அமெரிக்க ராணுவ முகாமில் வீரர் ஒருவர் வெறியாட்டத்துடன் நடத்திய துப்பாக்கிச் சுட்டில்; 12 வீரர்கள் பலியானதுடன் 30 பேர் காயமுற்றனர். இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட வீரர் ஈராக் பாதுகாப்பு பணிக்காக செல்ல தயாராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மனநல மருத்துவரும் கூட. அமெரிக்காவில் டெக்சாசில் கில்லின் அருகே போர்ட்ஹ_ட் ராணுவ முகாமில் வீரர்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில்; வந்த சக வீரர் ஒருவர் அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் இறந்தனர். 30 பேர் காயமுற்றனர். ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வீரர் மேஜர் நைடால் மாலிக் ஹசன் ( 39 ) இரண்டு துப்பாக்கிகளுடன் வந்து சுட்டதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சுடு சம்பவம் காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் ரொபர்ட் பாப்கோன் தெரிவித்துள்ளார்.