‘வேட்புமனுத் தாக்கல் நாளை; கொழும்பில் விசேட போ.வ. ஏற்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினமான நாளை 17ஆம் திகதி காலை 9.00 மணி முதல் தேர்தல் திணை க்களம் அமைந்துள்ள ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் திணைக்களம் அமைந்துள்ள சரண மாவத்தைப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுவதுடன் தேர்தல் ஆணையாளரின் அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்.

பொரளைச் சந்தி முதல் கொட்டா வீதியூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனநாயக்கா சந்தி முதல் பாராளுமன்ற பாதையூடாக வெலிக்கடை பொலிஸ் வரையி லான வீதி ஆகியன நாளை காலை 9.00 மணி முதல் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வுள்ளன. க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை க்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கரு தியே காலை 9.00 மணிக்குப் பின்னர் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் முடிந்த வரையில் நாளை நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாளை காலை 9.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து ஒழுங்குகள் குறித்த ஒத்திகையொன்று இன்று 16ஆம் திகதி கலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினத்தன்று மேற்குறிப்பிடப்பட்ட வீதிகளைப் பயன்படுத்தாது மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி வேட்பாளரும் அவரது இரண்டு பிரதிநிதிகளும், அவருடன் மேலும் 10 பேர் மட்டுமே சரண மாவத்தையூடாக அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுடன் வரும் ஆதரவாளர்களுக்கு வாகன தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வந்து பின்னர் திரும்பிச் செல்லும் வரையில் இந்த போக்குவரத்து ஏற்பாடு அமுலில் இருக்கும் என்றும் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.

போக்குவரத்து பிரிவின் உதவி பொலிஸ் மா அதிபர் லக்கி பீரிஸ் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து வரைபடங்கள் மூலம் விளக்கினார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *