சகல துறைகளையும் சார்ந்த பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
நாட்டின் தொழிலாளி வர்க்கம் எம் முடைனேயே உள்ளது. தொழிலாளர்களின் ஆதரவு இருக்கும் வரை எமது வெற்றி உறுதியே. மஹிந்த சிந்தனை மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றியுள்ளோம். ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பிளவுபடுத்தி துண்டாடுவதற்கு உடன்படிக்கை மேற்கொண்டார். நாம் தாய்நாட்டை மீட்டு அதனை ஐக்கியப்படுத்தியுள்ளோம். நாம் இந்நடவடிக்கைகளை நேர்மையானதாக முன்னெடுத்தோம்.
நாட்டை மீட்ட படையினருக்கு எதிராகப் பலர் விமர்சிக்கின்றனர். படையினருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது அதற்கு எதிராக நாம் குரல்கொடுத்தோம். படையினரை அகெளரவப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். தாய் நாட்டையோ நாட்டை மீட்டுத்தந்த படையிரையோ காட்டிக்கொடுக்க எவராலும் முடியாது. நாட்டின் தலைவர் என்றவகையில் நாட்டையும் படையினரையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்குள்ளது. அதேபோன்று சந்தர்ப்பவாதியாகி படையினரைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
எமது இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் இரட்சணிய சேனையில் பணிபுரியக்கூட தகுதியில்லாதவர்களென்றும் ஆணையிறவு என்று பாமன் கடைக்கும், கிளிநொச்சி என்று மதவாச்சிக்கும் சென்றதாகவும் பலர் பரிகாசம் செய்ததை யாரும் மறந்து விடமுடியாது. சமாதானம் மூலம் அபிவிருத்தியையும் அபிவிருத்தியின் மூலம் சமாதானத்தையும் ஈட்ட முடியும் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். அந்த நோக்கத்தில் செயற்பட்டே சகல மக்களும் இணைந்து வாழும் தாய்நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளோம். இதில் நாம் பெருமையடைய முடிகிறது.
யுத்தத்திற்கு முகங்கொடுத்து நாட்டைப் பாதுகாத்ததுடன் நாட்டில் பாரிய அபிவிருத்திகளையும் எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது. ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்களின் நிர்மாணம், மின் உற்பத்தித் திட்டங்கள், விமான நிலையம், நீர்ப்பாசனத்திட்டங்கள் என பல்வேறு அபிவிருத்திகளை எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது.
கிராமிய அபிவிருத்தித் திட்டமான ‘கமநெகும’ மற்றும் ‘மகநெகும’ பாதை அபிவிருத்தித்திட்டங்களையும் எம்மால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. அத்துடன் தொழிலாளர் வர்க்கத்தினரின் உரிமைகளை நாம் ஒருபோதும் நிராகரித்ததில்லை.
இந்த வகையில் அரச ஊழியர்களின் தொகையை 6 இலட்சத்திலிருந்து 12 இலட்சமாக எம்மால் அதிகரிக்க முடிந்துள்ளதுடன் நட்புறவு நாடுகளுடன் மேற்கொண்ட நடிவடிக்கைகளுக்கமைய எமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் எமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் போதும், எரிபொருளின் விலை 145 டொலராகி நாணயத்தின் பெறுமதி அதிகரித்த போதும் நாம் அவற்றை முறையாக நிர்வகித்தோம். நாம் மத்திய கிழக்கோடு தொடர்பு கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் எமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடிந்தது.
நாம் தொழிலாளர்கள் உரிமைகளைத் தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறோம். வங்கிகள் வீழ்ச்சியடைந்து கைத்தொழில் பேட்டைகள் மூடப்படும் நிலை வந்தபோதும் நாம் எமது தொழிலாளர்களைப் பாதுகாத்தோம். அவதூறுகள், பொய்ப்பிரசாரங்கள் சேறுபூசுதல்கள் இடம்பெறுகின்ற போதும் எமது கைகள் சுத்தமானவை. நாம் உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தலில் தொழிலாளிவர்க்கம் வழங்கிய ஆதரவினைப் போல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பூரண ஆதரவினை வழங்குவீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு எனவும் தெரிவித்தார்.