ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க இன்று திங்கட்கிழமை தனது எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எஸ்.பி.திசாநாயக்க ஆதரவளிப்பாரென ஊகங்கள் வெளிப்படுத்தப்படும் நிலையில் இன்று செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சன்டே ரைம்ஸ் நேற்று ஞாயிறு மாலை தெரிவித்தது.
இதேவேளை, ஹங்குரான்கெத்தவிலுள்ள திசாநாயக்கவின் இல்லத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி.திசாநாயக்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் வெலிசறையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பிரதம அமைப்பாளரான எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொள்ளவில்லை. தனது தீர்மானத்தை அறிவிப்பதற்காக இன்று திங்கட்கிழமை திசாநாயக்க கொழும்பில் செய்தியாளர் மாநாட்டைத் திட்டமிடுவதாக அவரின் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சன்டே ரைம்ஸ் தெரிவித்தது. எஸ்.பி.திசாநாயக்க தற்போது மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்திருந்த எஸ்.பி.திசாநாயக்க பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.