அரசியல் நடவடிக்கையை புதுப்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது இந்தியா

smkrishnaindianforeignminis.jpgஇலங் கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட்டு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறுவதை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய பாராளுமன்றத்தின் மேற்சபையான மாநிலங்கள் அவையில் (ராஜ்யசபை) நேற்று அறிக்கையொன்றை விடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்களுக்கு நிவாரண உதவி வழங்க இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விபரித்ததுடன் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்படுவதைப் பார்ப்பதில் இந்தியா ஆர்வமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

“இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதில் நாம் தொடர்ந்து இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.வட இலங்கையின் அண்மைய நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை விடுத்த கிருஷ்ணா, இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் பேரின் உடனடி மனிதாபிமானத் தேவைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான தேவையாக இருந்ததாகவும் அவர்களின் சொந்த வதிவிடங்களில் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து இந்தியா தனது கவலையையும் அக்கறையையும் தெரியப்படுத்திய பின்பே இடம்பெயர்ந்தோரில் அதிக தொகையினரை 180 நாட்களுக்குள் மீளக்குடியேற்ற இலங்கை அரசாங்கம் இணங்கியதாகவும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கிருஷ்ணா கூறியுள்ளார். இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்படுவதைப் பார்க்க அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. அந்த நடவடிக்கைகள் தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல சமூகங்களினதும் நியாயபூர்வமான நலன்கள், அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கை கட்டமைப்புக்குள் இவை இடம்பெறுவதைப் பார்க்க இந்திய அரசு ஆர்வமாக இருக்கிறது என்றும் கிருஷ்ணா மேலும் கூறியுள்ளார்.

4 பக்க அறிக்கையை வாசிக்க கிருஷ்ணா ஆரம்பிப்பதற்கு முன்னர் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லக்கூடிய அர்த்த புஷ்டியுடன் கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கிருஷ்ணா தனது உரையில் கூறினார். இந்த நடவடிக்கைகளில் மாற்றம், மறுசீரமைப்பு தொடர்பாக தொடர்ந்தும் அவர்களுடன் (இலங்கை) நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தோரில் அரைவாசித் தொகையினர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1 இலட்சத்து 45 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கான பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. 2010 ஜனவரி இறுதியில் இடம்பெயர்ந்த சகலரும் மீளக்குடியமர்த்தப்படுவார்களென எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. சகலரும் மீளக்குடியமர்த்தப்படுவதை உறுதி செய்வதற்கு இலங்கை அரசுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வுக்காக 500 கோடி ரூபாவை இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணியில் 4 இந்தியக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. நிவாரணப் பொருட்கள், அவசரகால கள வைத்தியசாலை வசதிகள் என்பன வழங்கப்பட்டன. 2600 தொன் புகலிடப் பொருட்கள் உட்பட மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டது என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *