அரச துறையில் மேலும் 17,174 பட்டதாரிகளை இணைக்க தீர்மானம் – வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம்

17 ஆயிரத்து 174 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட விருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. இதில் 14 ஆயிரம் பேர் ‘ஜன சபா’ செயலாளர்களாகவும் 3 ஆயிரத்து 174 பேர் கலைப்பட்டதாரி ஆசிரியர்களாகவும் நியமனம் பெறவிருப்பதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மூவாயிரத்து 174 கலைப்பட்டதாரி ஆசிரியர்களும் எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரிய சேவையில் நியமனம் பெறவுள்ளனர். இதே வேளை ‘ஜன சபா’ செயலாளர்களை விரைவில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

‘ஜன சபா’ செயலாளர் பதவி குறித்து அமைச்சின் முகாமைச் சேவையாளர் எல். பி. ஜயம்பதி விளக்கமளிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளில் மிகவும் திறமைசாலிகளையே நாம் இந்தப் பதவியில் சேர்த்துக் கொள்ளவுள்ளோம். இவர்கள் செயலாளர்களாக மட்டுமின்றி அந்த பிரதேசத்துக்குரிய தலைவரைப் போன்றும் செயற்பட வேண்டும்.

பிரதேச செயலாளர் பிரிவின் உட்கடமைப்பு வசதிகள், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம், விளையாட்டு ஆகிய துறை களையும் மட்டுமின்றி போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதுடன் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சகல அம்சங்களையும் கையாளக் கூடியவராக இருக்க வேண்டும்.

‘ஜன சபா’ செயலாளர்களாக நியமிக் கப்படுவோருக்கு 15,250 ரூபா தொடக்கம் 25,965 ரூபா வரையிலான தொகை அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும். இவர்களது பதவி நிரந்தரமானது.

அத்துடன் ஓய்வூதியமும் கிடைக்கும் அரச ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் இவர்கள் பெறமுடியும். சாதாரணமாக எட்டு மணித்தியாலங்கள் மட்டும சேவை புரிபவராகவன்றி 24 மணித் தியாலங்களும் பொதுமக்களின் தேவையை கருத்திற் கொண்டு செயற்படுபவர்களையே நாம் இப்பதவிக்காக எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதானால் அபிவிருத்தியை ஆரம்பிக்க வேண்டுமென மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டதற்கமைய கிராமங்களை கட்டியெழுப்புவதற்கு விசேடமாக இப்பதவியை பட்டதாரிகளுக்கு வழங்க தீர்மானித்திருப்பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசாங்க பல்கலைக் கழகங்களில் இருந்தும் பட்டம் பெற்ற 22 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் இப்பதவிக்காக விண்ணப் பிக்கலாம். தெரிவு செய்யப்படுவோருக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவிலேயே நியமனம் வழங்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *