ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் இந்திய விஜயம் பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.சமய யாத்திரையை மேற்கொண்டே அவர் இந்தியாவுக்குச் சென்றிருப்பதாகக் கூறப்பட்டாலும் மும்பைக்கு அவர் சென்றிருப்பதாகவும் பீகாரிலுள்ள புத்தகாயாவுக்கு அவர் விஜயம் மேற்கொள்ளக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புதுடில்லி சென்று அவர் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பாரென்பது பற்றித் தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால், புதுடில்லியில் இந்தியத் தலைவர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அவர் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவை கோரியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை அவர் நாடு திரும்புவாரென அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியிருந்தன.
இந்தியாவுடன் நெருக்கமாக செயற்படுவதற்கான விருப்பத்தை பொன்சேகா பல வழிகளில் வெளிப்படுத்தி வருகிறார். இந்திய இராணுவத்துடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் இந்தியாவின் சகலவற்றையும் நேசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ராஜபக்ஷக்கள் பக்கம் இந்தியா சாய்ந்திருப்பதாக இலங்கையின் எதிர்க்கட்சிகள் நம்புகின்ற நிலையில், இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த பொன்சேகா விரும்புவதாகத் தென்படுவதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அவரின் தீவிரமான பெரும்பான்மை (சிங்கள) தேசியவாத கருத்துகளையிட்டு அவர் தொடர்பாக இந்தியா ஐயுறவுகளைக் கொண்டிருப்பது அறிந்ததொன்றாகும். ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முற்றிலும் வித்தியாசமான தொனியில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இது டில்லி தொடர்பான இரகசியத் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ராஜபக்ஷவின் அரசாங்கத்திடமிருந்து தனக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என பொன்சேகா கவலையடைந்திருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனக்கு வேண்டிய பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க அவர் அங்கு சென்றிருக்கலாமெனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.