இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.

3-test.jpgஇலங் கைக்கு எதிரான 3 வது டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் சகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய, இலங்கை அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 393 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 726 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா 333 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 3 ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பரணவித்தாரன 8 ஓட்டங்களுடனும், டில்ஷன் 3 ஓட்டங்களுடனும் ஆட்டத்தைத் துவங்கினர். 4 ஆம் நாள் ஆட்டம் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தலைவர் தோனி எதிர்பார்த்தார்.

அவரது எதிர்பார்ப்புக்கு பலனும் கிடைத்தது. ஆரம்பம் முதலே ஹர்பஜனும், பிரக்யான் ஓஜாவும் பந்து வீசினர். இன்னிங்ஸின் 9 வது ஓவரிலேயே இதற்கு பலன் கிடைத்தது. ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி டில்ஷானை ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 16 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து பரணவித்தாரனவுடன் அணியின் தலைவர் சங்கக்கார ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் பொறுமையாக விளையாடி இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்தனர். பரணவித்தாரன நிதானமாக விளையாடி அரைச் சதம் எடுத்தார். அவர் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளையில் ஸ்ரீசாந்த் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சங்கக்காரவுடன் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஜோடி சேர்ந்தார்.

ஜயவர்தன-சங்கக்காகர ஜோடி, அனுபவ ஜோடி என்பதால் தோனி பந்து வீச்சை மாற்றி மாற்றி இருவரையும் ஆடுகளத்தில் நிலைத்திருக்க விடாமல் தடுக்க முனைந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஜயவர்தன விக்கெட்டை சகீர் கான் வீசிய பந்து பறித்தது. அவர் 12 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தார்.

இதைத் தொடர்ந்து ஆடவந்த சமரவீரவும் ஓட்ட கணக்கைத் துவங்காமலேயே சகீர் கான் பந்தில் வீழ்ந்தார். பின்னர் வந்த மெத்யூஸ் 10 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

4 ஆம் நாள் ஆட்டதிலேயே இலங்கையை சுருட்டிவிடலாம் என்று தோனி மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் 6 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரசன்ன ஜயவர்தனவும் சங்கக்காரவும் அபாரமாக விளையாடினர். ஜயவர்தன அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 32 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். அவரும் ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிவதைக் கண்ட சங்கக்கரா அணியை சரிவிலிருந்து மீட்க நங்கூரமிட்டார்.

மிகவும் நிதானமாக விளையாடிய அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 21 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆட்டநேர இறுதியில் சங்கக்கார 133 ஓட்டங்களுடனும், குலசேகர 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இறுதிநாள் ஆட்டம் நேற்று நடந்தது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்கிற நிலையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அபாரமாகப் பந்து வீசினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சங்கக்கார ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த யாரும் நிலைத்து நின்று ஆடாததால், இலங்கை அணி 309 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் சகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *