Sunday, October 24, 2021

வடபுல முஸ்லிம்களை வையகம் மறந்து விட்டதா? : யூசுப் கே. மரைக்கார்

Muslim_Expulsion._._._._._.
யூசப் கே கே மரைக்கார் மன்னாரைச் சேர்ந்தவர்.  தற்போதும் இலங்கையில் வாழும் இவர் இலங்கையின் தமிழ் நாளிதழ்களில் தொடர்ந்தும் எழுதி வருபவர். இக்கட்டுரை தேசம்நெற் க்காக எழுதப்பட்டுள்ளது.
._._._._._.

ஒக்டோபர் 24 ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் தமது பூர்வீக தாயகத்தை விட்டு வெளியேறி 20 வருடங்கள் முடிவடைந்து விட்டன.

உள்நாட்டில் இடம்பெயர்தல் என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, புவியதிர்வு போன்ற இயற்கை காரணங்களினாலும், இனக்கலவரம், மதக்கலவரம் போன்றவற்றாலும் மற்றும் அரசு அபிவிருத்தித் திட்டங்கள், உள்நாட்டு அல்லது சர்வதேச யுத்தம் போன்ற காரணங்களினாலும் ஏற்படலாம். வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமானது ஒரு வகையான இனச் சுத்திகரிப்பு என்று கூடக் கூறலாம்.

உள்நாட்டு இடம் பெயர்வு பற்றி சர்வதேச சட்டத்தில் தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. சர்வதேச சட்டமானது தேசங்களின் வழமையான சட்டங்களையும் சர்வதேச நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் ஐக்கிய நாடுகள் சபையாலும் அதற்கு முன்பிருந்த சர்வதேச ஒன்றியங்களினாலும் உருவாக்கப்பட்ட சட்டங்களை உள்ளடக்கியது எனச் சுருக்கமாக கூறலாம்.

சர்வதேச சட்டங்களுள் மனித உரிமை சட்டங்களும் மனிதாபிமானச் சட்டங்களும் இணைந்து அகதிகள் பற்றியும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றியும் தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளன.

இவற்றை அடித்தளமாகக் கொண்டு பிரான்சில் டெங் என்ற ஐ.நா. சபையின் சட்ட நிபுணர் 1998 ஆம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்தல் பற்றிய பொதுக் கோட்பாடுகளை (General Principles on Internal Displacement) உருவாக்கினார்.

இந்த கோட்பாடுகளை வோல்டர் கோலின், கோஹன், யாஷ்காய் போன்ற சட்ட வல்லுனர்கள் மேலும் மெருகூட்டினர். இலங்கையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தனியான சட்டவாக்கங்கள் எதுவும் இல்லையென்றாலும் இலங்கை அரசியல் சாசனத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் சரத்து முதல் 17 ஆம் சரத்து வரையிலான அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கும் பொருந்தும்.

இங்கே உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான சட்டப்படியான பாதுகாப்பு எனக் கருதுகையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கோட்பாடுகளும் (GPIO) இலங்கையின் அரசியலமைப்புச் சாசனத்தின் 3 ஆம் அத்தியாயத்தில் 10 முதல் 17ம் பிரிவு, கொசோவோ மற்றும் டேந்தன் உடன்படிக்கை ரீதியான விதிகளும் பொருந்தும். என்றாலும் ஐ. நா. சபையின் அல்லது சர்வதேச சட்டங்களின் ஏற்பாடு இலங்கைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதையிட்டு இன்றும் வாதப் பிரதிவாதங்கள் உண்டு.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றிக் குறிப்பிடுகையில் அகதிகளுக்கும் இவர்களுக்குமுள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முன்பு கூறப்பட்ட காரணங்களும் உயிருக்கு பயந்து ஒரு நாட்டின் சர்வதேச எல்லையைக் கடந்தவர்கள் அகதிகளாவர்.

