‌த்தில் தான்.போன‌ அக‌தி முகாமில் எல்லாம் முழுப்பேரையும் வ‌ர‌வ‌ழைத்து முகாமிற்குள் ஒரு நிர்வாக‌த்தை ஏற்ப‌டுத்தி ஒரு த‌லைவ‌ர்,ஒரு காரிய‌த‌ர‌சி என்று வைத்து, த‌னி த‌னி ந‌ப‌ர்க‌ளாக, தன் குடும்பம் என்று‌ இருந்த‌வ‌ர்க‌ளை ஒரு அமைப்ப்ற்குள் கொண்டு வ‌ந்தேன்.எனது அப்பாவின் வயதொத்தவர்களெல்லாம் எனது சொல் கேட்டு நடந்தது இன்னமும் நம்பமுடியாமல் இருக்கின்றது .நாளைக்கு முகாம்களின் நிலைப்பாட்டை விபரமாக எழுதுகின்றேன்.‌

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சந்திரன் ராஜா,

    கருணாநிதியின் கருத்துகளைக் கவனத்தில் எடுப்பதாயின் அவர் கடந்த மாதம் ‘இலங்கையில் சாந்தி நிலவுகிறது’ என திருவாய் மலர்ந்தருளி உள்ளார். ஆனால் இந்தக்கிழமை அகதிமுகாம் நிலை பார்த்து ”கண்ணீர்” பெருக்குகிறார். எனவே அவர்களை ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்புதல் வேண்டும் எனக் கோரலாம் என நினைக்கிறேன். இலங்கையில் சாந்தி நிலவும் போது ஈழத்தமிழர் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்?
    அல்லது இங்கே மறவன் புலவு சச்சிதானந்தன் சொன்னது போல செய்யவேண்டும்.
    இவை இரண்டுள் ஒன்ரை நீங்கள் தேர்வு செய்யலாம் எனது ஆலோசனைக்காக காத்திருக்கவேண்டாம்.

    அத்துடன் முக்கியமாக ஸ்ரீலங்கா/இந்தியா இன்னும் காலம் தாழ்த்தாமல் ஐ.நா.அகதிகளுக்கான ஜெனிவா ஒப்பந்ததில் கைச்சாத்திட வேண்டும். இதனை மனிதாபிமானத்தினை சிரமேற்கொண்டு ஸ்ரீலங்காவில் இயங்கும் அரசியல், ஜனநாயகக்கட்சிகள் முன்னெடுக்கலாம். செய்வார்களா?

    Reply
  • மாயா
    மாயா

    //நாளைக்கு முகாம்களின் நிலைப்பாட்டை விபரமாக எழுதுகின்றேன்.‌//

    நல்ல விடயம். அறியத் தாருங்கள் naane.

    Reply