கடந்த வாரம் 5ம்தேதி புதிய ஜனநாயகக்கட்சியின்(NDP) சார்பில் Scarborough- Rouge River (ஒட்டாவா மத்திய அரசின்) நாடாளுமன்றத் தொகுதிக்காக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக செல்வி ராதிகா சிற்சபேசன் அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
05.12.2009 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு Loblaws (Community Room), Scarborough Town Centre, 1775 Brimley இல் புதிய ஜனநாயகக் கட்சியின்(NDP) Scarborough / Rouge River Riding Association அங்கத்தவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் எதிர்வரும் தேர்தலில் Scarborough- Rouge River தொகுதியில் போட்டியிடுவதற்கான புதிய வேட்பாளரை நியமனம் செய்வதற்கான வேட்பாளர் நியமனக் கூட்டமாகவே NDP கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது நியமனம் முன்மொழியப் பட்டபோது Scarborough / Rouge River Riding Association நியமனக் கூட்டத்திற்கு வந்திருந்த அங்கத்தவர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரவளித்தனர். இறுதியில் சபையோரால் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட அத்தீர்மானம் வழிமொழியப்பட்டு நிறைவேறியது.
மேற்படி இந்நியமனக் கூட்டத்திற்கு எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான திரு ராம் சிவதாசன் தலைமை தாங்கியிருந்தார்.
மற்றும் மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina), மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) ஆகியோரும் இக்கூட்டத்திற்கு சமூகமளித்து ராதிகாவுக்கான ஆதரவு உரைகளை வழங்கியிருந்தனர். விரைவில் கனடிய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாகப் பேசப்படுகின்றது. அவ்வாறான வேளையில் இளம் தலைமுறையைச் சேர்ந்த துடிப்பான தமிழ் பெண்மணி ஒருவர் தேர்தல் அரசியலுக்குத் தன்னைத் தயார்படுத்துகிறார். பெருமளவு தமிழர்கள் வாழும் இத்தொகுதியில் அடுத்துவரும் தேர்தல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கலாம்.