அடுத்த வருடத்தின் (2010) முதல் நான்கு மாதங்களுக்குமென 36268 மில்லியன் ரூபாவுக்கான (362,687,974,000) இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையை பிரதி நிதியமைச்சரும், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
குறை நிரப்பு பிரேரணையில் பொது சேவைகளுக்காக 356,465,507,000 ரூபா அரச திரட்டு நிதியத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் என இப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச திரட்டு நிதியத்திலிருந்து முற்கொடுப்பனவாக 6,222,467,000 ரூபாவை இக்காலப் பகுதியில் வழங்குமாறும் இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றம், சபாநாயகர் டப்ளியு. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து பிரதிநிதியமைச்சரும், அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து அதன் மீதான பாராளுமன்ற விவாதத்தைத் தொடக்கி வைத்தார்.
இந்த இடைக்கால கணக்கு அறிக்கையில் ஜனாதிபதிக்கு 2,300,320,000 ரூபாவும், பிரதமர் அலுவலகத்திற்கு 65,416,000 ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு 17,792,000 ரூபாவும் என்ற படி நிதி யொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அதேநேரம், பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 2,109,179,000 ரூபாவும் நிதி திட்டமிடல் அமைச்சுக்கு 616,306,000 ரூபாவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு 18,677,883,000 ரூபாவும், சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுக்கு 19,666,631,000 ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 8,556,559,000 ரூபாவும், உயர் கல்வி அமைச்சுக்கு 1,947,168,000 ரூபாவும், மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு 1,766,700,000 ரூபாவும், வெளிவிவகார அமைச்சுக்கு 1,874,038,000 ரூபாவும் என்றபடி அமைச்சுகளுக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இடைக்கால கணக்கறிக்கையில் இலங்கை தரைப் படைக்கு 34,545,666,000 ரூபாவும், கடற் படைக்கு 11,600,666,000 ரூபாவும், விமானப் படைக்கு 7,816,666,000 ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திற்கு 12,401,766,000 ரூபாவும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2,978,333,000 ரூபாவும் கடற்கரைப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 16,600,000 ரூபாவும் என்ற படி நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
தேர்தல் திணைக்களத்திற்கு 366,296,000 ரூபாவும், சமுர்த்தி ஆணையாளர் அதிபதி திணைக்களத்திற்கு 3,894,782,000 ரூபாவும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு 34,599,000 ரூபாவும் என்றபடி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் இந்த இடைக்கால கணக்கறிக்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சுகளுக்கும், அரசாங்க திணைக்களங்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.