இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழலை தேர்தல் ஆணையாளர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று தாம் வலியுறுத்திக் கோரவுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில், இத் தேர்தலை கண்காணிப்பது தொடர்பில் திட்டமிட்டு வருகின்றோம். 10,500 தேர்தல் தொகுதிகளில் ஒருவர் வீதம் நியமித்து கண்காணிக்கவுள்ளோம்.எமது கண்காணிப்புக்கு சக கண்காணிப்பு அமைப்புகளின் உதவி பெறவுள்ளதுடன் சர்வதேச கண்காணிப்பாளரையும் இணைத்துச் செயற்படவுள்ளோம்.
இவ்வாரம் தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளோம். இதன்போது இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளோர் வாக்களிப்பது மற்றும் இடம்பெயர்ந்து பல்வேறு பகுதியில் வதிவோர் வாக்களிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.வாக்களிப்பின் போது அடையாள அட்டை இன்மை பிரச்சினை குறித்தும் ஆராயவுள்ளோம். இடம்பெயர்ந்தவர்கள் எங்கு வாழ்ந்தாலும் பதவின்மையினால் வாக்களிக்க முடியாது போகும் சூழல் உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென கோரவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.