ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க இலங்கை கலைஞர்கள் சங்கம் தீர்மானம்

arti.jpgஜனாதி பதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்கவிருப்பதாக இலங்கை கலைஞர்கள் சங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தகவல் ஊடக அமைச்சில் நேற்றுக் காலை ஒலி ஒளி நிபுணத்துவ கலந்துரையாடல் எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கப் போவதாக கலைஞர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.

திரைப்படத் தயாரிப்பாளர்களான சுமித்ரா பீரிஸ், டக்ளஸ் சிறிவர்தன, ரோஹன வீரசிங்க, சோமரத்ன திசாநாயக்க நடிகர்களான மாலினி பொன்சேகா, ரவீந்திர ரன்தெனிய, ஜெக்சன் அந்தனி, பாடகி நீலா விக்கிரமசிங்க அறிவிப்பாளர் ரேனுக்கா பாலசூரிய ஆகியோர் ஏனைய கலைஞர்கள் சார்பில் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டிலுள்ள கலைஞர்கள் நாட்டை மிகவும் நேசிப்பவர்கள். பொதுமக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தேசத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கு சிறந்த தலைவர் ஒருவரை தெரிவு செய்ய பொதுமக்களை வழிகாட்ட வேண்டியது எமது கடமையாகுமென நடிகர் ரவீந்திர ரன்தெனிய தெரிவித்தார். மேலும், திரையுலகில் எனக்கு 40 வருட அனுபவம் உண்டு.

அரசியலிலும் சிறிது உண்டு. கடந்த 30 வருட காலமாக இருந்து வந்த மரண பயம் இப்போது இல்லையென்றால் அதற்குக் காரணம் எமது ஜனாதிபதி தான். ஏன் அவரே தொடர்ந்து நாட்டை ஆட்ச செய்யக் கூடாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

சோமரத்ன திசாநாயக்க கூறுகையில், சிலர் நாம் ஜனாதிபதியை பந்தம் பிடிப்பதாக கூறுகின்றனர். நாம் போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்துவதற்காகவோ குற்றச் செயல்களை புரிவதற்காகவோ பந்தம் பிடிக்கவில்லை.

எமது பரம்பரைக்கு நாட்டு மக்களுக்கு அவர்களது எதிர்காலத்தை சரியானதாக தெரிவு செய்து கொள்வதற்காகவே நமது இந்தச் செயற்பாடுகள் அமைந்துள்ளதால் அதையிட்டு நாம் பெருமையடைகிறோம் என்றார்.

யுத்தம் முடிவடைந்து ஆறு மாதங்களே ஆகின்றது. இன்னும் சற்று பொறுமையாக விருப்போம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை தொடர்ந்து நல்வழியில் இட்டுச் செல்வாரென்ற நம்பிக்கையுண்டு. அவருக்கு ஆட்சி செய்வதற்காக மேலும் ஒரு அவகாசத்தை வழங்கிப் பார்ப்போமென மாலினி பொன்சேகா தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *