இராக்கிலே பிரிட்டிஷ் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் புதிய புகார்கள் பெரும் எண்ணிக்கையில் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுவதை பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்கான அமைச்சக அதிகாரி பில் ரம்மெல் மறுத்துள்ளார். புதிதாக முப்பது புகார்கள் வெளிவந்துள்ளதாக முன்னதாக வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். அமெரிக்க துருப்பினர் கைகொண்டதாக வெளிவந்திருந்த பாலியல் துன்புறுத்தல் வழிவகைகள் போன்றவையும் புதிய புகார்களிலே பலவற்றில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்தப் புகார்களில் பல புதியவையே அல்ல என்று கூறியுள்ள அதிகாரி ரம்மெல், புகார்களில் தெரிவிக்கப்பட்டிருப்பவைதான் நடந்த விஷயங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார். பிரிட்டிஷ் துருப்புகளைப் பொறுத்தவரை அவர்கள் பரவலாகவே துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது; ஆனால் புகார்கள் ஒழுங்காக விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.