பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் கட் அவுட்களையும் வேட்பு மனு தாக்கல் செய்யும் தினமான 17 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
தனது சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட் அவுட்களை உடனடியாக அகற்றி முன் உதாரணமாக செயற்படுமாறும் ஜனாதிபதி தன்னிடம் கேட்டுக் கொண்டதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார். தேர்தல் சட்ட விதிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்ததாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, பொலிஸ் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில்,
1981 ஆம் ஆண்டு தேர்தல் விதிமுறையின் 15 வது பிரிவுக்கு அமைய பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட் அவுட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் இவை காட்சிக்கு வைக்கப்படக் கூடாதென தேர்தல் சட்டம் கூறுகிறது. அந்த திகதிக்கு பின்னர் இவை பலாத்காரமாக அகற்றப்படும்.
இதற்கமைய உடனடியாக இவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலிருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும்.