2009ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இப்பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடை பெறுகிறது. நாடு முழுவதும் 4098 பரீட்சை நிலையங்களில் 5 இலட்சத்து 56 ஆயிரத்து 714 பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைக்கு சகல பரீட்சார்த்திகளும் காலை 8.00 மணிக்கு சமுகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.
பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளோ அல்லது பரீட்சை மண்டபத்தினுள் ஒழுக்கக் கேடான முறையில் நடந்துகொண்ட பரீட்சார்த்திகளோ எக்காரணம் கொண்டும் தொடர்ந்தும் பரீட்சைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதி அட்டை ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய, பரீட்சை திணைக்களம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள ஏதேனும் ஆளடையாள அட்டையை உடன் எடுத்துவர வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
11ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் இப்பரீட்சைக்கு இடம்பெயர்ந்தோர், நிவாரணக் கிராமங்கள் நீங்கலாக, 5 இலட்சத்து 45 ஆயிரத்து 132 பரீட்சார்த்திகள் 4040 பரீட்சை நிலையங்களில் தோற்றுகின்றனர். இவர்களில் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 875 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர்