புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாமை மற்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எதிர்த்தே தாம் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகள் தலையிடுவதன் காரணமாக, நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் இழக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இந்திய மற்றும் உலகளாவிய இராணுவத்தினரை ஈடுபடுத்தி, தமிழ் மக்களை போராட்டத்தை இந்த அரசாங்கம், நசுக்கியுள்ளது. இதனை வெற்றியாக அரசாங்கம் தெரிவித்தாலும், அது தேசத்தை நாசமாக்கும் செயற்பாடு என விக்கிரமபாகு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தாயகக்கோட்பாட்டை, சீர்குலைத்து, தமிழ் மக்களை பிரித்தாளும் முறையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக, தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதுடன், பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
சிங்கள பிரதேசத்திலும் மக்கள் கொல்லப்படுவதுடன், தமிழர்களுக்காக குரல்கொடுக்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது. இந்தநிலையில் வாழ்க்கை சுமையும் அதிகரித்துள்ளமையால், சிங்கள இளைஞர்களே ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.