Tuesday, August 3, 2021

மாற்றுச் சிந்தனைக்கு வழிவிடுமா துருப்பிடித்த தமிழ்த் தேசியம். : யூட் ரட்ணசிங்கம்

Mahinda Rajaparksa and Sarath Fonsekaமீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல், தமிழ்பேசும் மக்கள் தம் வாக்குமூலம் பேசவேண்டிய நேரம், எதிர்த்தரப்பிலே இரண்டு இனவாத அரசியலின் பிரதிநிதிகள். இவர்கள் தமிழ்பேசும் மக்களின் அரசியல் எதிரிகள் மட்டுமல்ல மக்களைக் கொன்று குவித்த இரு கொலைகாரர்கள்.

சிங்களத் தேசிய இனவாதத்துக்கும் தமிழ்த் தேசிய இனவாதத்துக்கும் இடையில் நடந்த கொடூரமான போரில் செத்து மடிந்தன ஏதுமறியா அப்பாவி உயிர்கள். அதை முன்னின்று நடாத்தியவர்களும் வேடிக்கை பார்த்தவர்களுமே இன்று களமாட காத்திருக்கின்ற காவல் தெய்வங்கள். ஜனநாயகம் தத்தெடுத்த தவப்புதல்வர்கள். இவர்கள் ஜனாதிபதியாக வேண்டுமென்று களம் இறங்கியிருக்கிறார்கள்.

1) இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
2) இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

இவர்கள் இருவரையும் தராசிலே போட்டால் தராசின் முள் எந்தப் பக்கமும் சாயாது. (பகுத்தறிவு இல்லாவிட்டாலும் அந்தமுள் தன் பண்பிலிருந்து மாறாது) களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவில்லாது நிலை தடுமாறி நிற்கிறார்கள்.

போர்க்களத்திலே சந்தித்த பெரும் சவால்களையெல்லாம் முறியடித்து வெற்றி கொண்டவர் என்ற வீராப்புடன் சரத் பொன்சேகாவும், போர் சூழ்ந்த வேளையில் எத்தனையோ அரசியல் சவால்களையெல்லாம் எதிர் கொண்டு இந்தப் போரை வென்று முடித்தவர் என்று உரிமை கோரும் மகிந்தாவும் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்களாகக் காணப்படுகிறார்கள். பெரும்பான்மை இனத்தின் வாக்குகள் இரண்டாக பிரிந்து போகும் நிலை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்ற வேளை வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மீண்டுமொருமுறை களத்திற்காக காத்து நிற்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது வாக்கெடுப்புக்கு போகவேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கூறுகின்றனர். (அதாவது 50% க்கு குறைவான வாக்குகளைப் பெற்றால் எந்த ஒரு நபரும் ஜனாதிபதியாக முடியாது. ஜனாதிபதியாக வேண்டுமாயின் 50%க்கு அதிகமான வாக்குகள் பெறவேண்டும்)

களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ் பேசும் மக்களுக்கு இன்று ஓர் தலைமை இல்லை. இருக்கின்ற அத்தனை அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு கூறு மக்களையும் பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப் படுத்திக்கொண்டு நிற்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்கள் ஒரு பிரதிநிதியை நிறுத்தி வாக்குகளை ஓரிடத்தில் குவிப்பார்களேயானால் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு போகவேண்டிய நிலையை உருவாக்கும். அப்படியான நிலை உருவாகுமேயானால் அது சிங்கள பெரும்பான்மை மக்களுக்கும் அதன் அரசியல் தலைவர்களுக்கும் ஏன் உலகத்திற்குமே ஓர் செய்தியைச் சொல்லும்.

அந்த வேளையில் தமிழ் பேசும் மக்கள் தமது தரப்பின் அரசியல் கோஷங்களை முன் வைக்கக் கூடிய களநிலையைத் தோற்றுவிக்கும். ஓர் நிரந்தரமான தீர்வை நோக்கிய பேச்சை உருவாக்கக்கூடிய அரசியல் சூழலை உருவாக்கக்கூடும்.

