அம்பாறை மாவட்டத்தில் பெருமழை; வெள்ளம்; மக்கள் இடம்பெயர்வு – பரீட்சை நிலையங்களும் நீரில்

rain2.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் இடை விடாத அடைமழை காரணமாக கரையோரப் பிரதேச தாழ் நிலங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக 41800 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களினால் அம்பாறை அரச அதிபர் காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 6300 குடும்பங்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5150 குடும்பங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 4505 குடும்பங்களும, காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 3200 குடும்பங்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6100 குடும்பங்களும், பதியதலாவ பிரதேச செயலாளர் பிரிவில் 2700 குடும்பங்களும் வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவில் 4750 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அம்பாறை மேலதிக அரச அதிபர் அசங்க அபயவர்த்தன தெரிவித்தார். தொடர்ந்து இம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதனால் இடம்பெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் வெள்ள நீரினால் நிரம்பியுள்ளன. பிரபல பாடசாலைகளான கல்முனை ஸாகிறாக் கல்லூரி, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, பொத்துவில் மத்திய கல்லூரி, சம்மாந்துறை, வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.

இதன் காரணமாக க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு மேற்படி பரீட்சை மண்டபங்களாக பாடசாலைகளை பயன்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அதிபர்களும், மேற்பார்வையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *