வட கொரியாவிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்ட விமானமானது இலங்கையை நோக்கிப் பயணம் செய்த விமானமெனத் தெரிவிக்கப்பட்டதை இலங்கை நிராகரித்துள்ளது.அந்த விமானம் இலங்கைக்கு வரவிருந்தது அல்ல என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்லவை மேற்கோள்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது.
வடகொரியாவிலிருந்து இலங்கைக்குச் செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக தாய்லாந்தில் தரையிறங்கிய விமானம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் சந்தேகத்தில் அந்த விமானத்தில் தேடுதல் நடத்தப்பட்டபோது பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகவும் தாய்லாந்து அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தடுத்து வைக்கப்பட்ட விமானத்தின் விமானிகள் தாங்கள் இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறியிருக்க கூடும் எனவும் தாங்கள் உண்மையில் செல்லும் இடத்தை மறைப்பதற்காக அவ்வாறு கூறியிருக்கக்கூடும் எனவும் சிலர் நம்புகின்றனர்.
இதேவேளை, இந்த விமானத்தின் பணியாளர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை தாய்லாந்து அதிகாரிகள் தாக்கல் செய்வார்கள் என்று அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் கூறியதாக ராய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்தது. அதேசமயம், விமானம் எங்கு நோக்கிப் பயணம் செய்தது என்பது பற்றி இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்று அந்தப் பேச்சாளர் கூறியுள்ளார்.
35 தொன் ஆயுதங்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் தொடர்பான தகவல்களை தாய்லாந்து அதிகாரிகளுக்கு அமெரிக்காவே வழங்கியதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ, பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விமானத்தின் 5 பணியாளர்களில் 4 பேர் கஸகஸ்தானையும் ஒருவர் பெலாரஸையும் சேர்ந்தவர்களாகும்.