வடக்கிலிருந்து இன்று பசில் விசேட அறிவிப்பு முக்கியமான விடயம் என்கிறார் அமைச்சர் சமரசிங்க

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று சனிக்கிழமை வடக்கிற்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை சந்திக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அங்கிருந்து விசேட அறிவிப்பொன்றை விடுக்கவிருப்பதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவலை வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க, எனினும் வடக்கில் எங்கிருந்து பசில் ராஜபக்ஷ இந்த அறிவிப்பை விடுக்கவிருக்கிறார் என்பதை பாதுகாப்புக் காரணம் கருதி வெளியிட முடியாதென்றும் மறுத்து விட்டார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பசில் ராஜபக்ஷ வடக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவர் என்ற வகையில் நாளை (இன்று சனிக்கிழமை) வடக்கிற்குச் சென்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து பேசியதன் பின்னரே அவர் இந்த அறிவிப்பை விடுக்கவுள்ளார்.இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தக் குறுகிய காலப் பகுதிக்குள் நினைக்க முடியாத அளவுக்கு உரிமைகளை வழங்கும் முக்கியமானதொரு அறிவிப்பாக இருக்கும். அவர் அந்த அறிவிப்பை விடுத்ததன் பின்னர் அதன் விபரங்கள் தெரியவரும் என்று மகிந்த சமரசிங்க இதன்போது கூறினார்.

இதேநேரம், மீள்குடியேற்றம் தொடர்பாக இங்கு விளக்கமளித்த அமைச்சர் வெள்ளிக்கிழமை வரை வவுனியா (127,495), யாழ்ப்பாணம் (2,034), மன்னார் (970), திருகோணமலை (2,762) முகாம்களிலும் மற்றும் 7 வைத்தியசாலைகளிலும் (தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருபவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் 3,067 பேர்) மொத்தமாக உள்ள ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 328 பேர் (136,328) இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளனர்.கடந்த வாரத்தில் 143,161 ஆக இருந்த தொகை இவ்வாரம் 136,328 ஆக குறைவடைந்துள்ளது. ஒருவார காலப்பகுதியில் 6500 இற்கும் 7 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் மீள்குடியேற்றம் மேலும் அதிகரிக்கும். அத்துடன் இலங்கை வந்திருந்த மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா. உதவி செயலாளர் ஜோன் ஹோம்ஸ், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் திருப்தி வெளியிட்டுள்ளார். ஐ.நா.விடமிருந்து இம்மாதிரியான வார்த்தைகள் வெளிவருவது இதுவே முதற்தடவை. இதேநேரம், இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த ஓரிரு நாட்களில் 50 சதவீதத்தைத் தாண்டும் என்பதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்குள் தெளிவாக பெரும்பான்மையானோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருப்பர் என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *