மலேசியப் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தவர்கள் (பெரும்பான்மையானோர் தமிழர்கள்) மத்தியில் செல்வாக்கைத் தேடுவதற்கு முயற்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராகிம், இலங்கையில் தமிழ் அகதிகள் தொடர்பாக கொழும்பு மீது குற்றச்சாட்டு சுமத்தியதாக மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியதையடுத்து கடுமையான தர்க்கம் இடம் பெற்றது. இலங்கை அரசு அகதிகளின் நலன்களை புறக்கணித்ததாக தெரிவித்ததன் மூலம் இந்திய சமூகத்தவரின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக பிரதி வெளி விவகார அமைச்சர் கோகிலன்பிள்ளை குற்றம் சாட்டியதாக போர்னாமா செய்திச் சேவை தெரிவித்தது.
இலங்கையின் நெருக்கடியை உள்நாட்டு விவகாரமாகவே மலேசியா பார்ப்பதாகவும் மலேசிய அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் இலங்கைப் பிரச்சினை அதன் உள்நாட்டு விவகாரம் என்றும் கோகிலன் பிள்ளை கூறியுள்ளார். அகதிகளின் பாதுகாப்பு, நலன்கள் தொடர்பாக மனித உரிமைக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படப் போவதாக ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு இலங்கை அரசு உறுதியளித்திருப்பதாகவும் கோகிலன் பிள்ளை மலேசியப் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
செனட்டர் பி.இராமசாமி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்திருக்கிறார். இலங்கையில் மோதலின் போது பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டமை மற்றும் 3 இலட்சம் அகதிகளின் அவல நிலை தொடர்பாக கொழும்பை மலேசிய அரசு ஏன் கண்டிக்கவில்லை என்று இராமசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
மலேசியாவும் இலங்கையும் நட்பு நாடுகள் எனவும் இலங்கையின் முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவளித்ததாகவும் கூறிய கோகிலன் பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் விருப்பங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.