இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்றும் நாட்டின் நிருவாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்று முஸ்லிம் சமூகத்தை அவமதித்து ஏளனம் செய்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா என கண்டனம் தெரிவித்திருக்கும் மேல்மாகாண ஆளுநர் அலவிமௌலானா அவரால் வெட்டப்படும் குழியில் எவரும் விழுந்து விடக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
தற்போது உருவாகியுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் மக்களின் கவனத்துக்கென ஆளுநர் அலவிமௌலானா ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது நமது நாட்டில் நடந்து முடிந்துள்ள யுத்தத்தினாலும், பல்வேறுபட்ட பொருளாதாரச் சிக்கல்களினாலும் திணறிக்கொண்டிருக்கும் எமது மக்கள் இன்று படிப்படியான முன்னேற்றங்களை கண்டு வருகின்றனர். சமூகங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இனவாத வித்துக்களைக் களைந்து ஒரே நாடு ஒரே மக்கள் என்ற விழிப்புணர்விற்கான செயற்திட்டங்களை அரசு முனைப்புடன் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் முன்னேற்றத்தில் சிந்தித்தேனும் அக்கறை கொள்ளாத சக்திகள் மீண்டும் மக்களை குழப்பி சதிசெய்து, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றக் கனவு கண்டு கொண்டிருக்கிறது. மக்களாகிய நீங்கள் இந்த சதி வலையில் சிக்கிக் கொள்ளாது சதிகாரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் உங்கள் வசம் மிக விரைவில் வந்தடையும்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறிது காலத்துக்கு முன்பு வெளியிட்ட கருத்து சிறுபான்மை மக்களிடையே பெரும் மனக் கிலேசத்தினை ஏற்படுத்தியதை நாம் மறந்து விடமுடியாது. அவர் படைத் தளபதியாக இருந்த காலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்று ஏழ்மை செய்தார். அவர்கள் நிர்வாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்றும் அவதூறு செய்தார். இவர் வெட்டிய குழியில் எவரும் விழுந்து விடக்கூடாது.
ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற ரவூப் ஹக்கீம், மனோகணேசன் போன்றவர்களும் அதிருப்தி அடைந்தவர்களாக அன்று காட்டமான அறிக்கைகளை விட்டிருந்தனர் என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்குமான ஆக்கபூர்வமான கருத்துகளை இவர்களினாலும் இன்னும் முன்வைக்க முடியாமல் உள்ளது. எவ்வழியிலேனும் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டால் போதும் என்ற மனப்பான்மையை எதிர்க்கட்சிகளிலும், சுயநலத் தலைவர்களிடத்தும் மேலோங்கி இருப்பதை அறிவு சார்ந்த மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.
இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு,மேற்கு என்ற புவியியல் கோடுகளை களைந்து நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறும் காலம் உதயமாகியுள்ளது. சுதந்திர இலங்கையில் சமூகங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலுப்பெறச் செய்வதற்கும் நாடு எவரிடமும் தங்கி நிற்காது. பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைவதற்கும் நாட்டின் அனைத்து மக்களும் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற மனப்பான்மையோடு செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
2001 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசினால் பேசப்பட்ட போலி சமாதானத்தில் முஸ்லிம் சமூகத்தை மோசமாகக் கையாண்டதில் சிறுபான்மை மக்களிடையே பெருமளவிலான எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பை சமாளிக்கத் தக்க வகையில் முஸ்லிம் தரப்பை மூன்றாம் தரப்பாக்கி, ரவூப் ஹக்கீமை பேச்சு மேசைக்கு ஓட்டிச் சென்றதை ரவூப் ஹக்கீம் மறந்தே போய்விட்டார்.
புலிகளினால் முஸ்லிம் சமூகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த காலத்தில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நியாயத்தினை முதன்மைப்படுத்தி மர்ஹும் அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், ரணிலின் தலைமையை ஏற்றுக் கொள்ளவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டுக்குள்ளோ செல்லவேயில்லை. அவ்வாறு மர்ஹும் அஷ்ரப்பினால் ஒதுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டில் ஹக்கீம் சங்கமமாவதால் முஸ்லிம் சமூகம் என்ன நன்மையடையப் போகிறது? என்பதை ஹக்கீம் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்லாதிருப்பது ஏன் என்பதை முஸ்லிம் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.
முஸ்லிம் சமூகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் நன்மைகளை விட திரைமறைவில் மோசமான கழுத்தறுப்புகள் நடத்தப்பட்டதை இங்கு பட்டியலிடலாம். துயரம் என்னவென்றால் ஹக்கீம் கோடரிக் காம்பாகி இருப்பதுடன் தனது சுயநல அரசியலுக்காக முஸ்லிம்களை கறிவேப்பிலையாக்கிக் கொண்டிருப்பதேயாகும்.
சியோனிசக் கதிரையில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களை இன்று முஸ்லிம்கள் நன்கு இனம் கண்டு வைத்துள்ளனர். வரலாறு இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்பதை இவர்கள் மறந்து விடக்கூடாது.