அவ்வாறு வெளியேறாது உள்நாட்டிலேயே மறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஆவர். இதனோடு இணைந்து பலவந்த வெளியேற்றம், இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை, மீள்குடியேற்றம், மீளமர்வு, மீளிணைப்பு, பாரம்பரிய குடிநிலம், வழமையான வதிவிடம் போன்ற செயற்பாடுகளையும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாயிரமாம் ஆண்டு உலகில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை சுமார் இரண்டரைக் கோடியாகும். அதாவது உலக சனத்தொகையில் இருநூற்றில் ஒருவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஆகவிருக்கின்றனர் என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.

இதில் இன்னுமொரு பிரதான காரணி என்னவெனில், இந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மோரோ (Moro) முஸ்லிம்களும், மியன்மாரில் ரோஹில்லயா முஸ்லிங்களும், தாய்லாந்திலும், பங்களாதேசின் முன்னாள் யுத்த அகதிகளும், பாகிஸ்தானிலும் மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக், துருக்கி, பொஸ்னியா, சோமாலியா, சூடான், எதியோப்பியா, உகண்டா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் முஸ்லிம்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களாக சொல்லொனாத் துயரத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறான உள்நாட்டு இடம்பெயர்ந்தவர்களில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் பொதுவானவை தான். குறிப்பாக மனித உரிமை அல்லது அடிப்படை உரிமை மீறல் சம்பந்தமான குடியியல் அரசியல் சமூக பொருளாதார கலாசாரம் தொடர்பான பிரச்சினைகளாக காணப்படுகின்றன.

விசேடமாக உணவு, உடை, இருப்பிடம், நீர், சுத்தமான சுவாத்தியம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, விருப்புடன் கூடிய மீள்குடியேற்றம், வரவேற்ற சமூகம் (Host Community) என்பவற்றைச் சார்ந்த சிக்கல்களுக்கு விடை காண வேண்டியுள்ளது. உலகின் உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகளில் அசே, பொஸ்னியா உள்நாட்டு இடம்பெயர்ந்தோர்கள் தவிர்ந்த ஏனைய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை சுமுகமான தீர்வு காணப்படவில்லை.

இலங்கையில் இப்போது ஐந்து இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களாக இருக்கும் நிலையில் இவர்களின் பிரச்சினை முற்று முழுதாய் தீர்க்கப்பட்டால் அந்தப் பெருமை அரசாங்கத்தையும் இது தொடர்பான அமைச்சரையுமே சாரும். இவ்வேளை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத், வாகரையிலும் மூதூரிலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களை மீள்குடியேற்றியுள்ளமை பெருமை தருவதாக அமைந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதிவாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சுமார் 72000 வடபுல முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இன்றுவரை மீள்குடியேற்றப் படாமலிருப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும்.

மீள்குடியேற்றமானது உண்மையான விட்டுக்கொடுப்புடனும் ஒத்துழைப்புடனும் இடம்பெற வேண்டும். பொஸ்னியா, அசே போன்ற நாடுகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகள் இந்த முறையில் தான் தீர்க்கப்பட்டன. முக்கியமாக இனங்களுக்கிடையில் விட்டுக் கொடுப்பும் அரசாங்கத்தின் மனப்பூர்வமான ஒத்துழைப்பும் சர்வதேச சமூகத்தின் இடையாறாத உதவியும் மிக அத்தியாவசியமான காரணிகளாகும்.

இரண்டே மணித்தியாலங்களுக்கும், சில இடங்களில் இரண்டு நாட்களிலும் தமது நிரந்தர வதிவிடத்தை விட்டு பலவந்தமாக விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்களின் இழப்புகள் வடபுல உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் தமிழ்ச் சகோதரர்களது இழப்புக்களை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல.

இதனையிட்டு பலவந்தமாக விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் மீது எள்ளளவும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டவில்லை. மாறாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் வவுனியா வந்தபோதும் பல லட்சம் ரூபா பெறுமதியான உணவு, உடை, மருந்து என்பவற்றைக் கொடுத்துதவினர்.

மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் மீது சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் காட்டும் அக்கறையைப் பார்க்கையில் உண்மையில் நெஞ்சு நெகிழ்கின்றது. பல கோடி ரூபாக்களை இந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களுக்காக கொடுத்துதவினர் என்பது வரவேற்கத்தக்க விடயம்.

உடனடியாக பிரித்தானியா வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லி பிராண்ட்டும் பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கவுச்னரும் ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனும் தமது மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்த அள்ளி அடித்துக்கொண்டு இலங்கைக்கு ஓடி வந்தனர்.

இதற்கு சில தினங்களின் பின்பு பான்கிமூனின் உதவியாளர் லின் பாஸ்கோ இவ்வருட செப்டம்பர் 16 ஆம் திகதி வருகை தந்து மெனிக்பாம் முகாமுக்கு சென்று திரும்பினார்.

ஐ. நா. அகதிகள் தாபனத்தைச் சேர்ந்த அன்டோனியோ கட்டரேஸம் வந்தார். தமிழ் மக்களைப் பார்த்துவிட்டு இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கும் கவனிப்பதற்கும் மேலும் உதவிகள் வழங்கப்படுமென்றார். பாக்கிமூனின் இடம்பெயர்ந்தவர்களுக்கான விசேட பிரதிநிதி வால்டர் கேவின் என்பவரும் வந்து சென்றார்.

இவர்களது கண்களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் அவலநிலை படாமற் போனது ஏன்? இந்த முஸ்லிம்கள் அவர்களது பார்வையில் மனிதர்களாகத் தோன்றவில்லை போலிருக்கின்றது. இதேவேளை இந்தியா ரூ. 500 கோடிகளை இந்த இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கியது.

இது போதாதென்று இன்றும் ரூ. 500 கோடிகளை இம்மாதம் ஒதுக்கியுள்ளது. இதேவேளை இந்தியா பலவந்தமாக விரட்டப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வடபுல முஸ்லிம்களுக்கு ஐநூறு ரூபா தானும் கடந்த இருபது வருட காலங்களில் ஒதுக்கவில்லை, கொடுக்கவில்லை என்பது மனவேதனைக்குரிய ஒரு விடயமல்லவா?

உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி அதீத அக்கறை செலுத்திய அதேவேளை கடந்த 20 வருட காலமாக அல்லலூறும் இடம்பெயர்ந்த வடபுல முஸ்லிங்களைப் பற்றி ஒரு வார்த்தைதனும் பேசாதிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

இவ்வாறே சர்வதேச மதஸ்தாபனங்களின் கண்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவ் வடபுல முஸ்லிம்கள் தென்படாதது ஏன் என்று புரியவில்லை. இந்த வடபுல முஸ்லிம்கள் அவர்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையோ? என்னவோ?

வெளிநாடுகள்தான் இவ்வாறென்றால் உள்நாட்டில் கூட பாரபட்சம் காட்டப்படுவதற்கு ஓர் எல்லை இல்லை. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரும் எவ்வளவோ பேசுகின்றனர்.  ஆனால் வடபுல முஸ்லிங்களைப் பற்றி ஒரு வார்த்தை தானும் இவர்கள் பேசாததன் காரணம் என்ன? ஒரு வேளை முற்றாக மறந்து விட்டார்கள் போலும். தேர்தல் வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்குமோ?

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டு வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது வாழாவிருந்தது தமிழ்நாடு. இதே தமிழ்நாடு முள்ளி வாய்க்காலிலும் புதுமாத்தளனிலும் மூன்று லட்சம் தமிழர்கள் விடுதலைப் புலிகளினால் மனித கேடயமாகத் தடுத்து வைத்த போது வாய்பொத்தி மெளனம் சாதித்தது.

