சமையல் எரிவாயுவை சூத்திரத்தின் பிரகாரம் விற்பனை செய்வதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய அரசாங்கம் 1.7 பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று ஷெல்காஸ் நிறுவனம் விலை மாற்ற சூத்திர உடன்படிக்கையின் கீழ் மத்தியஸ்த நியாய சபைக்கு முறைப்பாடு செய்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக சட்ட மா அதிபரை தொடர்பு கொண்டு தேவையான அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கூறப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலையை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்று ஷெல் காஸ் நிறுவனம் கேட்கிறது. ஆனால் கணக்கிடுவதில் ஏற்படும் வித்தியாசங்கள் காரணமாக அவர்கள் கேட்கும் விலை ஒரு போதும் கிடைப்பதில்லை என்று வர்த்தக, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, கூட்டுறவு மற்றும் பாவனையாளர் அலுவல்களு க்கான அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்.
சமையல் எரிவாயு விலை வருடத்துக்கு ஆறு முறை மாற்றத்துக்குள்ளாவதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விலை நிர்ணய குழு, சமையல் எரிவாயு நிறுவனங்கள் வழங்கும் தகவல்களுக்கேற்ப எரிவாயு விலையை தீர்மானிப்பதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு விலையை தீர்மானிக்கும் விடயத்தில் அரசாங்கம் தலையிடுவது தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. ஊடகமொன்று மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தவறான கருத்து காரணமாக அரசாங்கமே சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதாக மக்கள் நினைக்கின்றனர். சமையல் எரிவாயு விலையை கம்பனிகளின் தீர்மானத்துக்கு விடுவதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என்பதே அந்த ஊடகத்தின் நோக்கமாக இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.