ரூபா 10 ஆயிரம் அரசாங்க ஊழியருக்கு சம்பள உயர்வு ஜெனரல் பொன்சேகா

pr-can.jpgஇந்நாட்டின் ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றவுடன் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதுடன், தனியார் துறை ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர், ஓய்வூதியர்களின் கஷ்டங்களைப் போக்கும் வகையில் நிவாரணமளிக்கக் கூடிய நடவடிக்கைகளையும் எடுப்பேனென எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியளித்தார்.

சிறீ கொத்தாவிலுள்ள ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் அதன் தொழிற்சங்கமான தேசிய சேவைகள் சங்கம் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு திரட்டும்முகமாக நடத்திய விசேட கூட்டத்தில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்;நாட்டின் ஜனநாயகத்துக்கு சக்தியளிப்பது தொழிற்சங்கங்களாகும். இந்நிலையில் தொழிற்சங்கங்களின் செயற்பாட்டுக்கு அரச பலம் பிரயோகிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. யுத்த வெற்றியை காண்பித்தே தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்கள் தடுக்கப்பட்டன. எனவே தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து ஜனநாயகத்தை உருவாக்கவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

அத்துடன் நாட்டிலுள்ள ஊழல் மோசடிகளை ஒழித்து நீதியையும் சமாதானத்தையும் உருவாக்கி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி சிறந்ததொரு நாட்டை எதிர்காலத்திடம் கையளிப்பதே எனது கடமை. நான் தொடர்ந்து இரு வருடங்களுக்கு அரச உயர் அதிகாரியாக 600 பேரின் பாதுகாப்புடனும் 25 வாகனங்களுடனும் சுக போகமாக வாழ்ந்திருக்க முடியும். யுத்தம் முடிவடைந்த நிலையில் நாட்டை முன்கொண்டு செல்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதுபோல் தமிழ் மக்கள் முகாம்களில் கஷ்டத்தின் மத்தியில் வாழ்கையில் இயல்பு வாழ்க்கையைக் கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டே அரசியலுக்கு வந்துள்ளேன். நான் பதவியேற்றதும் சுகபோகங்களை அனுபவிக்கப் போவதில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை எதிர்கால சந்ததியிடம் கையளிப்பேன். எனது அதிகாரங்களைப் பாராளுமன்றத்திடம் கையளித்து மக்கள் அரசை உருவாக்குவேன். அதேவேளை, நாடு ஜனநாயக முறையில் செயற்படுகின்றதா என்பதைப் பார்த்து நடவடிக்கையெடுக்குமுகமாகக் பாராளுமன்றத்தின் மூலம் எனக்கு வழங்கப்படும் அதிகாரத்தைக் கொண்டு நடவடிக்கையெடுப்பேன்.

நான் அரச சேவையில் 40 வருட காலம் பணியாற்றியுள்ளேன். அதிக காலம் இராணுவத்தில் பணியாற்றியவன் என்பதனால் இராணுவம், பொலிஸ் மற்றும் அரச சேவையிலுள்ள அரசியலை இல்லாதொழித்து ஊழியரின் உரிமையை வழங்குவேன். குறிப்பாக பொலிஸ் சேவையிலுள்ள அரசியலை இல்லாதொழித்து அதன் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்பட வழிவகுத்து நாட்டில் நீதியை ஏற்படுத்த சிறந்ததொரு எதிர்காலத்தை நாட்டில் ஏற்படுத்துவேன். இதற்கான பணியையே நான் பொறுப்பெடுத்துள்ளேன்.அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினைக்கு கண்ணீர்ப் புகையே பதிலளிக்கப்படுகின்ற நிலையில் அவர்களது பிரச்சினை பட்டதாரிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களது குடும்பத்துக்கு சக்தியளிப்பேன். இதற்கு நீங்கள் எனக்கு சக்தியளிப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *