எதிர் வரும் ஜனவரி இறுதிப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாமென தேசம் நெற்றிட்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. நாளை 19 ஆம் திகதி ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் 4 வருடங்கள் நிறைவடைகின்றது எனவே நாளையின் பின்பு ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம். முன் கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டுமானால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்த பின்னரே அதற்கான அறிவிப்பை விடுக்கமுடியும். அனேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவருமென எதிர்பார்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் தேசிய தேர்தல்கள் தொடர்பாகவே பேசப்படுகிறது. கடந்த வாரம் வரை பல்வேறுபட்ட ஊகங்களையும் ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாநாட்டில் முதலில் எந்தத் தேர்தல் எப்போது நடைபெறுமென ஜனாதிபதி அறிவிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த மாநாட்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பை தவிர்த்துக் கொண்டார். நான்கு வருடங்களை நிறைவு செய்யாமல் இது குறித்த முடிவை அவரால் அறிவிக்கமுடியாது என்பதாலேயே அன்று அதிலிருந்து ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டதாகத் தெரியவருகிறது. அன்றைய மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுதந்திரக்கட்சி உயர்பீடக்கூட்டத்தில் ஆராய்ந்து விரைவில் அறிவிப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தார். நேற்றைய தினம் சுதந்திரக்கட்சியின் உயர் மட்ட அங்கத்தவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு ஜனவரி 22 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாமென ஊகங்கள் தெரிவிக்கின்றன.