திருகோண மலைக்கு அப்பால் கடலில் ஏற்பட்டிருந்த ‘வார்ட்’ தாழமுக்க நிலை தணிந்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் கூறியது. இதனால் வடக்கு கிழக்கு வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் ஏற்பட்டிருந்த சூறாவளி அச்சுறுத்தல் தணிந்துள்ளதாகவும் ஆனால் இன்று வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் கூறியது.
திருகோணமலைக்கு அப்பால் 250 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் ஏற்பட்ட தாழமுக்க நிலையால் இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை முல்லைத்தீவு கடலில் இருந்து 60-70 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தாழமுக்க நிலை காணப்பட்டது. இந்த தாழமுக்க நிலை பலவீனமடைந்துள்ளபோதும் தாழமுக்க நிலை கரையை நெருங்குகையில் மீண்டும் பலமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனால் இன்று நண்பகல் 12.00 மணி வரை அவதானமாக இருக்குமாறு வடக்கு கிழக்கு மக்களுக்கு அறவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடராக பெய்துவரும் மழை காரணமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இதேவேளை இடிமின்னல் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகளில் மின்சார உபகரணங்கள் செயலிழந்துள்ளதாகவும் தெவிக்கப்படுகின்றது.