ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுவேட்பாளர் யார் என்பதை நாளை புதன்கிழமை கூட விருக்கும் முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் அறிவிக்கப்படவிருக்கின்றது. எதிரணி பொது முன்னணியின் பொதுவேட்பாளராக பெரும்பாலும் ஜெனரல் சரத் பொன்சேகாவே தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஜே.வி.பி.யும் இணக்கப்பாடு கண்டிருப்பதாகவும் நாளை புதன் கிழமை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் ஜே.வி.பி.யும் கலந்துகொள்ளவிருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு நேற்று மாலை வெளிவரும் எனத் தெரியவந்ததையடுத்தே பொதுவேட்பாளரை நாட்டுக்கு பகிரங்கமாக அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் இந்த விசேட நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளதும் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். பொது வேட்பாளர் யார் என்பதை அறிவித்த பின்னர் அவரை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டத்தை பாரிய அளவில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.