பதுளை நமுனுகுல பிரதேசத்திலுள்ள நல்ல மலை கிராம சேவகர் பிரிவிலிருக்கும் ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இம்மண்சரிவு காரணமாக 35 தோட்டக் குடியிருப்புக்களில் வசித்து வந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார நேற்றுத் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடி யிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்தி ருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இம்மண்சரிவு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை இடம்பெற் றுள்ளது என்றும் அவர் கூறினார்.