இந்த அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளும் அரசியல் திராணி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உண்டா? சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களை ஒரு புள்ளியில் ஒன்று சேர்க்கும் அரசியல் திறனும் நேர்மையும் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் எதற்காக மீண்டும் மீண்டும் அதே குட்டையில் ஊறிய மட்டைகளை களத்திற்கு எடுத்து வருகிறார்கள்?

ஏன் இந்த தமிழ் அரசியல் சற்று வேறுபட்ட கோணத்தில் சிந்திக்கக் கூடாது? சம்பந்தனால் இதை செய்ய முடியாது என்று கண்டுகொண்டால் ஓர் மாற்று அரசியல் திட்டத்தை வகுப்பதுதானே ஓர் முஸ்லீம் பிரதிநிதியை நிறுத்தி அவரை ஆதரியுங்கள் என்று கேட்கலாம். ஓர் மலையக வேட்பாளரை கொண்டுவந்து நிறுத்தலாம். புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தாலும்கூட இன்றுவரை தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவை ஆதரிக்கலாம் அல்லது புலிகளை ஆதரிக்காத சிங்கள இடதுசாரியான சிறிதுங்க ஜெயசூரியவை ஆதரிக்கலாம்.  அதன்மூலம் அவர் கையைப் பலப்படுத்தலாம், சிங்கள மக்களின் முற்போக்கானவர்களின் ஆதரவை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள இது உதவலாம்.

எதற்காக மீண்டுமொருமுறை தமிழர் வாழ்வை பாழ்படுத்துகின்ற அரசியல் முன்னெடுப்புகளை செய்கிறார்கள்? தமிழர் வாழ்வில்  எத்தனை தடவைகள் இப்படியான வாய்ப்புகள் கிடைத்தன? தமிழர் வாழ்வை தமதாக்கிக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தம் மக்களின் வாழ்வை வளப்படுத்த இப்படியான வாய்ப்புகளை பயன்படுத்தினார்களா?

தழிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் அதன் வரலாறு காணாத அழிவு வரையில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. புலிகளின் தலைமை தலைவரின் சுயநலபோக்கினால் இப்படிக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் குழப்பியடிப்பதிலும் வெளிநாட்டு சக்திகள் மத்தியில் நம்பிக்கையீனத்தை உருவாக்குவதிலும் குறியாக இருந்தார்களே தவிர கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதையும் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் ஸ்திரத்தையும் கொண்டிருக்கவில்லை.

தற்போது நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை இன்றிருக்கும் நிலையிலிருந்து ஒருபடி மேலே கொண்டுசெல்ல இந்தத் தேர்தல் உதவுமா என்று பார்ப்பதும் அப்படி இருக்குமாயின் அதற்கான முயற்சிகளைச் செய்யத் தவறுவது தனது சுயநலம் கருதி பிரபாகரன் போராட்டத்தைச் சிதைத்தற்கு ஒப்பாகும்.

ஆகவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை குறைந்தபட்சம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாமா? அப்படியாயின் அது எவ்வாறு என்பதை சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

தமக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு தவறவிட்டு பழியை எதிரியின் மீது சுமத்துவதால் என்ன பயன்?

சர்வதேசம் இன்று இலங்கையின் அரசியலை உன்னிப்பாக அவதானித்து வருகின்ற வேளை ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு தள்ளப்படுமேயானால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோஷத்தை முன்வைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இது அமைந்துவிடக்கூடும்.

உலகம் முழுவதும் மாவீரர்தினம் கொண்டாடி மகிழ்வதைவிட உருப்படியான அரசியல் முன்னெடுப்புக்களை செய்வதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.

இன்று தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச்சட்டத்தை விட அதிகமானவற்றைத் தருவதாக முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்ற நேரம், தேர்தலின் வெற்றி யாருக்கு என்று தெரியாது இடைநடுவில் நின்றுபோகுமேயானால் அதன்பின் ஏற்படும் பேச்சுவார்த்தை மேசையில் பதின்மூன்று என்ன பதினைந்தே தருவோம் என்று கூறுகின்ற நிலையை உருவாக்கும் காலம் சிலவேளைகளில் உருவாகிவிடும்.

அந்த நிலையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் நகர்வுகளை உடனடியாக தொடங்க வேண்டிய காலத்தில் இன்று நாம் உள்ளோம். 35 ஆண்டு காலம் புஜத்தை நம்பி அரசியல் செய்த நாம் இனியாவது புத்திசாலித்தனமான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அந்த மக்களுக்கு ஓர் நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக் கூடிய ஓர் நிரந்தரத் தீர்வை நோக்கி செயல்படுவோம்.

இந்த தேர்தலைத் தவறவிட்டால் மீண்டும் 6 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டி வரும். ஏற்கனவே 60 ஆண்டு காலம் இப்படியே காத்திருந்து காத்திருந்து கழிந்தது.

கடந்த 60 ஆண்டு காலம் அகிம்சைவாதிகளும் ஆயுததாரிகளும் வைக்கோல் போரிலே படுத்திருக்கும் நன்றியுள்ள மிருகம் போல் நடந்து கொண்டார்கள். அதே அரசியலை அழியவிடாது பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக சிலர் இப்போதும் செயல்படுகிறார்கள்.

செயல்படுவது ஒன்றும் தப்பில்லை, இவர்களால் உருப்படியான எதையாவது தமிழ் பேசும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதுதான் அன்றும் இன்றும் இவர்கள் முன் விடைதேடி விரிந்து கிடக்கும் வினா.
 
தனிமனிதனில்  அரசியலைப் பார்ப்பதும் பின் தனி மனிதனை பழிவாங்கும் அரசியலை முன்னெடுப்பதுமாக தமிழ் அரசியல் நகர்ந்தது கடந்த காலங்களில். இப்போதும் இராணுவத் தளபதியைக் கொண்டுவந்து மகிந்தாவை பழிவாங்க வேண்டுமென்று பேச்சுத் தொடங்கிவிட்டது.

சரத்பொன்சேகா ஜனாதிபதியானால் அரசாட்சி இராணுவ மயப்படுத்தப்பட்டு முழுநாடே புத்தமயமாகும் என்று தெரிந்தும் கூட ஒரு தனி மனிதனை பழிவாங்கும் அரசியலுக்காக அலுவல் பார்க்கிறார்கள்.

“எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்” என்று அதற்கும் ஒரு விளக்கம். இம்முறையும் தமிழர் வாழ்வு சுடு சட்டியிலே இருந்து துள்ளி அடுப்பிலே வீழ்ந்த கதையாகவே முடியும். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

8 Comments

 • Appu hammy
  Appu hammy

  சிங்கள தேசத்து ஜனாதிபதியை சிங்கள மக்களே தெரிவு செய்ய வேண்டும், இதில் தமிழரின் தெரிவு தேவையே இல்லை, மாறி மாறி வரும் ஒவ்வொரு பேரினவாத பிரதிநிதிகளும் தாம் வெல்வதற்காக தமிழரின் காலைப் பிடிப்பதும் பின்னர் எட்டி உதைப்பதுமாகவே உள்ளனர். இதில் ஒருவரும் விதி விலக்காக இருந்ததுமில்லை இருக்கப்போவதுமில்லை. இப்போது நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தமிழருக்கு பேரவலத்தை தந்த இருவரும் யார் நவீன துட்டகைமுனு என்று சிங்கள மக்களின் தீர்ப்பிற்காகவே போட்டியிடுகின்றனர்.நவீன துட்டகைமுனுவை தெரிவு செய்ய வேண்டியது சிங்கள மக்களே அல்லாமல் தமிழர்கள் அல்ல

  Reply
 • Kulan
  Kulan

  பெரும்பான்மை மக்களின் வாக்குக்கள் 50க்கு 50 ஆக வருவற்கான சாத்தியங்கள் குறைவு. சிறுவித்தியாசம் இருக்கும் காரணம் இடதுசாரிகளும் களத்தில் நிற்கிறார்கள்: இதில் வேதனையான விடயம் என்னவென்றால் இந்த இருகட்சிகளும் ஒன்றாக நிற்காததே.

  இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முறைப்படி 51சதவீதமான வாக்குளைப் பெற்றால் மட்டுமே பதவியைப் பிடிக்கலாம். அதற்கான சந்தர்ப்பம் மிகமிகக் குறைவே. மகிந்து முஸ்லீம்கட்சிகளையும் தமிழ் கட்சிகளையும் தன்பக்கம் வரிந்து கெண்டதனால் சிங்களமக்களின் வாக்குகள் 50க்கு 50 ஆனால் மகிந்த வருவதற்கான சந்தர்பமே கூட உண்டு. அடுத்தது ஜே.வி பி இதனுடைய திருவிளையாடல்கள் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. உலகநாடுகள் உலகநாடுகள் என்று நாம் கதைப்பது இன்று பொருந்தாது. பனிப்போர் காலத்தில் தான் அப்படி இருந்தது. இன்று உலகநாடுகள் பிராந்திய வல்லரசுகளை எப்படி மடக்குவது அன்றேல் கைக்குள் போடுவது என்பது பற்றியே யோசிக்கின்றன. இன்னுமா புரியவில்லை இலங்கைத் தேர்தலில் இந்தியாவுக்கு என்ன வேலை? அடிக்கடி இவர்கள் அங்கு போய் வருகிறார்கள் என்றால் பிராந்திய வல்லரசுகளின் ஆர்வமும் பங்களிப்பும் முக்கியம் பெறவில்லையா? நாம் பரந்து சிந்திக்க வேண்டிய நிலையிலேயே உள்ளோம். இன்று நாம் மையப்பகுதியில் இருக்கிறோம் என்ற ஒரு மாயை எம்மிடையே இருந்தாலும் இடையில் விளையாடும் சக்திகளை நாம் கருத்தில் கொள்வது மிக முக்கியம். தனிய இந்தியாவையும் அமெரிக்காவையும் மட்டும் கணக்குப் போடாதீர்கள். அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் இந்தியாவுடன் சேர்ந்து வேலைசெய்வது என்பது பெரிய பிரச்சனையான விடயமில்லை. இந்தத் தேர்தலில் போட்டியிடுவது மகிந்தவும் சரத்துமல்ல. தொழிலாளர் காங்கிரஸ் முஸ்லீங்கள் தமிழர்கள் முக்கியமான பலவெளி நாடுகள் காரணங்கள் பல.இதைத் தொடர்ந்து விபரித்துக் கொண்ட போனால் பெரிய கட்டுரையாகவே விரிந்து விடும்.

  Reply
 • ravi
  ravi

  குலன் வாக்களிக்கப் போவது பிராந்திய வல்லரசுகளோ அமெரிக்காவோ இந்தியாவோ அல்ல என்பதை கருத்தில் கொள்க. பந்து எமது பக்கமே உள்ளது.

  Reply
 • Kulan
  Kulan

  ரவி: //குலன் வாக்களிக்கப் போவது பிராந்திய வல்லரசுகளோ அமெரிக்காவோ இந்தியாவோ அல்ல என்பதை கருத்தில் கொள்க. பந்து எமது பக்கமே உள்ளது.// நிச்சயமாக இவர்கள் அல்ல இவர்களின் உள்ளீடு தலையீடுகள் பலம் பலவீனங்கள் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுத்துரைக்க முடியுமா? பலதடவை பந்து எமது கையில்தால் இருந்தது. சரியாக விளையாடினோமா? புலிகளின் கையில் பந்து இருக்கவில்லை என்று சொல்லப்போகிறீர்களா?1/4 பங்கு சனத்தொகையுடைய தமிழர்களின் கையில் எதிர்கட்சி என்ற பந்து கிடைத்துவே சரியாக விளையாடவில்லையே. பந்து எமது பக்கம் இருந்தால் எதிரி கோல் அடிப்பதற்கான சாந்தியம் அதிகம் என்று தானே அர்த்தம்(பகிடி). பந்து கால்களிலோ கைகளிலோ இருந்தாலும் சரியாக விளையாடாத வரை தோல்வி எமது பக்கம் தான். கோலடிக்க வேண்டிய பந்துகளை நாம் இழந்திருக்கிறோம் என்பதை வரலாறு சொல்லும்.

  Reply
 • Jeya
  Jeya

  மேற்கு உலகம் கிழக்கு உலகம் நாம் மையப்பகுதியில் நிற்கிறோம் இத அப்பு மோனே ராசா என்னையும் கொஞசம் கவனி என்கிற கிழவிக்கு தெரியாது வாக்கு போடப்போறது அந்த கிழவிதான்

  Reply
 • Kusumpu
  Kusumpu

  அப்புகாமி என்ன எங்கை இருக்கிறீர்? தமிழீழம் நந்திக்கடலினுள் கரைந்தது தெரியாதோ? எங்கோ இருந்து எழும்பி வந்து சிங்களதேசம் தமிழ்தேசம் என்கிறீர். தமிழீழமும் உங்கள் தலைவனும் போய் சேர்ந்திட்டினம் ஐயோ

  Reply
 • nallurkanthan
  nallurkanthan

  I have read some comments made by our brothers.There are many factual mistakes.Appuhamy tells sinhalese government came to power because of the support given by the Tamil people and parties then went against them.I tell you the truth.Tamil parties always told the people we are not aupporting sinhalese parties.But one thing.Our tamil parties tamil congress and Federal they had secret connections and only supported a government in 1965-UNP govt.Mr.Thiruchelvam became minister of Local govt, mr.Sivasithamparam became deputy speaker.Tamil eaders always supported UNP.Please study histroy and write.It is very unfortunate many Tamils dont know the real history.

  Reply
 • பல்லி
  பல்லி

  //கோலடிக்க வேண்டிய பந்துகளை நாம் இழந்திருக்கிறோம் என்பதை வரலாறு சொல்லும்.//
  மிக சரியான விளக்கம்; அதே போல் பந்து என சொல்லியிருப்பதால் என்ன பந்து என நான் சொல்லவில்லை என்பதால் கட்டுரையாளர் சற்று விபரமானவர் போல் தெரிகிறது, இருப்பினும் கால்பந்தாட்டத்துக்கான விளக்கம் வந்தாச்சு, கிரிக்கட் எனில் போல் கிடைத்தவுடன் கொண்டு வீட்டுக்கு வரபடாது,அதைதான் இன்று வரை தமிழ் தலமைகள் செய்கின்றன, அதுக்கும் ஒருபடிமேலே புலிகள் பறந்து வரும் பந்தை கூட யாரையும் பிடிக்க அனுமதிக்கவில்லை,அதனாலேயே எதிரி பல ஓட்டங்களை எடுத்த வரலாறும் தமிழருக்கு உண்டு; சரி கைபந்தாண்டம் எனில் பந்து எமது கையில் வரும் போது பிடிக்க நினைக்க கூடாது,ஆனால் நாமோ வரும் பந்துகள் எல்லாவற்றையும் எலியின் சேமிப்புபோல் அனைத்தையும் பங்கரில் கொண்டுபோய் போட்டுவிட்டு பந்து எமது கையில் என்றால் ஆட்டம் முடிந்து விடுமா என்ன; அதோடு கால்பந்தாட்டமாயின் பந்து எமது பக்கத்தில் இருக்கும் போது மிக நிதானமாக பாதுகாவலர் இருக்க வேண்டும்,(அரசியல்) ஆனால் நாம் மக்களை பாதுகவலராக்கி விட்டு விளையாட்டு மைதானத்தை தாண்டி கோல் போடுகிறோம் என பீலா விட்டதால், எதிரி அரங்கத்தில் தடையின்றி பல கோல்களை போட்டு தள்ளிவிட்டான், ஆக மொத்தத்தில் எமது கையில் பந்தென்ன, பரிசென்ன எல்லாமே சின்னபிள்ளை விளையாட்டு போல் இருக்கு;

  Reply