மழையால் ஸ்தம்பிதம்சவூதியில் பெய்து வரும் கடும் மழையினால் ஜெட்டா நகரிலுள்ள பாலத்தின் கீழ்தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான அகதிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் விநியோகம் கடந்த இரு நாட்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹுசைன் பைலா தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் தங்கியுள்ள இப்பாலத்தை அண்டிய பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் கீழ் கடந்த சில வாரங்களாகத் தங்கியிருக்கும் இந்த மக்களுக்கு உணவு மற்றும் குடிநீரை விநியோகிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ள போதிலும் இவ்வெள்ளப் பெருக்கினால் அப்பாலத்திற்குச் செல்லும் வீதி துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரு தினங்களாக அங்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகம் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டில் ஆரம்பத்தில், அந்நாட்டின் விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் உடனடியாக சொந்த நாடுகளிற்குச் செல்லுமாறு அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இவர்கள் அப்பாலத்தின் கீழ் தங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.