தமிழக ஊடகங்களும் மேற்குலகும் இத்தமிழர்களை விடுவிக்கும்படி புலிகளை தட்டிக் கேட்கத் துணியவில்லை. துணிவுமில்லை. ஆனால் இன்று இலங்கை அரசாங்கம் அத்தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வைத்திருக்கும் போது மட்டும் கண்ணீர் விடுவதன் மர்மம் என்ன?

இன்று தமிழ் மக்களின் நலனில் திடீரென்று அக்கறை காட்டும் ஒருசில நாடுகளில் சேகரிக்கப்பட்ட பணத்தினை வைத்துக் கொண்டுதான் புலிகள் இயக்கம் பஞ்சமா பாதகத்தை புரிந்தனர். தம்மை வளர்த்து வாழ்ந்துக் கொண்டு வடபுல முஸ்லிம்களின் வாழ்க்கையையும் சீரழித்தனர். இதே புலிகள் இயக்கம் எப்போதாவது வடபுல முஸ்லிம்களை ஏற்று மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தினார்களா? இந்த சின்னத்தனத்தை எப்படி அழைக்கலாம்? மடைமையா? பாராபட்சமா? இனத்துவேசமா? அறியாமையா? அல்லது இரட்டை வேடமா? யூதர்களின் செல்வாக்குக்கு அடிபணியும் ஒரு சில நாடுகள் முஸ்லிம்களைக் கொன்றழிப்பதற்கும் முஸ்லிம் நாடுகளைத் திட்டமிட்டு அழிப்பதற்குப் பயங்காரவாதத்துக்கும் எதிரான போர் என்ற போர்வையில் செய்யும் அட்டூழியங்கள் தான் இவை.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்றாகத் தான் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிங்களை உதாசீனப்படுத்துவதையும் பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது. இவர்களுக்கு விடிவு எப்போது? இறைவனுக்குத் தான் தெரியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

12 Comments

 • loges
  loges

  இது இலங்கைப் பிரச்சினை இலங்கையில் உள்ள தமிழ் மொழி பேசும் முஸ்லீம்களின் பிரச்சினை இதை நீங்கள் சர்வதேசப் பிரச்சினையாக இங்கே எழுதுகிறீர்கள் அத்துடன் இந்த சர்வதேசப் பிரச்சினையாக இதை ஒப்பும் போது இதில் இஸ்லாத்தினுடைய சர்வதேசமும் இஸ்லாமிய மயமாக்கல்களடன் இணைந்து விடுகிறது பின்னர் இதை தேவையில்லாத இடங்கிள் எல்லாம் இணைத்துப் பார்க்கப்படும் ஆகவே இலங்கைப் பிரச்சினையை இலங்கையில் உள்ள சட்டதிட்டஙக்ளுடன் இணைத்துப் பார்ப்பதே சரியானதாகும்.

  சர்வதேசகளில் உள்ள முஸ்லீம் பிரச்சினைகளுடன் இணைத்துப் பார்த்தால் சர்வதேசம் இதை முன்வந்து செய்யவா போகிறது ஆகவே இலங்கைக்குள்ளே இந்த விடயத்தை அடக்கிப்பார்க் வேண்டும்.

  இந்த விடயங்களில் முஸ்லீம் மக்களுக்கே அக்கறை இருப்பதாக தெரியவில்லை கொழும்பில் உள்ள முஸ்லீம் அமைப்புக்களை பார்த்தால் அவர்கள் இதில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

  முஸ்லீம் கட்சிகள் கூட தாம் உண்டு தமதுபாடு உண்டு என்றே இருக்கிறார்கள்.

