இந்த நாட்டில் எவ்வளவோ நல்ல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சிலர் இந்நாட்டை பிழையான நாடாக உலகிற்குக் காட்ட முயற்சி செய்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலியில் தெரிவித்தார்.
நாட்டை எவ்வளவு தான் அபிவிருத்தி செய்த போதிலும் சமூகத்தில் நற்பண்புகள் வீழ்ச்சி அடையுமாயின் அந்த அபிவிருத்திகள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும். அதனால் நற்பண்புகள் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதை எமது கடமையாக கருதி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில், அன்றைய கால கட்டத்தில் காணப்பட்ட மிசனறி பாடசாலைகளுக்குப் பதிலாகவே சங்கமித்தா மகளிர் வித்தியாலயம், ஆனந்தா, நாலந்தா, விசாகா கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. இக் கல்லூரிகளின் ஊடாக நற்பண்புகள் நிறைந்த, நாட்டுப்பற்று மிக்க மனிதர்களின் உருவாக்கமே பிரதானமாக எதிர் பார்க்கப்பட்டது. இந்த நாட்டில் எவ்வளவோ நல்ல மனிதர்கள் வாழுகின்றார்கள். எவ்வளவோ சிறப்பான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் சிலர் இவற்றைக் கண்டு கொள்ளுவதில்லை. அவர்கள் எல்லாவற்றையுமே தவறாகவே பார்க்கின்றனர். அதனால் அவர்களுக்கு எல்லாமே குறையாகவும், தவறாகவுமே தெரிகின்றது. இவர்கள் தான் இந்நாடு குறித்து வெளிநாடுகளில் பிழையாகக் கூறி மகிழ்ச்சி அடைகின்றனர். இங்கு ஒன்றும் நடப்பதில்லை. எல்லாமே பொய் என்று கூறி அவர்கள் அகமகிழ்கின்றனர்.
இங்கு பல இன, மத மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் எந்த பிரச்சினையுமே இல்லை. அவர்கள் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக உள்ளனர். இதேவேளை “சார்க்” மாநாட்டில் பங்கு பற்ற இங்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி “ஒரு வைபவத்தில் பல மதங்களின் ஆசீர்வாதம் இடம்பெறும் நிகழ்வை தாம் வெறெங்கும் கண்டதில்லை” என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு உயர் பண்புகள் நிறைந்து காணப்படும் மக்கள் வாழும் கெளரவமான நாடு இது. என்றாலும் தவறான செயல்களில் ஈடுபடக் கூடிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதற்காக முழு சமூகத்தையும் குறை கூற முடியாது. தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை திருத்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதேநேரம் போதைப் பொருள், துஷ்பிரயோகம், பாதாள உலகம் என்பன நாட்டை சீரழிக்கப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவற்றைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் செயற்படுவது அவசியம். சில பெண்கள் சம உரிமை கோருகின்றனர். இந்த கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இக் கோரிக்கையை விடவும் மேலானவர் களாகவே பெண்களை நான் பார்க்கின்றேன். எம் தாய்மாரை நாம் புனிதமானவர்களாகத் தான் பார்க்கின்றோம். அதன்படி பெண்களைப் புனிதமானவர்களாகவே நான் கருதுகின்றேன்.