வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ‘வார்ட்’ புயல் சின்னம் வலுவிழுந்து இன்று இலங்கைக்கு மேல் திருகோணமலை ஊடாக மன்னார் குடாவை நோக்கி நகர்ந்து செல்கிறது.
காற்றழுத்தம் மிகவும் வலுவிழந்துள்ளதால் இலங்கையை கடந்து செல்வது தாமதமாகிறது. இதனால் வடக்கு கிழக்கு, வட மத்திய வடமேல் மாகாண, மத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இலங்கைக்கு மேல் மேகக் கூட்டங்கள் அதிகளவு காணப்படும். அத்துடன் மன்னார், வளைகுடா பகுதி வடக்கு கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கிறது. முதலில் தமிழகத்தின் நாகப்பட்டினம் கரையை இலக்காகக் கொண்டு நகர்ந்த வார்ட் புயல் சின்னம் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து. பின்னர் இலங்கைக்கு கிழக்கே திருகோணமலையை நோக்கி நகரத் தொடங்கியது.
நேற்று முன்தினம் இலங்கை கரையை அண்மித்தது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டால் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று இலங்கையை கடந்து சென்று விடும். எனினும் தற்போதைய நிலவரப்படி மிகவும் குறைந்த வேகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து காணப்படுவதால் மெதுவாகவே நகர்ந்து செல்கிறது. வடக்கு, கிழக்கு வட மத்திய பகுதிகளில் கன மழை பெய்தாலும் ஏனைய பகுதிகளில் காலநிலை மந்தமாக காணப்படுவதுடன் இடைக்கிடை மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.