  அந்த அகதி மக்கள் தாமாகவே எழுந்து வரும்வரையில் யாராலும் அவர்களுக்காக போராட முடியாது அல்லது மற்றவர்களின் போராட்டத்தில் குளிர்காயவும் முடியாது. இதுவரையில் முஸ்லீம்களின் இந்த அகதிகளின் பொதுவான நிலைப்பாடுகள் பற்றி முஸ்லீம் கட்ச்சிகள் என்ன வெளிப்படுத்தியுள்ளன. ஒன்றுமில்லை.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ‘.. இதே புலிகள் இயக்கம் எப்போதாவது வடபுல முஸ்லிம்களை ஏற்று மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தினார்களா?…’//
  2004 யுத்த நிறுத்தத்தின் போது என்ன நடந்தது? புலிகள் கேட்டார்களே. முஸ்லிம்கள் யாழ் சென்று வந்தனரே. அண்மையில் கூட பி.பி.சி யில் முஸ்லிம்கள் தாம் புத்தளத்திலேயே வாழப்போவதாக் கூறினரே….

  ’… யூதர்களின் செல்வாக்குக்கு அடிபணியும் ஒரு சில நாடுகள் முஸ்லிம்களைக் கொன்றழிப்பதற்கும் முஸ்லிம் நாடுகளைத் திட்டமிட்டு அழிப்பதற்குப் பயங்கரவாதத்துக்கும் எதிரான போர் என்ற போர்வையில் செய்யும் அட்டூழியங்கள் தான் இவை…..’

  யூ.என்.பி, சந்திரிகா அரசு, மகிந்தா அரசு போன்றன யூத இஸ்ரேலிடம் வாங்கிய விமானங்கள், யூத இஸ்ரேலிய மொசாட்டிடம் பயின்ற போர்முறைகள் அதன்மூலம் புரிந்த போர்க்குற்றங்கள் (வன்னி/லெபனான்) பயங்கரவாதத்துக்கெதிரான போர் போன்றவற்றைக் குறிப்பிடுகிறீர்களா?.

  முஸ்லிம்களை புலிகள் வடபுலத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்ற முன்னர் இஸ்ரேலிய நலன்காக்கும் அமைப்பினை ஆரம்பித்த யூ.என்.பி அரசில் ஏ.சி.எஸ் ஹமீத் என்கின்ற முஸ்லிம்தானே வெளிநாட்டு அமைச்சர். இல்லையா மரைக்கார்?

  Reply
 • Mohamed
  Mohamed

  இதில் மூன்று விடயங்கள் உள்ளன.
  1. இது இலங்கையின் தனியான பிரச்சினை.
  2. புலிகளின் அராஜக பிடி எல்லா தமிழரையும் பாதித்தது என்பதால் தமிழர் முஸ்லீம்கள் சம்பந்தமாக மூச்சு விட முடியாதிருந்தது மட்டுமல்ல புலிகள் அழிக்கப்படுவது முக்கியமாக இருந்தது.
  3 இன்று புலிகள் இல்லை அதிகமான தமிழர் முஸ்லீம்கள் தம் இடங்களுக்கு திரும்புவதை விரும்புகின்றனர் என்பதால் அவர்கள் தம் இடங்களுக்கு திரும்புவதில் பிரச்சினை இருக்க நியாயமில்லை.

  தமிழரின் உரிமையில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லாதது மாதிரி முஸ்லீம்களின் உரிமையிலும் யாரும் தலையிட முடியாது என்பதை தமிழர் இன்று விளங்கியுள்ளனர்.

  Reply
 • mugunthan
  mugunthan

  I was studied in osmania college few months before step in to st patrics i found very close to them and they treated me as a their own.it was happy days.again muslims and tamils were live together as a family too.sadly tamils and mulims want to pleased singalese and than the problems started and both communities became enemies.and the politics in srilanka were changed.

  I think tamils and muslims have no problem in jaffna.i dont relly know how this problems are started.

