பல் கலைக்கழகக் கல்வியை முடக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட வெள்ளையறிக்கை யுகத்தை மாற்றி உயர்கல்வித்துறையை சர்வதேசத்துக்கு நிகரானதாக முன்னெடுக்க அரசாங்கத்துக்கு முடிந்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து கல்விமான்களின் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கல்விமான்களின் பங்களிப்பு பெரும்பலமாக அமையுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், விரிவுரையாளர்கள், கல்வி மற்றும் கல்வி சாரா அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
அமைச்சர்களான பேராசிரியர் விஷ்வா வர்ணபால, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பந்துல குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்த தாவது:- பூரண சுதந்திரமடைந்துள்ள நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய முக்கிய தேவையாகவுள்ளது. அத்துடன் கல்விமான்கள் அச்சுறுத்தப்பட்ட காலங்கள் போலல்லாது கல்விமான்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய உணர்வை இல்லாதொழிக்க சில சக்திகள் முற்பட்ட போது, அதற்கெதி ராக நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். அதேபோன்று உயர் கல்வியென்பது ஒரு சாராருக்கு மட்டுமே உரித்தானது என்ற நோக்கில் நாம் ஒருபோதும் செயற்படவில்லை. சிலர் இக்காலகட்டத்தில் தார்மீக சமுதாயம் பற்றிப் பேசியபோதும் நாடு பற்றிய சிந்தனை அவர்களுக்கு இருக்கவில்லை. நாட்டின் இன்றைய சூழலை கருத்திற் கொண்டு கல்விமான்கள் மிகுந்த தெளிவோடு செயற்படுவது முக்கியம். கல்விமான்களுக்கு விலங்கிட்டு அவர்களின் கருத்துக்களை அடக்க ஒருபோதும் எவருக்கும் இடமளிக்க முடியாது.
புலிகள் பெருமளவிலான கல்விமான்களை அச்சுறுத்தியும் படுகொலை செய்துமுள்ளனர். வடக்கு, கிழக்கு கல்விமான்களுக்கு புலிகளே பெரும் அச்சுறுத்தலாக விளங்கினர். அதனைப் பற்றி நான் மேலும் விபரிக்க வேண்டிய அவசியமில்லை. கல்விமான்கள் பல்வேறு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். எனினும் நாடு என்று வரும்போது சகலரும் ஒன்றித்த கருத்துடன் செயற்படுவது அவசியம். நாட்டின் உயர் கல்வித்துறையை மேம்படுத்துவதில் நாம் எப்போதும் முன்னின்று செயற்பட்டுள்ளோம். அதேபோன்று இலவசக் கல்விக்கும் நாம் முக்கியத்துவமளித்துள்ளோம்.