இலங்கையில் என்றும் மில்லாத அளவுக்கு வெளிநாட்டு கையிருப்பு சுமார் 5200 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இவற்றில் ஒரு பகுதியை கையிருப்பாக தங்கத்தை வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படியே தங்கத்தைக் கொள்முதல் செய்ததாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் கையிருப்பிலுள்ள தங்கம் பற்றி ஒவ்வொருவரும் தமக்கு வந்ததெல்லாம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றில் எவ்வித உண்மையுமில்லை எனக் கூறிய ஆளுநர், எமது அயல் நாடான இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன. வைத்திருப்பதில் ஆர்வமும் காட்டுகின்றன.
பணத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஈடுசெய்வதற்கு தங்கத்தின் கையிருப்பு வெகுவாக உதவிபுரியும் என்றும் கூறினார்.வன்னியில் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். இதன் உண்மைநிலை என்ன? என ஆளுநரிடம் கேட்டபோது;
கைப்பற்றப்பட்ட தங்கம் ஒருபோதும் மத்திய வங்கிக்கு நேரடியாக கிடைப்பதில்லை. அவற்றுக்கு ஒரு சட்டரீதியான நடைமுறைகள் உள்ளன. நீதிமன்றத்தினூடாகவே அவை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்படும். அவ்வாறு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என கேட்டபோது; இதுவரை அவ்வாறான நடைமுறைகள் எடுக்கப்படவில்லை என்றார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் நிதி பற்றி கேட்டபோது; சர்வதேச நாணயம் எமக்கு வழங்குவதாக கூறிய நிதியை வழங்கிவருகிறது. எமது இலக்கை சரியான முறையில் பூர்த்தி செய்வதற்கு முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.