நலன்புரி நிலையங்களிலுள்ளோருக்கு சுதந்திரமாக நடமாடும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இதுவரை 22,443 பேர் வெளியில் சென்றுள்ளதுடன் அவர்களில் 9,762 பேர் மீளத் திரும்பியுள்ளதாக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு வெளிச்செல்வோர் 15 நாட்களுக்குள் மீளத்திரும்பிவிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளதாக வெளியிடப்படும் பிரசாரங்களை முற்றாக மறுத்த அமைச்சர் அக்கூற்று முற்றிலும் தவரானதெனத் தெரிவித்ததுடன் அத்தகைய எந்த நிபந்தனைகளையோ, அழுத்தங்களையோ எந்த அதிகாரிகளும் பிரயோகிக்கவில்லையெனவும் உறுதிபடக் கூறினார். அதேவேளை, நேற்றைய கணிப்பீட்டின்படி இன்னும் 1,12,062 பேரே எஞ்சியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, நேற்றைய தினமும் 1096 பேர் பூநகரிப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர், எவர் எத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டாலும் மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடிக் கவனத்தைச் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
சுதந்திரமாக நடமாடும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நலன்புரி முகாம்களிலிருந்து முதலாவது நாள் 9143 பேர் வெளியில் சென்றதுடன் 5020 பேர் மீளத் திரும்பிவிட்டனர். இரண்டாவது நாளில் 6,900 பேர் வெளியில் சென்றதுடன் அதில் 1,992 பேர் மீளத்திரும்பியுள்ளனர். மூன்றாம் நாளான நேற்று முன்தினம் 6399 பேர் வெளியில் சென்றதுடன் 2766 பேர் மீளத்திரும்பிவிட்டனர்.