யாழ் மற்றும் வவுனியா நகரங்களை அண்மித்துள்ள பகுதிகளில் வீட்டு வாடகை சடுதியாக உயர்ந்துள்ளது. அண்மைக் காலமாக வன்னி முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு வருவதால் இருப்பிடங்களுக்கான தேவை சடுதியாக அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் வீட்டு வாடகைகளும் உயர்ந்துள்ளது. யாழ், வவுனியா நகரங்களில் ஒரு வீட்டை வாடகைக்குப் பெறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை முன்கட்டணம் கேட்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் நகரில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நிலையில் அங்குள்ள வீடுகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உறவினர்களின் கவனிப்பில் விடப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இருப்பிட நெருக்கடிக்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளது.
யாழ் மற்றும் வவுனியாவில் உறவினர்கள் உள்ளவர்கள் குறுகிய காலத்திற்கு தங்கள் உறவுகளுடன் தங்கியிருக்க முடியுமாயினும் ‘எவ்வளவு நாட்களுக்கு இப்படி மற்றயவர்களின் வீட்டில் இருக்க முடியும்’ என்கின்றனர். தற்போது பிறந்துள்ள கைக் குழந்தையுடன் யாழ் வந்துள்ள ரவி குடும்பத்தினர் தாங்கள் தனது சகோதரியுடன் இருப்பதாகவும் ஆனால் ஒரு வீடு பார்த்துச் செல்லவே விரும்புவதாகவும் கூறினார். கிளிநொச்சி வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர் அங்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதும் அங்கு சென்றுவிடுவோம் எனத் தெரிவித்தார். அரசாங்கம் உதவிப் பணமாக வழங்குவது வீட்டு வாடகைக்கே போதாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
வவுனியாவில் தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்று வாழும் மற்றுமொருவர் தெரிவிக்கையில் வாடகைக்கு வீடு எடுத்துச் செல்ல தங்களால் முடியாததால் தனது உறவினர் வீட்டு முற்றத்தில் ஒரு கொட்டிலைப் போட்டு இருக்கப் போவதாகத் தெரிவித்தார்.
jimmy
எனது உறவினர் சிறியதொரு வீடு வவுனியாவில் வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு லட்சம் முற்பணம் கொடுத்து மாதம் 5000ரூபா வாடகை. வியாபாரிகளாக வசதியுடன் இருந்தவர்கள் என்பதால் கொடுக்க முடியும். கொடுக்கிறார்கள். கஸ்டப்பட்டவர்களுக்கு அரசாங்கம் விட்ட வழிதான் வாழ்க்கையாகப் போகிறது.