  In velanai tamils were respect muslims and their culture too.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  சிலசம்பவங்கள் மனத்தை புண்படுத்தி உள்ள நம்பிக்கையும் சிதறடித்து விடுகின்றன. கடந்த முப்பது வருடங்களாக போராட்டத்தை திசை திருப்பி தமிழ்மக்களின் அமைதியை குலைத்து நின்றவனின் இயக்கம் அழிந்து போனதென நினைத்து மூச்சுவிட பம்பலப்பிட்டி கடலில் ஒரு சில வெறியர் பகிரங்கமாக ஒரு பைத்தியகார இலங்கைப் பிரஜைக்கு பூச்சியை அடித்துக் கொல்வது மாதிரி கொல்லுகிறார்கள். அதுவும் பொலீஸ்படையை சேர்ந்தவர். என்ன?

  முழு இலங்கையும் பைத்தியகார நாடாக போய்விட்டதா?என நினைக்க கே.மரைக்கார் தனது கட்டுரை வரைகிறார். இந்த கட்டுரை உண்மையில் வடபகுதி முஸ்லீங்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை கொண்டா? எழுதப்பட்டது என சந்தேகப்பட வைக்கிறது. வடபகுதி மூஸ்லீம்களை தமிழரா வெளியேற்றினார்கள்? அல்லது இலங்கையரசா வெளியேற்றியது? விதிவசமாக தமிழ்மக்கள் மத்தியில் தோன்றிய ஒரு பயங்கரவாத அமைப்பைல்லவா வெளியேற்றியது? இது சுவடில்லாமல் அழிந்து போயிற்று. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அரைவாசிகூட பூர்தியாகாத நிலையில்….

  தமிழ் மக்களைப்பற்றி கதைப்பதாகயிருந்தால் 1990 ஆண்டில் வெளியேற்றபட்ட முஸ்லீம் மக்களை பற்றி கதைக்காமல் பூர்த்தியடைந்தது இல்லை. அது இணையத்தளமாக இருக்கட்டும் இலக்கிய கூட்டமாகயிருக்கட்டும். வானெலியாக இருக்கட்டும். புலிகளைதவிர காலம்காலமாக தங்கள் கடமையை செய்தே வருகிறார்கள். மரைக்கார் என்ன விரும்புகிறார் என்பதை புரியமுடியவில்லை. இன்று மீளகுடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருப்பவர். அவர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர். இதை பற்றி டக்ளஸ் தேவானந்தா என்ன சொல்லுகிறார்? மரைக்கார் புரியாவிட்டால் நவம்பர் மாதம் முதலாம் திகதி அருட்செல்வனால் வரையப்பட்ட பதிவைப் பார்த்துவிட்டு அடுத்த கட்டுரை வரைய தனது நேரத்தை செலவழிக்கட்டும்.

  Reply
 • sumithra
  sumithra

  வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை யாழ்புலிகள் வெளியேற்றியதன் உண்மையான காரணம் என்ன?–இவர்களின் முன்னேற்றத்தையும் அரசியல் ஆட்சி முதலான பிரவேசத்தையும் பார்த்து சகிக்கமுடியாத பொறாமை கொண்ட யாழ் மேலாதிக்க வெறித்தனத்தின் பிரதிபலிப்பே இம்மாபெரும் மனித உரிமை மீறலாகும் .யாழ்நகரை விட மன்னாரில் இருதடவைகள் திரு.றகிம் அவர்கள் யு.என்.பி.கட்சியின் சார்பில் பாராளுமன்ற அங்கத்தவரானது, மற்றும் திரு.மக்பூல் அவர்கள் மன்னார் அரசாங்க அதிபரானது வசூலுக்கு தடையாகவிருந்ததால் 11.01.1988ல் திரு.மக்புல் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அச்சமயம் ஐ.நா.அகதிகள் பிரிவு அங்குதான் இருந்தது. முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை மன்னார் புலிகள் விரும்பவில்லை. அதனால் யாழ்புலிகள் மன்னார் சென்று, அன்றைய மன்னார் பொறுப்பாளர் தலைமையை கைது செய்து தடுத்து வைத்து பின்னரே மன்னாரில் முஸ்லிம் மக்களை வெளியேற்றினார்கள். இவர்களும் அகதிகள்தான். ஆனால் ஏனோ ஐ.நா.வுக்கல்ல.??

  Reply
 • Arasaratnam
  Arasaratnam

  வடபகுதி மூஸ்லீம்களை தமிழரா வெளியேற்றினார்கள்? அல்லது இலங்கையரசா வெளியேற்றியது? விதிவசமாக தமிழ்மக்கள் மத்தியில் தோன்றிய ஒரு பயங்கரவாத அமைப்பைல்லவா வெளியேற்றியது? இது சுவடில்லாமல் அழிந்து போயிற்று. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அரைவாசிகூட பூர்தியாகாத நிலையில்….

  தமிழ் மக்களைப்பற்றி கதைப்பதாகயிருந்தால் 1990 ஆண்டில் வெளியேற்றபட்ட முஸ்லீம் மக்களை பற்றி கதைக்காமல் பூர்த்தியடைந்தது இல்லை.//சந்திரன் ராஜா

  இதையே நானும் வழிமொழிகின்றேன். இதுதான் நடந்தது. முஸ்லிம்கள் விடயத்தில் முழுத்தமிழரையும் இழுத்துக் கதைப்பது மிகத் தப்பானது.

  வெளிநாடுகளில் நடக்கும் கூட்டங்களில் முஸ்லிம் இனத்தை தனிஇனமாக புலிகள் அங்கீகரிக்க வேண்டும் என்று முஸ்லிம் பிரமுகர்கள் கேட்டார்கள். கோரிக்கை வைத்தார்கள். வலியுறித்தினார்கள். அப்போ புலி அழிந்தபின் முஸ்லிம்களும் தமது கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்களா? இல்லையே. ஏன்?

  முஸ்லிம்கள் தமது தேவைகளுக்காக குரல்கொடுப்பது அதற்காக போராடுவதை நான் குறைசொல்லவில்லை. ஆனால் வன்னிமக்கள் இடம்பெயர்ந்ததை மையமாக வைத்து கதைக்கப்போய் ஒப்பிடப்போய் இக்கட்டுரை அதன் எதிர்பார்ப்பு எல்லாத்தையும் இழந்துவிட்டது.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ‘….வெளிநாடுகளில் நடக்கும் கூட்டங்களில் முஸ்லிம் இனத்தை தனிஇனமாக புலிகள் அங்கீகரிக்க வேண்டும் என்று முஸ்லிம் பிரமுகர்கள் கேட்டார்கள். கோரிக்கை வைத்தார்கள். வலியுறித்தினார்கள். அப்போ புலி அழிந்தபின் முஸ்லிம்களும் தமது கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்களா? இல்லையே. ஏன்?….’/

  அதுமட்டுமல்ல சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோது வடபுல இடம்பெயர்விலும்விட முன்னிறுத்தப்பட்டது கிழக்கு மாகாண முஸ்லிம் தனியலகு கோரிக்கை. இதனை ஃபரியல் அஷ்ரஃப் ஜெனிவா வரை சென்று தம்பி தமிழ்ச்செல்வனுடன் புடுங்குப்பட்டா. இதில் நோர்வேகூட தலையிட்டது. யூத ஆதரவுகளான அமெரிகாவும் ’ஜனநாயக அதிகாரப் பரவலாக்கல்’ மீனை கலங்கிய முஸ்லிம்/தமிழ் உறவுக் குட்டையில் பிடித்தது. ஆனால் இப்போது அத்தனியலகு கோரிக்கை எங்கே போய்விட்டது என யாருக்கும் தெரியுமா மரைக்கார் அவர்களே? அல்லது ஃப்ரியல் தான் எங்கே எனவாவது தெரியுமா?
  இந்தக் கோரிக்கை எழுந்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் பேராசிரியர் (யூத ஆதரவுகளான அமெரிக்காவில் இருக்கும் ரெம்பிள் யூனிவர்சிற்றியைச் சேர்ந்தவர்) என்ன சொன்னார் தெரியுமா? முஸ்லிம்கள் போராடமல் மற்றைய இனத்தின் போராட்டத்தின் விளைவுகளில் பங்கு கேட்பது நல்லதல்ல என.
  இதையே இங்கே மரைகார் அழகாக “இந்தச் சின்னத்தனத்தை எப்படி அழைக்கலாம்? மடைமையா? பாராபட்சமா? இனத்துவேசமா? அறியாமையா? அல்லது இரட்டை வேடமா? ” சொல்லி இருக்கிறார்.

