புலிகள் எடுத்த அவசர முடிவுகளே இன்றைய விளைவுகளுக்குக் காரணம் – கருணாநிதி

karunanidhi.jpgவிடு தலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று முதல்வர் கருணாநிதி  கூறியுள்ளார் .

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ள கட்டுரை பின்வருமாறு

ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய குரலும் – இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் – நடத்திய அறப்போராட்டங்களும் – சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் – சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்த நிலைகளும் – ஏன்; இருமுறை ஆட்சியையே இழந்த சரித்திரச் சம்பவங்களும் –

தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள்; செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும் –

“டெசோ” இயக்கத்தின் சார்பில் – நானும், தமிழர் தலைவர் வீரமணியும், பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து; 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணிய சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டிற்கு பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு போராளிகளிடையே அடிக்கடி எழும் புயல் குறித்து விவாதித்து; அதனை நிறுத்த சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள் என்பதும்,

ஆனால் அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் தான் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை என்பதும்;

அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை இந்தியாவிற்கு திரும்பி வந்ததை வரவேற்க செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வும் – இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் விடுதலைப் படைமுகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு – தளபதிகளுக்கு – தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன் படுத்திய அளவுக்கு; இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்.

எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ; என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்தபோது கூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றதையும் – நடைபெற்றதற்கான காரணத்தையும் – நான் அல்ல; என்னைப் போன்றவர்கள் அல்ல; இதோ மவுன வலி உணர்ந்து, அதனை நமக்கு உரைக்கும் அருமை நண்பர்களாம், தமிழ் எழுத்தாளர்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தன்மானத் தோழர், கோபாலுக்கு; அண்மையில் சென்னைக்கு வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இன்றைய இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே 18-11-2009 தேதியிட்ட நக்கீரன் வார இதழுக்காக அளித்த பேட்டியில்,

“இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன். 2003-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார்.

2005-ல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.

மேலும் 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்; பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்.”

என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்;

டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்;

பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்தும்;

தொடக்க காலத்திலிருந்து போராளிகளின் துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் இந்த நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக பலியாக்கியும்;

டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம்தம்பிமுத்து, கலாதம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும், மரணக் குழியிலே தள்ளியும்;

தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்தப் போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது.

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. இலங்கையில் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் – 9-4-2004 அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் – பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும், 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக – நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டது மாத்திரமல்ல – முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் – நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் – நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களை இழந்த அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சைகளாக, பராரிகளாகச் செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையைத் தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரனின் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதி தான் என்ன? இப்படி எத்தனை குடும்பங்கள்? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து – தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் – தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுத நேரிட்டது. வாழ வேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் இதனை எழுதுகின்றேன்.

என்னையும், மாறனையும் 15-3-1989 அன்று; அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து – விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப் பிரச்சினை குறித்தும் இரண்டு நாள் உரையாடி – அதுபற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்கு தெரிவித்து – நீங்களும், மாறனும், வைகோவும் தேவைப்பட்டால் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு – பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து விரிவாகப் பேசுங்கள், எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள், இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை நான் இங்கிருந்து செய்து தருகிறேன், அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்ன என்பதை விவரமாகத் தெரிந்து கொள்ளுங்கள், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் – என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அந்த சம்பவமும் ஈழ விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்பதை உலகம் மறந்து விடவில்லை.

இதோ ஒரு நிகழ்ச்சி. 17-11-2005 அன்று இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 13 பேர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் முக்கியமாக போட்டியிட்டார்கள். அந்த தேர்தலை சிறுபான்மையினரான தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப்புலிகள் அறிவுறுத்தினர். அந்த தேர்தலின்போது, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார் ரணில். அப்போது ரணில் சொன்னதைத் தான் இப்போதும் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியிலும், “2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2005-ம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில், இலங்கையின் ஐந்தாவது அதிபராக, பிரதமராக இருந்த ராஜபக்சே வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது – விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருணாநிதி வேதனைக்கு என்ன காரணம்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு தரப்பினரும் ஈழம் குறித்த தங்களது கருத்துக்களைக் கவிதைகளாக பதிவு செய்துள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் முதல்வர் கருணாநிதி தனது வேதனையை வெளிப்படுத்தி தற்போதைய கடிதத்தை முரசொலியில் எழுதியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • vinotharan
    vinotharan

    ஜயா கருணாநிதி அவர்களே எமக்கு இந்த விவகாரம் சரியாக மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து கொண்டோம் பிரபாகரனால் தமிழர்க்கு ஒரு விடிவும் வராது என்பதையும் நன்றாக அறிந்து கொண்டோம் ஏற்றுக் கொள்கிறேன் தாங்கள் எமத தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டம் சம்பந்தமான நிலைப்பாட்டை மாற்றியிருக்கவே முடியாது.

    பிரபாகரனால் ஏற்ப்படுத்தப்பட்ட சகதி இது ஆனால் இன்று அரசியல் தீர்வுக்கு எடுத்துச்செல்லும் பாதையினை இந்தியா திறக்க வேண்டும் இதற்கான ஏற்ப்பாடுகளை செய்யுங்கள்.

    புலிகள் சார்பானவர்கள் எதற்கு எடுத்தாலும் அரசை எதிர்பது என்ற கோசத்தால் இனிமேல் தமிழர்க்கு அரசியல் தீர்வு கிடைக்காமல் செய்வதில் அக்கறையாக இருப்பதையும் கவனிக்க இந்தியா தமிழரின் நிலைப்பாடு சம்பந்தமாக என்ன செய்ய தீர்மானித்துள்ளது.

    Reply
  • kovai
    kovai

    கருணாநிதி அவர்களே!
    மகிந்தவை விட ரணில் நல்லவரா? கனிமொழிக்கு கிடைத்தது அப்ப வெறும் தகர டப்பாவா?

    அது சரி “டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும்….”

    வரலாறு சொல்லுங்கோ யாராவது? யார் இவர்கள்? கருணாநிதிக்கு பேர் சொல்லிக் கொடுத்தது யார்?

    Reply
  • palli
    palli

    சோதி கோவையின் கேள்விக்கு உங்களிடம்தான் பதில் உள்ளது முடிந்தால் சொல்லுங்க;

    Reply
  • Thamil
    Thamil

    நாங்கள் மறந்து போன விடயங்களை கூட மறக்காமல் இருக்கும் அரசியலில் அனுபவமிக்க பழம் என்பதை மீண்டும் தெலுங்கர் கருணாநிதி தமிழருக்கு சொல்லி இருக்கிறார்

    Reply
  • செல்வன்
    செல்வன்

    இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ. நெடுமாற‌ன் ‌விடுத்த அவ்வறிக்கையில்,

    ‘’விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீது மு‌ற்‌றிலு‌ம் உ‌ண்மை‌யி‌ல்லாத கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்களை‌க் கூ‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌நீ‌ண்ட அ‌றி‌க்கை ஒ‌ன்‌றினை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

    1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார்.

    ஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா,

    பிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார்.

    அந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்ற முறையில் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

    2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறியுள்ள பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார்.

    விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது.

    இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை.

    இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இத்திட்டத்தை பரிசீலனை செய்து ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை அளிக்க ஒப்புக்கொண்டனர்.

    அதற்காக உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் பிறநாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்பின்னரே மாற்றுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமென பிரபாகரன் கருதினார்.

    அதற்கிணங்க புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    பிறகு டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறைப்பற்றி நேரில் கண்டறிந்தது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார்.

    இந்த உண்மையை ரணில் அடியோடு மறைத்து கூறிய பொய்யையே கருணாநிதி திரும்பவும் கூறியுள்ளார். புலிகள் அளித்த மாற்றுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கள அரசு ஏற்க மறுத்த காரணத்தினால்தான் பேச்சுவார்த்தை முறிந்தது.

    பேச்சுவார்த்தை தொடங்கியபோதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக கூட்டாட்சி முறையை பரிசீலிக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விட்டுக்கொடுத்தல் ஆகும். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணமே தவிர பிரபாகரன் காரணம் அல்ல.

    2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன் நின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால் விடுதலைப்புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை.

    அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப்போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது. பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஒஸ்லோ ஆகிய நான்கு இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    ஆனால் இரண்டாம் முறையாக டோக்கியாவில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைக்காதது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும்.

    1989ஆம் ஆண்டில் ராசீவ் காந்தி கருணாநிதியையும் மாறனையும் அழைத்துப் பேசி பிரபாகரனுடன் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசி முடிவு காண வழிகாணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார்.

    அதற்கிணங்க இவர் செய்தது என்ன? இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியதற்காக வைகோ அவர்கள் மீது அடாத பழியை இவர் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்யச் சதி நடைபெறுவதாகவும் புலம்பினார். இத்தகையவரா அப்பிரச்சினை தீருவதற்கு வழிகாணுபவர்?

    பிரதமராக வி.பி.சிங் இருக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப இந்திய அரசு நடந்துகொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது இவர் செய்தது என்ன?

    ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு அதைச் சீர்குலைத்தவர் கருணாநிதியே ஆவார்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர்.

    ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார்.

    இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார்.

    உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை.

    சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்த‌ப் பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர்.

    தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை. திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப்போனப் பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார்.

    அவருடைய சொந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டையைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்.

    இலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளை அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன்வராமல் மறைப்பதற்கு துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை.

    உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப் போவதுமில்லை’’என்று தெரிவித்துள்ளார்.

    Reply
  • BC
    BC

    இந்த பிரபாகரனை காப்பாற்றும் நெடுமாற‌னின் அறிக்கை மின் அஞ்சல் மூலம் பலருக்கு அனுப்பபட்டதாக அறிந்தேன்.புலிகளின் துரோகத்தை தவறை இதனால் மறைக்க முடியாது.

    Reply
  • kovai
    kovai

    தேசம்நெட்காரருக்கு தெரியாத “டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கமும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரமும்( TELO தலைவர் ஸ்ரீக்கு முன்னா, பின்னா, சமகாலத்திலா) கருணாநிதிக்கு தெரிந்தது எவ்வாறு? விவகாரம் பிடிச்ச விசயமில்லையா?

    Reply
  • palli
    palli

    கோவை ஆதங்கபடுவதில் அர்த்தம் இல்லை; எமக்கு தெரியாத பல விடயங்கள் இயக்கம் என்னும் புற்றில் உண்டு, அதைதான் குலனின்
    உலகமயமாக்குதலில் நாம் தெரிந்துகொள்ள முனைகிறோம்; நீங்களும் வாருங்கள்,

    Reply
  • skay
    skay

    /“டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கமும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரமும்( TELO தலைவர் ஸ்ரீக்கு முன்னா, பின்னா, சமகாலத்திலா) கருணாநிதிக்கு தெரிந்தது எவ்வாறு? / Mano Master was joined TELO late 1983 and left early 1984 with Sunthan and Ramesh. He’s killed in late 1984 by LTTE. I think குலசேகரம் தேவசேகரமும் – Obrai Thevan was joined TELO 1978 or before and left after Thangthurai and Kuttimani were arrested. He started TELA in 1982. Actually Thangathurai wants to use this name for TELO militray wing.

    Reply
  • kovai
    kovai

    நண்பர் ஸ்கே!
    ஆக அந்த இருவரும் டெலோ இயக்கத்தவரோ அல்லது தலைவரோ அல்ல. கருணாநிதியின் தன் செல்லப்பிள்ளகளான டெலோவை பற்றி எவ்வாறு அறியாது போனார்?

    /விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீது மு‌ற்‌றிலு‌ம் உ‌ண்மை‌யி‌ல்லாத கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்களை‌க் கூ‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌நீ‌ண்ட அ‌றி‌க்கை ஒ‌ன்‌றினை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்./

    பழ. நெடுமாற‌ன் சொல்லுறது சரியா? தப்பா?

    Reply