  Reply
 • Asees
  Asees

  Dr. Marikkar
  i have found it very intersting. Please keep it up.

  Reply
 • Ahmad Nadvi
  Ahmad Nadvi

  Look, these guys started accusing each other.
  No one seems trying to understand each other. For me, not evey Tamil in the North or East bear responsibility to what happend to Muslims in 1990 in East(killing) and North(expulsion).And it is not Muslims’ right to put the fellow Tamils in that situation. It was Tamil tigers or Tamil terrorists, who did both in 1990.

  Prabhaharan never tendered his apology for that atrocity. Therefore Muslim will not forget that but have forgiven. Balasingham’s apology was not enough because Muslims did not care him. Proper apology would have been from Prabharan. Now we need no apology from any one. We put the past as past.

  In the meantime no Tamils or the Muslim Professor in the USA have right to tell the Muslim that they have no right to claim teritorial claim when it was belived to be taken away by the Tamil tigers, a bunch of lunatics. The East and North region has also been Muslims’ homeland. Whatever the people say if any one properly thinks of the reality, that person will understand that there is no room for division any more between Tamils and Muslims in the East and North.

  Majority Singhales’ threat against Tamils cannot be tolareted. Similarly Tamil tigers’ threat against Muslim had no logic. So try to extend your hands towards each other. Respect each others’ fundamental rights and other human rights, behave like grown up. Discuss the common problems with commonsense.

  Sri Lankan Muslims do not want to have war with anyone. They like their motherland. So they maintain maxsimum tolarance towards the other communities. However when our right to life in Sri Lanka is in question then they would sort this out according to our own means.

  The Muslim did not take advantage of the war between tiger and the government and they will not. The Sri Lanka Muslim have good undestanding of the trend of the local and world politics. Therefore do not under estimate their ability.

  It is Tamils’ right to think that they are the top people in the world. It maybe right or wrong we do not care. We also do not care if the Tamils say that Sri Lankan Muslims are stupide or less human, but if the Tamils try to make Muslims fool then it is their undiniable right to prove that they are not.

  Do not take it as a bluff. It is a simple human reactionary nature.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  முஸ்லீம் மக்கள் தங்கள் தலைவர்களை தெரிவுசெய்யும் போது இனியாவது கொழும்பில்லுள்ள முஸ்லீம் வியாபாரிகளுக்கு “கோட்டா” எடுக்கிற தலைவர்களைத் தெரிவு செய்யாமல் வடக்குகிழக்கில் உள்ள முஸ்லீம்மக்களின் சுகந்திர வாழ்வை தமது சமூகஅடையாளங்களைப் பேணக்கூடிய தன்னலமற்ற தலைவர்களை தெரிவு செய்யவேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள். எம்நாட்டுப் பிரச்சனைகளை எம்நாட்டிலேயே தீர்க்க முயலவேண்டும். இல்லையேல் அப்பம் பங்கிட்ட குரங்கின் கதையாக முடியலாம் யூசுப் கே.மரைக்கார்.

  Reply
 • jalpani
  jalpani

  மரைக்கார் அவர்களே!
  புலி உங்களை மட்டுமா பாதித்தது? வட கிழக்கில் யாரைத்தான் வாழ விட்டது?

  Reply